ரூ.1,000-க்கு மேல் மின் கட்டணம் ஆன்லைனில் கட்டச்சொல்வது சரியா?


ரூ.1,000-க்கு மேல் மின் கட்டணம் ஆன்லைனில் கட்டச்சொல்வது சரியா?
x

ரூ.1,000-க்கு மேல் மின் கட்டணம் ஆன்லைனில் கட்டச்சொல்வது சரியா? என்று பொதுமக்கள் கருத்து தொிவித்துள்ளனா்.

கடலூர்

`எத்தனை நாளா சொல்கிறேன், கடைசி தேதி வரைக்கும் இருக்காதீங்கனு, ரீடிங் எடுத்த உடனேயே போய் பணத்தை கட்டுங்க, கட்டுங்கன்னு சொன்னா கேட்டாத்தானே!'

`நம்ம வீட்டுக்கு கரண்ட் பில் கட்ட இன்றைக்குத்தான் கடைசி நாளு, சாயந்திரத்துக்கு உள்ள பணத்தை கட்டலைனா, பியூசை புடுங்கிட்டு போய்விடுவாங்க, பிறகு இருட்டுலதான் கிடக்கணும். புரியாத மனுஷனா இருக்கிறாரே!'

இப்படி பல இல்லங்களில் இல்லத்தரசிகள் கணவன்மார்களை கடிந்துகொள்வதைக் கேட்டு இருக்க முடியும். முன்பு எல்லாம் கரண்ட் பில் கட்டுவதாக இருந்தால் மின்சார வாரிய அலுவலகங்களில் உள்ள கவுண்ட்டர்களில் போய்தான் பணம் கட்ட வேண்டும். ஆன்லைன் முறை வந்த பிறகு அதிக மின்சாரம் பயன்படுத்தும் தொழிற்சாலைகள் மற்றும் வசதி படைத்தவர்கள் ரூ.5 ஆயிரத்துக்கு மேல் பில் வந்தால் ஆன்லைனில் செலுத்த வாரியம் அறிவுறுத்தியது.

ஆன்லைனில் கட்ட வேண்டும்

அதன்படி தொழிற்சாலைகள் மற்றும் வசதி படைத்தவர்கள் அதைப்பின்பற்றி வந்தனர். இதில் படித்த சிலர் எவ்வளவு ரூபாய் கரண்ட் பில் வந்தாலும் கவுண்ட்டர்களுக்கு செல்லாமல் வீட்டில் இருந்தப்படி ஆன்லைனிலேயே பணத்தைக் கட்டி வந்தனர். இதற்கிடையில் கடந்த ஆண்டு ரூ.2 ஆயிரத்துக்கு மேல் கரண்ட் பில் கட்டுபவர்கள் ஆன்லைனில்தான் கட்ட வேண்டும் என்று வாரியம் அறிவுறுத்தியது. இதனையும் பலர் பின்பற்றி வந்தனர்.

இந்த நிலையில் தற்போது ரூ.1,000 பில் வந்தாலே ஆன்லைனில்தான் கட்டவேண்டிய நிலை உருவாகி இருக்கிறது. இது பற்றி பொதுமக்களிடம் கருத்து கேட்காமல் நடைமுறைப்படுத்தக் கூடாது என்று மின் வாரிய ஒழுங்குமுறை ஆணையம், தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு அறிவுறுத்தி உள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள், மின்சார வாரிய அதிகாரிகள் தங்களது கருத்துகளை தெரிவித்து இருக்கிறார்கள். அதன் விவரம் வருமாறு:-

'பேடிஎம்' வசதி தேவை

தமிழ்நாடு மின்சார வாரிய என்ஜினீயர் யூனியன் பொது பொருளாளர் கே.கல்யாணசுந்தரம் கூறும்போது, 'ஆன்லைன் மூலம் கரண்ட் பில் கட்டுவது என்பது ஒரு நல்ல திட்டம்தான். பொதுமக்கள் தேவை இல்லாமல் நீண்ட வரிசையில் நிற்க வேண்டியதில்லை. சர்வர் பிரச்சினை காரணமாக காலதாமதம் ஏற்பட்டால் அதற்காக தேவையில்லாமல் ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்ய வேண்டியதில்லை. ஊழியர்களுக்கும் பொதுமக்கள் கட்டிய பணத்தை வங்கியில் செலுத்தும் போது ஏற்படும் பிரச்சினைகளும் தவிர்க்கப்படும். நகரப்பகுதிகளில் இதற்கு எந்த பிரச்சினையும் ஏற்படாது. கிராமப்பகுதிகளில் உள்ளவர்கள் ஆன்லைன் என்றால் தேவை இல்லாமல் ஒரு முகவரை சந்திக்க வேண்டும். அவர்களுக்கு கரண்ட் பில்லுடன் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற சூழல் ஏற்படும். அதேபோல், தனியார் வங்கிகளில் கடைசி தேதியில் பணத்தை செலுத்தும் போது, அது வாரியத்தின் கணக்கிற்கு வருவதற்கு ஒரு நாள் ஆகிவிடுகிறது. வாரிய அலுவலகத்தில் பணம் கட்டியதற்கான சான்று இல்லாததால், தேவையில்லாமல் மின்துண்டிப்பு போன்ற விரும்பத்தகாத நிகழ்வுகளும் ஏற்படுகின்றன.

