ஒரே மேடையில் பொன்.ராதாகிருஷ்ணன் விவாதிக்க தயாரா?


ஒரே மேடையில் பொன்.ராதாகிருஷ்ணன் விவாதிக்க தயாரா?
x

குமரி மாவட்டத்தில் விதிகளுக்கு புறம்பாக குவாரிகள் செயல்படுவதாக குற்றம் சாட்டிய பொன்.ராதாகிருஷ்ணன் என்னுடன் ஒரே ேமடையில் விவாதிக்க தயாரா? என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் விதிகளுக்கு புறம்பாக குவாரிகள் செயல்படுவதாக குற்றம் சாட்டிய பொன்.ராதாகிருஷ்ணன் என்னுடன் ஒரே ேமடையில் விவாதிக்க தயாரா? என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.

அடிக்கல் நாட்டு விழா

நாகர்கோவில் கோணம் ஐ.டி.ஐ.யில் ரூ.3.73 கோடி மதிப்பில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. விழாவுக்கு கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார். தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு புதிய வகுப்பறை கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-

குமரி மாவட்டத்தில் கனிம வளம் குறித்து பொன்.ராதாகிருஷ்ணன் பொய்யான தகவல்களை தெரிவித்து வருகிறார். அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் 39 குவாரிகள் செயல்பட்டு வந்தது. தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு தற்போது 6 குவாரிகள் மட்டுமே செயல்பட்டு வருகிறது. விதிகளுக்கு புறம்பாக எந்த குவாரிகளும் செயல்படவில்லை. குமரி மாவட்டத்தில் எடுக்கப்படுகின்ற கனிம வளங்கள் அனைத்தும் குமரி மாவட்டத்திற்கு தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. வெளிமாநிலங்களுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்லப்படவில்லை. கனிமவளம் குறித்து பொன்.ராதாகிருஷ்ணன் என்னுடன் ஒரே மேடையில் பேச தயாராக உள்ளாரா? ஆனால் நான் தயாராக உள்ளேன். நேருக்கு நேர் விவாதிக்கவும் தயாராக இருக்கிறேன்.

பா.ஜனதா, அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட நான்கு வழிச் சாலை பணிகள் கிடப்பில் கிடந்தது. தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு மறுத்திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்ட அந்த பணிகள் தற்போது துரிதமாக நடைபெற்று வருகிறது. குமரி மாவட்டத்தில் கல்குவாரிகள் விதிமீறல் தொடர்பாக புகார் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

காகிதம் இல்லாமல்...

தமிழகத்தில் தொழில்நுட்பத்துறையை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே 200-க்கும் மேற்பட்ட திட்டங்கள் ஆன்லைன் மூலமாகவே வழங்கப்பட்டு வருகிறது. மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட திட்டங்களை விரைவில் ஆன்லைன் மூலமாக கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அரசின் மொத்த திட்டங்களும் ஆன்லைன் மூலமாக செயல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதே போல சட்டசபையில் காகிதம் இல்லாத பட்ஜெட் தாக்கல் செய்வது போல அனைத்து துறைகளிலும் காகிதம் இல்லாமல் திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். 35 டன் பேப்பர் இதற்கு செலவாகிறது. இதை குறைக்கும் போது சுற்றுச்சூழலும் மேம்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் துணை மேயர் மேரி பிரின்சி லதா, கவுன்சிலர் கலா ராணி, தி.மு.க. மாநகர செயலாளர் ஆனந்த், வேல்முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story