`ஒரே நாடு ஒரே போலீஸ் சீருடை' சாத்தியமா?- ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரிகள், பொதுமக்கள் கருத்து


`ஒரே நாடு ஒரே போலீஸ் சீருடை சாத்தியமா?-  ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரிகள், பொதுமக்கள் கருத்து
x
தினத்தந்தி 4 Nov 2022 12:15 AM IST (Updated: 4 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்து இருக்கும் 'ஒரே நாடு ஒரே போலீஸ் சீருடை' என்ற யோசனை சாத்தியப்படுமா? என்பது குறித்து ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகள், பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தென்காசி

பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்து இருக்கும் 'ஒரே நாடு ஒரே போலீஸ் சீருடை' என்ற யோசனை சாத்தியப்படுமா? என்பது குறித்து ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகள், பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஒரே போலீஸ் சீருடை

மத்திய அரசு 'ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு' திட்டத்தை கடந்த 2019-ம் ஆண்டு அமல்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக, 'ஒரே நாடு ஒரே தேர்தல்', `ஒரே நாடு ஒரே மொழி', `ஒரே நாடு ஒரே வரி', `ஒரே நாடு ஒரே நுழைவுத்தேர்வு' என்ற வரிசையில் இப்போது 'ஒரே நாடு ஒரே காவல்துறை சீருடை' என்ற யோசனையையும் மத்திய அரசு முன் வைத்துள்ளது.

சில நாட்களுக்கு முன்பு நடந்த மாநில உள்துறை மந்திரிகளின் கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி பேசும்போது, "நாடு முழுவதும் போலீசாருக்கு ஒரே சீருடை வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும். இது சட்ட அமலாக்க பிரிவினருக்கு ஒரு பொதுவான அடையாளத்தை அளிக்கும். இதன்மூலம் காவல்துறை பணியாளர்களை எளிதில் அடையாளம் காண முடியும். 'ஒரே நாடு ஒரே போலீஸ் சீருடை' என்பதை உங்கள் கவனத்துக்கு ஒரு சிந்தனையாக முன் வைக்கிறேன்" என்றார்.

எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

பிரதமரின் இந்த யோசனைக்கு, எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. மத்திய அரசு தனது அதிகாரத்தை ஒரு குடைக்குள் கொண்டுவந்து, மாநிலங்களின் அதிகாரத்தை பறிக்க நினைப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. இந்தியாவில் காவல்துறை என்ற அமைப்பு 1861-ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் கொண்டு வரப்பட்டது. இந்திய காவல் பணி (ஐ.பி.எஸ்.) அதிகாரிகள் அணிய வேண்டிய சீருடை தொடர்பாக மத்திய அரசு விதிகளை உருவாக்கி உள்ளது.

அதே நேரத்தில், இந்திய காவல் பணியை சாராத போலீசாரின் சீருடைகளை அந்தந்த மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் தங்களுக்கு தகுந்தாற்போல வடிவமைத்துக் கொள்கின்றன.

நாடு சுதந்திரம் அடைந்த பின்னரும் தமிழகத்தில், போலீசாரின் சீருடைகளில் மாற்றம் கொண்டு வரப்படவில்லை. ஏட்டுகள், தலைமை ஏட்டுகள், சப்-இன்ஸ்பெக்டர்கள் வரை அரைக்கால் சட்டை மற்றும் நீளமான தொப்பி அணிந்து பணியாற்றி வந்தனர். 1973-ம் ஆண்டு தமிழகத்தில் போலீசாரின் சீருடையில் மாற்றம் கொண்டு வரப்பட்டது.

வேறுபாடு

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு போலீசார் காக்கி சீருடையும், போக்குவரத்து போலீசார் வெள்ளை நிற சட்டையும், காக்கி பேண்ட்டும் அணிந்து பணியாற்றி வருகின்றனர். மேற்கு வங்காளத்தில் போலீசார் வெள்ளை நிற சீருடையிலும், புதுச்சேரியில் காக்கி சீருடையுடன் சிவப்பு நிற தொப்பியும் அணிகிறார்கள். இதேபோல டெல்லி, உத்தரபிரதேசம், கர்நாடகா, மராட்டியம், ஜம்மு-காஷ்மீர் என ஒவ்வொரு மாநிலங்களிலும் போலீஸ் சீருடைகளில் வேறுபாடுகள் இருக்கின்றன.

மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், அந்தந்த மாநிலங்களில் நிலவும் தட்பவெப்ப நிலை, கலாசாரம், மாநில கொள்கை உள்ளிட்ட பல்வேறு சூழலுக்கு ஏற்ப போலீசாரின் சீருடைகளில் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளன.

இந்தநிலையில், மத்திய அரசு இப்போது முன் வைத்துள்ள 'ஒரே நாடு ஒரே போலீஸ் சீருடை' என்ற யோசனை சாத்தியமா? என்பது குறித்து தமிழகத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற மூத்த போலீஸ் அதிகாரிகளும், பொதுமக்களும் தங்களுடைய கருத்துகளை தெரிவித்து உள்ளனர்.

அதன் விவரம் வருமாறு:-

சாத்தியம் இல்லை

ஓய்வுபெற்ற போலீஸ் டி.ஜி.பி. மு.ரவி:-

மாநிலங்களுக்கு இடையே ஒரே மாதிரியான காக்கி சீருடை இருந்தாலும், நிற வேறுபாடு இருக்கிறது. அந்தந்த மாநிலங்களில் நிலவும் தட்பவெப்ப சூழலுக்கு ஏற்பதான் சீருடைகளை முடிவு செய்ய வேண்டும். தமிழகத்தை பொறுத்தமட்டில் வெயில் அதிகமாக இருக்கும். அதற்கு ஏற்றவாறு நமது சீருடை வடிவமைப்பு செய்யப்பட்டு இருக்கிறது. மலைப்பிரதேசமான ஊட்டியில் உள்ள நமது போலீசாருக்கு சீருடையில் மாற்றம் இருக்கிறது. நுண்ணறிவு பிரிவு, பொருளாதார குற்றப்பிரிவு உள்பட 3-ல் ஒரு பங்கு போலீசாருக்கு சீருடையே கிடையாது. ஒரே மாநிலத்தில் உள்ள போலீசார் இடையே சீருடையில் இத்தனை மாற்றம் இருக்கிறது. அப்படி இருக்கும்போது, அகில இந்திய அளவில் போலீசாருக்கு ஒரே சீருடை என்பது நடைமுறைக்கு சாத்தியமற்றது.

வேற்றுமையில் ஒற்றுமைதான் நம்முடைய பலம். அதன்படி, மாநிலங்களில் நிலவும் தட்பவெப்ப சூழலுக்கு ஏற்ப சீருடைகள் இருக்க வேண்டும்.

நடைமுறைக்கு பொருந்தாது

ஓய்வுபெற்ற போலீஸ் டி.ஜி.பி. திலகவதி:-

ஒரே நாடு ஒரே சீருடை என்பது சாத்தியப்படாத ஒன்று. ஒவ்வொரு மாநிலத்திலும் அவர்களின் தனித்தன்மையை காட்டுவதற்காக, போலீசாரின் சீருடையில் சிறிய மாற்றங்கள் செய்திருக்கிறார்கள். எல்லா மாநிலங்களும் ஒரே நாடு ஒரே போலீஸ் சீருடையை ஏற்றுக்கொள்ளாது. தமிழகத்தை எடுத்துக்கொண்டால், போக்குவரத்து போலீசார், இரவில் வாகன ஓட்டிகளுக்கு தெரியவேண்டும் என்பது உள்பட பாதுகாப்பு கருதி வெள்ளை நிற சீருடை அணிந்திருக்கிறார்கள். கமாண்டோ படைகள் வேறு சீருடையில் இருப்பார்கள். மாநில போலீசின் படைபிரிவுகளிலேயே வேறு வேறு சீருடைகள் இருக்கிறது.

இதேபோல மத்திய அரசு போலீஸ் பிரிவுகளிலும் ஒரே மாதிரியான சீருடை இல்லை. அதனால் மாநிலங்கள் ஒரே போலீஸ் சீருடை என்பதை ஏற்றுக்கொள்வது கடினம். அதனால் இது நடைமுறைக்கு பொருந்தாது என்று கருதுகிறேன்.

