பொன்னாலகரத்தில் சுங்கச்சாவடி திறக்க சாத்தியக்கூறுகள் உள்ளதா?


பொன்னாலகரத்தில் சுங்கச்சாவடி திறக்க சாத்தியக்கூறுகள் உள்ளதா?
x

மீண்டும் போராட்ட அறிவிப்பு எதிரொலியால் பொன்னாலகரத்தில் சுங்கச்சாவடி திறக்க சாத்தியக்கூறுகள் உள்ளதா? என்று அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

கடலூர்

கம்மாபுரம்:

விருத்தாசலம்-கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் நெய்வேலி அருகே உள்ள பொன்னாலகரத்தில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டது. இதனை திறக்க தமிழக வாழ்வுரிமை கட்சியினர் மற்றும் அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதே வேளையில் சில கோரிக்கைகளை நிறைவேற்றவும் வேண்டுகோள் விடுத்தனர்.

இது தொடர்பாக அதிகாரிகள் பலமுறை பேச்சுவார்த்தை கூட்டம் நடத்தினர். கடந்த 25-ந் தேதி விருத்தாசலம் கோட்டாட்சியர் தலைமையில் நடந்த இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை கூட்டத்தில் அடுத்த மாதம் (ஜூலை) 1-ந் தேதி சுங்கச்சாவடியை திறக்க முடிவு செய்யப்பட்டது.

போராட்ட அறிவிப்பு

ஆனால் இதற்கு தமிழக வாழ்வுரிமை கட்சியினர் மற்றும் அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். எங்களது கோரிக்கையை நிறைவேற்றாமல் சுங்கச்சாவடியை திறக்க விடமாட்டோம். மீறி திறந்தால் மீண்டும் பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என்று அறிவித்தனர். இதையடுத்து கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று மீண்டும் பேச்சுவார்த்தை நடந்தது.

அதில், வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத் துறை மற்றும் போராட்டக் குழுவினர் ஆகியோரை நேரில் சென்று கூட்டாய்வு நடத்தி சுங்கச்சாவடியை வருகிற 1-ந் தேதி திறக்க சாத்தியக்கூறுகள் உள்ளதா? என்று ஆய்வு செய்ய கோட்டாட்சியர் ராம்குமார் உத்தரவிட்டார்.

அதிகாரிகள் ஆய்வு

அதன்படி இன்று காலையில் கூட்டாய்வு நடந்தது. இதில் தாசில்தார் தனபதி, நெய்வேலி துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன், தேசிய நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் கவிதா, பொறியாளர்கள் சரவணன், செந்தில்குமார், தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட செயலாளர் அறிவழகன், விருத்தாசலம் நகர செயலாளர் பி.ஜி.சேகர், ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் மற்றும் அப்பகுதி்யை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு பொன்னாலகரம் சுங்கச்சாவடியில் இருந்து வீணங்கேணி வரை சென்று ஆய்வு செய்தனர்.

அப்போது சுங்கச்சாவடி எல்லைக்குட்பட்ட பகுதியில் புதிய சாலை அமைத்து தர வேண்டும், மந்தாரக்குப்பம் - வடலூர் இடையே சாலையோரங்களில் உள்ள மணலை அகற்றி தர வேண்டும், ஊத்தங்கால் உள்ளிட்ட இடங்களில் சாலை அகலப்படுத்தும் பணியை உடனடியாக முடித்து தர வேண்டும். ஊ.மங்கலம் அருகே உள்ள குறுகிய மேம்பாலத்தை அகற்றிவிட்டு புதிய மேம்பாலம் அமைத்து தர வேண்டும். இதனை நிறைவேற்றாவிட்டால் சுங்கச்சாவடியை திறக்க கூடாது என்று கட்சியினரும், முக்கிய பிரமுகர்களும் தெரிவித்தனர். அதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.


Next Story