செல்போன் ஆதிக்கத்தால் காணாமல் போகிறதா டைரி?
விஞ்ஞானத்தின் அதிவேக பாய்ச்சலோடு பயணித்துக்கொண்டிருக்கிறது உலகம். இந்த உலகத்தில் புதிய புதிய கண்டுபிடிப்புகளோடு நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதன்காரணமாக நாம் பாரம்பரியமாக கடைபிடித்து வந்த வாழ்க்கை முறையில் பல மாற்றங்களை சந்தித்து வருகிறோம். அப்படி நம்மிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகிச்சென்று கொண்டிருக்கிறது டைரி. அதற்கு முக்கிய காரணமாக இருப்பது செல்போனின் ஆதிக்கம் என்றால் மிகையில்லை.
காலபெட்டகம்
டைரி என்ற சொல் லத்தீன் மொழியில் இருந்து பிறந்தது. 17-ம் நூற்றாண்டில் ஆங்கிலேயரான சாம்பல் பிப்ஸ் என்பவர் எழுதிய டைரி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. கடந்த காலங்களில் டைரிகளை கைகளில் வைத்திருப்பதே ஒரு கவுரவமாக பார்க்கப்பட்டது. ஒவ்வொரு நாளிலும் நாம் செய்த நல்லது, ெகட்டதை குறித்து வைத்துக்கொள்ளும் காலப்பெட்டகமாகவும் விளங்கியது. சிக்கலான நேரத்தில் எடுத்த முடிவுகள் பிற்கால சந்ததிக்கு எடுத்துச்சொல்லும் வழிகாட்டியாகவும், வருங்கால சந்ததியினருக்கு அது ஒரு வரலாற்று சுவடாகவும் விளங்கியது என்றால் மிகையாகாது.
அப்படிப்பட்ட டைரிகள் கடந்த காலங்களில் ஒரு பொக்கிஷம் போல் பார்க்கப்பட்டது. குறிப்பாக பல கொலை சம்பவங்களில் கூட ஒரு சாட்சியாக டைரி நின்று பலருக்கும் தண்டனைகளை வாங்கிக்கொடுத்திருக்கிறது.
டைரி என்ற உடன் வளவளப்பான அட்டையுடன் கூடியது என்று நினைக்க வேண்டாம். சாதாரண நோட்டில் கூட நாட்களை குறிப்பிட்டு எழுதுவதும் டைரிதான். டைரிகளில் குறியீடுகள் (கோடுவேர்டு) மூலமும் சிலர் எழுதுவது உண்டு. அதை எழுதியவர் படித்தால் மட்டுமே அந்த குறிப்புகளுக்கான அர்த்தம் புரியும். மற்றவர்களுக்கு சம்பந்தப்பட்டவர் என்ன எழுதி இருக்கிறார் என்பது தெரியாது. பிரபலமானவர்கள் தங்களது ரகசிய வாழ்க்கை தகவல்களை அப்படி எழுதி வைப்பது உண்டு. இப்படி டைரிக்கு என்று ஒரு நீண்ட வரலாறு உண்டு.
செல்போனில் பதிவிடும் முறை
ஆனால் இன்றைக்கு செல்போன், கணினி ஆகியவற்றின் வருகையால் டைரி எழுதும் பழக்கம் மெல்ல ெமல்ல மறைந்து கொண்டிருக்கிறது. டைரிகளில் எழுதுவதை பலரும் கணினிகளிலும், செல்போன்களிலும் குறிப்பேடாக பதிவு செய்யும் வழக்கத்தை வைத்துள்ளனர். ஆனால் அது பாதுகாப்பு இல்லாதது என்பதுதான் உண்மை. எனவே, டைரிக்கு நிகர் டைரிதான்.
இருந்தாலும் கொரோனா, காகிதத்தின் விலை ஏற்றம் போன்றவற்றால் டைரிகளின் விலை அதிகரித்துள்ளது. அதை வாங்குவோர் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதனால் டைரிகள் அச்சடிக்கப்பட்டு கடைகளில் அப்படியே தங்கள் வாழ்நாளை கழித்து விடுகிறது. தற்போது ஆன்மிக தகவல்களை எழுதிவைக்கவும், பொதுஅறிவு விவரங்களை எழுதி வைக்கவும், தொழில் கணக்கீடுகளை சேகரிக்கவும், பஞ்சாங்கத்துக்கும் டைரிகள் பயன்படுத்தப்படுகிறது.
ஒரு டைரிக்கு வாழ்நாள் ஒரு ஆண்டுதான். ஜனவரி மாதம் 1-ந் தேதி டைரி எழுதத்தொடங்குவார்கள். டிசம்பர் 31-ந் தேதியுடன் ஒரு வருட அனுபவத்துடன் முடித்து விடுவார்கள்.