கவுண்ட்டர்களில் ஏ.டி.எம். கார்டுகளை தேய்த்து பணம் பெறும் வசதி மட்டுமே இருக்கிறது. ஆனால் சாதாரண தள்ளுவண்டி இட்லி கடையில் இருப்பது போன்ற 'பேடிஎம்' போன்ற வசதிகள் இன்னும் வாரியத்திற்குள் வரவில்லை. கவுண்ட்டர்களில் ஊழியர்கள் தட்டுப்பாடால் பிரச்சினைகள் ஏற்படுவதில்லை, மாறாக சர்வர் பிரச்சினையால் காலதாமதம் ஏற்படும் போதுதான் சிக்கல்கள் ஏற்படுகின்றன. எனவே கவுண்ட்டர்களில் பேடிஎம் உள்ளிட்ட நவீன வசதிகளை கொண்டு வருவதுடன், சர்வர் மற்றும் இணையத்தள வசதிகளை வலுப்படுத்த வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் பொதுமக்கள் தானாகவே ஆன்லைனை தேடிச்சென்று விடுவார்கள்' என்றார்.

பணம் வசூலிக்க மின்கணக்கீட்டாளர்

நுகர்வோர் மன்றத்தின் (சிட்டிசன் கன்ஸ்யூமர் அன்ட் சிவிக் ஆக்ஸன் குரூப்) முதுநிலை ஆய்வாளர் கே.விஷ்ணு மோகன் ராவ் கூறும் போது, 'கவுண்ட்டர்களில் பணத்தை கையாள்வதில் ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் காசோலைகள் கையாள்வது போன்ற பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக ஆன்லைன் முறையில் கரண்ட் பில் கட்டும் முறை அறிவிக்கப்பட்டு இருக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக வாரியத்திற்கு உடனடியாக பணம் கிடைக்க வேண்டும் என்றால் ஆன்லைன் என்பதுதான் சரியாக இருக்கும். ஆனால் இந்த முறை நகரப்பகுதிகளில் அமல்படுத்துவதில் எந்த பிரச்சினையும் இருக்காது. ஆனால் கிராமப்பகுதிகளில் உள்ள விவசாயிகள் மற்றும் பாமரமக்கள் என பலதரப்பட்ட மின்சார நுகர்வோர்களால் ஆன்லைனில் பணம் செலுத்த வாய்ப்பு இல்லை. அதேபோல் மூத்த குடிமக்களாலும் ஆன்லைனில் பணம் செலுத்த முடியாது என்பதால் அவர்கள் பிறரை நாடிச் செல்ல வேண்டியிருக்கும். இவர்களுக்கு சலுகை அளிக்கும் வகையில் மின்சாரம் கணக்கிட வருபவர்களையே பணம் வசூலிக்கவும் அறிவுறுத்தலாம்' என்றார்.

திருப்தி

கடலூர் மஞ்சக்குப்பம் மின்வாரிய அலுவலகத்திற்கு மின் கட்டணம் செலுத்த வந்த இல்லத்தரசி அபிராமி கூறுகையில், மின் கட்டணம் ரூ.1000-க்கு மேல் வந்தால் ஆன்லைனில் கட்ட வேண்டும் என்ற நடைமுறை விவரம் தெரிந்தவர்களுக்கு பிரச்சினை இல்லை. ஆனால் கிராமப்புற மக்களுக்கு இது பற்றி தெரியாது. அவர்களுக்கு மின்வாரிய அலுவலகத்தில் வந்து மின் கட்டணத்தை செலுத்தினால் தான் திருப்தி கிடைக்கும். சில நேரங்களில் ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்தும் போது, சர்வர் பிரச்சினை என்று காரணம் கூறும் நிலை உள்ளது. அதேபோல் இணையதள மையத்திற்கு சென்று மின் கட்டணம் செலுத்த, கூடுதல் தொகை செலவிட வேண்டிய நிலை உள்ளது. இதை தவிர்க்க மின் அலுவலகத்திலேயே மின் கட்டணத்தை செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