நல்ல திட்டம்

நெல்லை மாவட்டத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்:-

ஒரே நாடு ஒரே சீருடை, காவல்துறையினரின் மதிப்பை உயர்த்தும். மத்திய கட்டுப்பாடும் இன்றைய காவல்துறைக்கு தேவை. காவல் துறையினருக்கும், நாம் இந்திய காவல்துறை என்ற மிடுக்கு கிடைக்கும். இது பொதுமக்களுக்கும் நன்மை பயக்கும் நல்ல திட்டம் ஆகும்.

நெல்லையை சேர்ந்த பெண் போலீஸ் ஏட்டு ஷோபா:-

தற்போது போலீசாருக்கான சீருடைகளில் ஒருசில வேறுபாடுகள் மட்டுமே உள்ளன. புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது தான் சரியா? தவறா? என்பது தெரியவரும்.

தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் உடல் உழைப்பு தொழிலாளர் நலச்சங்க நிர்வாகி அமுஸ் முருகன்:-

பிரதமர் மோடி கொண்டு வந்துள்ள ஒரே நாடு, ஒரே போலீஸ் சீருடை திட்டம் வரவேற்கத்தக்கது. போலீசார் எந்த சீருடை அணிந்தாலும் அவர்களது பணி பொதுமக்களை பாதுகாப்பது என்ற ஒரே நோக்கமாகத்தான் இருக்கும். இதில் அவர்களுக்கு நாடு முழுவதும் ஒரே சீருடை வழங்குவது என்பது நல்ல விஷயம்தான்.

வரவேற்கத்தக்கது அல்ல

ஓய்வுபெற்ற வருமான வரித்துறை ஆணையாளர் உவரி வி.மகாலிங்கம்:-

போலீசாருக்கு இந்தியா முழுவதும் ஒரே சீருடை என்பது ஏற்புடைய கருத்து அல்ல. ஒரே சீருடை என்று இருந்தால் பொதுமக்களுக்கு போலீஸ் அதிகாரிகளை அவர்கள் எந்த மாநிலத்தை சேர்ந்த போலீஸ் என்று கண்டுபிடிப்பதில் குழப்பம் ஏற்படும். தற்போது நடைமுறையில் உள்ள சீருடைகளில் எந்த குழப்பமும் இல்லை. மாற்றம் நிச்சயம் அவசியம் என்றால் மட்டும் மாற்றம் செய்ய வேண்டும். நன்றாக நடைமுறையில் இருப்பதை மாற்றி புதிது புதிதாக கொண்டுவர வேண்டும் என்று நினைப்பது வரவேற்கத்தக்கது அல்ல.

சலுகைகள் கிடைக்கும்

தென்காசி சக்தி நகரை சேர்ந்த ஓய்வு பெற்ற போலீஸ் தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்:-

இந்தியா முழுவதும் காவல்துறையை பொறுத்தவரை ஒரே சட்டம் (ஐ.பி.சி., சி.ஆர்.பி.சி.) தான். பெரும்பாலான மாநிலங்களில் போலீசாருக்கு காக்கி உடை தான் சீருடையாக உள்ளது. மத்திய அரசின் திட்டத்தின் கீழ் இதுபோன்று நிலை மாறும் போது போலீசாருக்கு மேலும் சில சலுகைகள் கிடைப்பதற்கும் வாய்ப்பு உள்ளது. எனவே, ஒரே சீருடை இருக்கலாம்.

கீழப்பாவூரைச் சேர்ந்த அரிசி வியாபாரி முருகன்:-

பிரதமர் மோடி கூறிய ஒரே நாடு ஒரே போலீஸ் சீருடை திட்டத்தை வரவேற்கிறேன். உதாரணமாக நாம் வேறு மாநிலங்களுக்கு செல்கிறோம் என்றால் யார் போலீஸ் என்பதை உடனடியாக கண்டுபிடிக்க முடியும். ஒரு உதவிக்கு அணுக வேண்டுமென்றால் இந்த சீருடையை வைத்து இந்தியாவின் எந்த இடத்திற்கு சென்றாலும் இவர் தான் போலீஸ் அதிகாரி, போலீஸ்காரர் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு கூறினர்.


Next Story