அடுத்த ஆண்டு புது டைரி வாங்கி அதில் எழுத தொடங்குவார்கள். இன்றைக்கு புத்தாண்டு தொடங்கி விட்டது. புது டைரியில் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை எழுத தொடங்க வேண்டும்.
காலமாற்றத்தில் டைரி பயன்பாடு குறைந்து கொண்டிருக்கிறதா? அல்லது அதிகரித்திருக்கிறதா? என்பது குறித்து பொதுமக்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை பார்ப்போம்.
காகிதங்கள் ஏற்றுமதி
அரியலூரில் டைரி கடை நடத்தி வரும் இளங்கோவன்:- செல்போன், கணினி பயன்பாட்டிற்கு முன்பு மனிதனின் வாழ்க்கையில் பிரிக்க முடியாததாக விளங்கியது டைரி. குறிப்பாக புத்தாண்டு வந்துவிட்டாலே பொதுமக்கள் தங்களுக்கு பிரியமானவர்களுக்கு டைரி வழங்குவது வழக்கமாக இருந்தது. ஆனால் அந்த பழக்கம் தற்போது வெகுவாக குறைந்துவிட்டது. குறிப்பாக நல்ல நேரங்கள், விசேஷ நாட்கள் எதுவாக இருந்தாலும் டைரியை பார்த்து தெரிந்து கொள்வார்கள். ஆனால் தற்போது கையடக்க செல்போனில் பார்த்து தெரிந்து கொள்கிறார்கள். இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடம் எழுதும் பழக்கம் வெகுவாக குறைந்துவிட்டது. கடந்த ஆண்டு ரூ.300-க்கு விற்பனையான டைரி தற்போது 30 முதல் 35 சதவீதம் வரை விலையேறி விட்டது. டி.என்.பி.எல். மூலம் தயாரிக்கப்படும் காகிதங்கள் பெரும்பாலும் ஏற்றுமதிக்கு செல்வதால் விலை உயர்வுக்கு ஒரு காரணமாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டைரிகள் விற்ற காலம் மாறி தற்போது 200 டைரிகள் விற்பதே அரிதாகி விட்டது.
வாழ்த்து அட்டை
விக்கிரமங்கலம் அருகே காசாங்கோட்டை பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் மணிகண்டன்:- கணினி மற்றும் செல்போனில் பதிவு செய்து வைத்துக் கொள்ளும் வசதி இருப்பதால் டைரி எழுதும் பழக்கம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதனால் டைரி விற்பனை அடியோடு சரிந்து விட்டது. எவ்வளவு தான் நவீன காலத்திற்கு தகுந்தார் போல் நம்மை மாற்றிக் கொண்டாலும் தமது கைப்பட டைரி எழுதும் பழக்கம் என்பது தனித்தன்மை வாய்ந்தது தான். ஏற்கனவே வாழ்த்து அட்டைகள் மறைந்து விட்டது போல் டைரி எழுதும் பழக்கம் மறைந்து விடாமல் பாதுகாத்துக் கொள்வது நமது கடமையாகும்.
விதவிதமான டைரிகள்
உடையார்பாளையத்தை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவி லட்சதா:- புத்தாண்டு பிறந்துவிட்டால் விதவிதமான டைரிகள் அச்சடிக்கப்பட்டு கடைகளில் அலங்கார பொருள் போல் காட்சிப்படுத்தி இனிப்பு கடைகளில் மொய்க்கும் ஈக்கள் போல மக்கள் டைரிக்காக அலைவதும். சாமி படம், தலைவர்கள் படம், இயற்கை காட்சிகள் நிறைந்த படம் போன்ற வண்ண வண்ணமாக அச்சடிக்கப்பட்ட காலண்டர்கள் கடைகளில் வாங்க குவிந்த மக்கள் இன்று செல்போன், கம்யூட்டர் இருந்தால் போதும் என்ற நிலைக்கு மாறிவிட்டார்கள். இதனால் டைரி எழுதும் பழக்கம் குறைந்து அதன் விற்பனையும் சரிவடைந்துள்ளது.
பழைய நினைவுகள்
தா.பழூரை சேர்ந்த கார்த்தி:- கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பொதுமக்களிடத்தில் நாட்குறிப்பு எழுதும் பழக்கம் அதிகளவில் இருந்தது. ஸ்டேஷனரி கடைகளில் பல்வேறு வகையான அளவுகளில் டைரிகள் விற்பனையாகும். தற்போது நவீன செல்போன்கள் வரவு காரணமாக டைரி எழுதும் பழக்கம் பெருமளவில் குறைத்துவிட்டது. அரசு அலுவலக பணியிலும், தனியார் துறை முக்கிய பணிகளில் உள்ளவர்கள் மட்டுமே டைரி எழுதும் அவசியம் உள்ளவர்களாக இப்போதைய காலங்களில் உள்ளனர். மொபைல் போனில் பதிவு செய்து வைக்கக் கூடிய பதிவுகள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அழிந்து விட்டால் அதனை மீண்டும் பார்ப்பது இயலாத காரியம். மேலும், டைரியில் எழுதி வைத்ததை பார்க்கும் போது பழைய நினைவுகள் கண்கள் முன் பசுமையாக நிழலாடும். டைரி எழுதுவது மிக அழகான கலை. மீண்டும் மக்கள் மத்தியில் டைரி எழுதும் பழக்கம் வேகம் எடுக்க வேண்டும்.
