பக்தர்களுக்கு வழங்கப்படும் அன்னதானம் தரமாக உள்ளதா?
பழனியில், பக்தர்களுக்கு வழங்கப்படும் அன்னதானம் தரமாக உள்ளதா? என்று உணவு பாதுகாப்புத்துறையினர் ஆய்வு செய்தனர்.
பழனி முருகன் கோவிலில், பங்குனி உத்திர திருவிழா கடந்த மாதம் 29-ந்கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் தேரோட்டம் நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். மேலும் திருவிழாவையொட்டி திண்டுக்கல் மட்டுமின்றி திருப்பூர், ஈரோடு, சேலம், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் தீர்த்தக்காவடி எடுத்து பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். குறிப்பாக ஈரோடு மாவட்டம் கொடிமுடி காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக்காவடி எடுத்து வந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். இவ்வாறு வரும் பக்தர்களுக்கு பழனி நகரின் பல்வேறு இடங்களில் பல்வேறு தரப்பினர் அன்னதானம் வழங்குகின்றனர்.
இந்தநிலையில் பழனி வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சரவணகுமார், ஜாபர் சாதிக், முருகன், கண்ணன் ஆகியோர் பக்தர்களுக்கு வழங்கப்படும் அன்னதானத்தின் தரம் குறித்து நேற்று திடீர் ஆய்வு செய்தனர். பின்னர் அவர்கள் கூறுகையில், பழனியில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவோர் தரமான பொருட்களால் மட்டுமே உணவு தயாரிக்க வேண்டும். உணவில் செயற்கை வண்ணம், சுவையூட்டிகளை சேர்க்கக்கூடாது. உணவில் செயற்கை சுவையூட்டிகள் சேர்ப்பது கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். உணவு வீணாவதை தடுக்க தேவையான அளவு மட்டுமே சமைக்க வேண்டும் என்றனர்.