நாடு வளர்ச்சி அடைந்ததாக கூறுவதா?


நாடு வளர்ச்சி அடைந்ததாக கூறுவதா?
x
தினத்தந்தி 29 July 2023 1:15 AM IST (Updated: 29 July 2023 1:15 AM IST)
t-max-icont-min-icon

குடிநீர், கல்வி, மருத்துவத்தை வியாபாரமாக்கிவிட்டு நாடுவளர்ச்சி அடைந்ததாக கூறுவதா? என சீமான் கேள்வி எழுப்பினார்.

மதுரை

வாடிப்பட்டி

குடிநீர், கல்வி, மருத்துவத்தை வியாபாரமாக்கிவிட்டு நாடு வளர்ச்சி அடைந்ததாக கூறுவதா? என சீமான் கேள்வி எழுப்பினார்.

ஆலோசனை கூட்டம்

மதுரை பரவையில் நாம் தமிழர் கட்சி சார்பில் மதுரை கிழக்கு, வடக்கு, மத்தி, திருமங்கலம், மேலூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் ஆலோசனை கூட்டம் நடந்தது. கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்கி பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வருவதற்காக எம்.பிக்களை சந்தித்து வருகிறார். தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பா.ஜனதா. என்ன சாதனை செய்தது என்று அண்ணாமலை புத்தகம் வெளியிட உள்ளார்.

கல்வி, மருத்துவம், குடிநீர் என மூன்றையும் வியாபாரமாக மாற்றிவிட்டு நாடு வளர்ச்சி அடைந்துவிட்டது என்று எப்படி கூறமுடியும்? சத்துணவு கிடைக்காமல் குழந்தைகள் பட்டினி கிடக்கிறார்கள். குழந்தைகள் நலநிதி எங்கே போனது? ரூ.500, ரூ.1000 நோட்டை ஒரே நாளில் செல்லாமல் ஆக்கிவிட்டீர்கள். அதுதான் மோடியின் சாதனை. மீண்டும் ரூ.2000 நோட்டு அச்சடித்தீர்கள். அதுவும் செல்லாது என அறிவித்தாகிவிட்டது. நோட்டை முடக்கியதால் ஊழல், லஞ்சம், பயங்கரவாதம் ஒழியும் என பா.ஜனதா தலைவர்கள். சொல்கிறார்கள். அப்புறம் எப்படி அமலாக்கத்துறையினர் சோதனை நடத்துகிறார்கள்?

பயங்கரவாதம் ஒழிந்துவிட்டது என கூறிய பின்னரே புல்வாமா தாக்குதல் நடைபெற்றது. இந்தியா தலை நிமிர்ந்துவிட்டதா? இந்தியாவை கொடுத்தே கெடுத்து விட்டார்கள்.

மணிப்பூர் சம்பவம்

மணிப்பூர் கலவரத்தில் இரு பெண்களை பாலியல் வன்புணர்வு செய்து கொடுமை செய்துள்ளனர். இந்தியாவை நாசமாக்கிவிட்டார்கள். தமிழகத்தை மட்டும் பா.ஜனதா. எப்படி நிமிர்த்தும்?

மருத்துவ சிகிச்சை பெற வேண்டியதால் அண்ணாமலை யாத்திரையில் கலந்து கொள்ளவில்லை என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதாக அண்ணாமலையே கூறிவிட்டார்.

பீகார், உத்தபிரதேசத்திற்கு மட்டும் நிதியை மத்திய அரசு அதிகமாக தருகிறது. தமிழகத்திற்கு குறைத்தே தருகிறது. கோடநாடு கொலைச்சம்பவம் நடந்து இ்த்தனை நாட்கள் ஆகிவிட்டது. இன்னும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story