கமிஷன்

சேத்தியாத்தோப்பு அள்ளூர் ராமகிருஷ்ணன் கூறும்போது, ரூ.1000-க்கு மேல் மின் கட்டணம் வந்தால், ஆன்லைன் மூலம் கட்ட வேண்டும் என மின்சாரத்துறை அறிவுறுத்தி வருகிறது. ஸ்மார்ட் போன் மூலம் எல்லோராலும் வங்கி கணக்கு வைத்து மின் கட்டணத்தை செலுத்த முடியாது. நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு வேண்டுமானால் சரியாக இருக்கும். கிராமப்புற மக்களுக்கு இந்த நடைமுறை சரி வராது. தனியார் இணையதள சேவை மையத்திற்கு சென்றால், மின் கட்டணத்தை செலுத்தி, அவர்களுக்கு தனியாக கமிஷனாக ரூ.30 செலுத்த வேண்டும். அதேவேளை மின்சார அலுவலகத்திற்கு சென்றால், அதற்கான கட்டணத்தை மட்டும் செலுத்தி விட்டு வரலாம். ஆகவே பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இந்த திட்டத்தை கைவிட வேண்டும். ஏற்கனவே மின் கட்டண உயர்வால் பாதிக்கப்பட்டு வரும் மக்களுக்கு, இது மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றார்.

வரவேற்பு

விருத்தாசலம் மணிபாலன் கூறுகையில், மின்சார கட்டணம் ரூ.1000-க்கு மேல் வந்தால் ஆன்லைன் மூலம் கட்டும் முறையை கொண்டு வருவதை வரவேற்கிறேன். தமிழ்நாட்டில் பல துறைகள் டிஜிட்டல் மயமாகி வருகின்றன. ரேஷன் கார்டுகளும் ஸ்மார்ட் அட்டைகள் ஆகி விட்டன. ஆன்லைனிலும் கூட மின்சார கட்டணத்தை செலுத்த எளிய வழி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டு உள்ளது.

ஆகவே இந்த திட்டத்தை தமிழக அரசு நடைமுறைபடுத்த வேண்டும். தற்போது 5 ஆயிரம் ரூபாய்க்கு மேல் மின் கட்டணம் இருந்தால் அதை மின்சார நிலையங்களில் செலுத்த முடியாது. ஆன்லைன் மூலம் மட்டுமே செலுத்த முடியும். இனிமேல் மின்சார கட்டணம் ரூ.1000-க்கு மேல் வந்தால் அதை ஆன்லைன் மூலம் மட்டுமே கட்டும் முறையை கொண்டு வர வேண்டும். மின்சார நிலையங்களில் கூடுதல் பணம் கையாள்வதை தவிர்க்கவும், மக்கள் வரிசையில் நிற்பதை தவிர்க்கவும் இந்த முறையை கொண்டு வர வேண்டும். இருப்பினும் முறையான ஆலோசனைக்கு பிறகு இந்த விதி நடைமுறைக்கு வருவது நல்லது என்றார்.

டிஜிட்டல் பணபரிவர்த்தனை

சிதம்பரத்தை சேர்ந்த சிவக்குமார் கூறுகையில், இப்போது அனைவரது கைகளிலும் ஸ்மார்ட் போன் உள்ளது. அதில் உலக விஷயங்களை அறிந்து கொள்கிறார்கள். வங்கி கணக்கும் தொடங்கி டிஜிட்டல் பணபரிவர்த்தனைக்கு மாறி விட்டார்கள். இந்த நிலையில் இது போன்ற மின் கட்டணத்தை ஆன்லைனில் கட்டுவது என்பது பெரிய விஷயமல்ல. இப்போது கிராமப்புறங்களிலும் படித்தவர்கள் அதிகம் பேர் உள்ளனர். வீட்டுக்கு ஒருவர் பள்ளி படிப்பை முடித்தவராக இருக்கிறார். ஆகவே ரூ.1000 மின் கட்டணத்தை ஆன்லைனில் கட்டுவது என்பது வரவேற்கக்கூடியதுதான் என்றார்.

வசதியாக இருக்கிறது

விருத்தாசலம் கார்கூடலை சேர்ந்த இல்லத்தரசி சந்திரா கூறுகையில், ஆன்லைன் என்பது தற்போதைய காலகட்டத்தில் எளிமையான முறையாகும். மின் கட்டணம் செலுத்துவதுற்கு, அதற்காக நேரம் ஒதுக்கி வரிசையில் நின்று பணம் செலுத்த வேண்டிய கட்டாயம் இல்லை. ஆன்லைன் முறை மக்களுக்கு வசதியாகவும் உள்ளது. ஆன்லைன் இருப்பதால், அவர்களுடைய கணக்கில் இருந்து 5 நிமிடத்தில் பணத்தை செலுத்துகிறார்கள். இணையதளத்தை கையாள தெரிந்தவர்களுக்கு இந்த முறை வசதியாக இருக்கும். ஆனால் அனுபவமற்றவர்கள் இணையதளத்தில் பணம் செலுத்துவதற்கு ரூ.1000-க்கு 10 ருபாய் என்று கட்டணம் செலுத்துகிறார்கள். இதை தவிர்க்க தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் என்றார்.


Next Story