டைரி விற்பனை குறைந்தது
பெரம்பலூர் கடைவீதி புத்தக கடை உரிமையாளர் பிரசன்ன வெங்கடேசன்:- கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை கடையில் டைரி விற்பனை ஜோராக நடைபெற்றது. கணினி, செல்போன் வருகையால் தற்போது டைரி விற்பனை முற்றிலும் குறைந்து விட்டது என்று சொல்லலாம். மேலும் பேப்பர் விலை உயர்ந்து விட்டதால் டைரி அச்சடிப்பு செலவும் அதிகரித்து விட்டது. ஆண்டுக்கு ஆண்டு டைரி விற்பனை குறைந்து கொண்டு தான் வருகிறது. குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் தற்போது டைரி எழுதும் பழக்கமே இல்லை. அவர்களுக்கு தெரிந்தது எல்லாம் செல்போனும், கணினியும் தான். மேலும் 50 வயதுக்கு மேற்பட்டவர்களில் சிலரிடமும், ஓய்வு பெற்ற அரசு அலுவலர்களில் சிலரிடமும் மட்டுமே டைரி எழுதும் பழக்கம் தற்போதும் இருந்து வருகிறது. மேலும், டைரி வாங்குபவர்களும் பிறருக்கு பரிசு அளிப்பதற்காக சம்பிரதாயத்துக்கு தான் வாங்குகிறார்களே தவிர தனது பயன்பாட்டுக்கு என்று யாரும் வாங்குவது இல்லை. இப்படியே சென்றால் வருங்காலத்தில் டைரி எழுதும் கலாசாரமே இல்லாமலே போய்விடும். பள்ளி, கல்லூரி மாணவ-மாணவர்களுக்கு டைரி எழுதும் பழக்கத்தை ஏற்படுத்த அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
செல்போனில் இணைய வசதி
பெரம்பலூர் வெங்கடேசபுரத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் அய்யப்பன்:- தற்போது செல்போனில் அனைத்து வசதிகளும் உள்ளதால் டைரி தேவைப்படுவதில்லை. அந்த அளவுக்கு செல்போனில் பல்வேறு தகவல்களை சேமித்து வைத்து கொள்ள முடிகிறது. செல்போனில் இணைய வசதி உள்ளதால் நமக்கு தேவையான தகவல்களை எந்த நேரத்திலும் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம். மேலும் சமூக வலைத்தளங்களால் பல்வேறு தகவல்களை உடனுக்குடன் பலருக்கு பகிர முடிகிறது. இதில் முகநூல் (பேஸ்புக்) தாம் பதிவிட்ட பதிவுகளை ஆண்டுதோறும் தவறாமல் நினைவுப்படுத்துகிறது. நம்முடைய பிறந்த நாள் தேதி, நண்பர்களுடைய பிறந்த நாள் தேதி மறந்தாலும் பேஸ்புக் மறக்காமல் நினைவுப்படுத்துகிறது. இதனால் இனிவரும் மாணவர்களுக்கு டைரி என்பது என்னவென்று தெரியாமல் போக கூட வாய்ப்புள்ளது. மேலும் டைரி இனி காட்சி பொருளாக பார்க்க முடியும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
புத்தகங்களாக மாறிய டைரிகள்
பிரபலமானவர்கள் தங்களது வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யங்களை எழுதி வைப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர். அப்படி எழுதிய டைரி குறிப்புகள் பலவும் புத்தகங்களாக வெளிவந்து உள்ளன. அந்த புத்தகங்கள் பலவும் வருங்கால சந்ததிகளுக்கு ஒரு வழிகாட்டியாக இருந்து உள்ளன.
மன அழுத்தம் குறையும்
*டைரி எழுதும் பழக்கம் இருந்தால் மன அழுத்தம், மனசோர்வு குறையும்.
*நமது உணர்ச்சிகளை டைரிகளில் எழுதும் போது அதன் பிரதிபலிப்பு அமைதியாக இருக்கும் போது தெரியும். மறுமுறை அப்படி உணர்ச்சிகள் ஏற்படாமல் தடுக்க முடியும்.
*யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாத ரகசியங்களை டைரியில் எழுதுவதன் மூலம் ஆறுதல் கிடைக்கும்.
*டைரி எழுதுவதன் மூலம் உங்களை பற்றி நீங்களே அறிந்து கொள்ள முடியும்.
*வருங்கால சந்ததிகளுக்கு உங்கள் டைரி வழிகாட்டியாக இருக்கும்.