'எண்ணும், எழுத்தும்' திட்டம் இலக்கை நோக்கிச் செல்கிறதா?
எண்ணும், எழுத்தும் திட்டம் குறித்து தேனி மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர்கள், பெற்றோர்கள் தங்களின் கருத்துகளை தெரிவித்தனர்.
கொரோனா நோய்த் தொற்று குறைந்தபோதிலும், அதனால் விளைந்த பாதிப்புகள் ஒவ்வொரு துறையிலும் மறைந்தே இருக்கத்தான் செய்கின்றன.
கற்றல் இடைவெளி
தொழில், கல்வி, சுகாதாரத்தில் அதன் தாக்கம் பெரிய அளவில் இருந்து வருவதை கடந்த ஓரிரு ஆண்டுகளாக நாம் அனுபவப்பூர்வமாக உணர்ந்து வருகிறோம். அதில் இருந்து மீள மத்திய, மாநில அரசுகளும் தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.
கல்வியைப் பொறுத்த அளவில் மாணவர்களின் கற்றல் செயல்பாடுகளில் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
அதிலும் ஆரம்பக் கல்வியை தொடங்கும் மாணவர்களின் கல்வித் திறனே அதிக அளவில் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதை பல்வேறு தரப்பிலான ஆய்வு முடிவுகள் எடுத்துக் காட்டுகின்றன.
பல குழந்தைகளுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம் போன்ற பாடங்களில் அடிப்படைகூட தெரியாத நிலை இருப்பது வேதனை அளிப்பதாக அவைகள் சுட்டிக்காட்டுகின்றன.
இதற்கு முக்கிய காரணம், கொரோனா காலத்தில் 19 மாதங்களாக நேரடி வகுப்புகள் நடத்த முடியாமல் போனதுதான். அதனால் 1-ம் வகுப்பு பாடங்கள் பற்றி முழுமையாக தெரியாமலேயே 2-ம் வகுப்பிற்கும், அதுபோல் 2-ம் வகுப்பைப் படிக்காமலே 3-ம் வகுப்புக்கும் குழந்தைகள் தாவி வந்திருக்கிறார்கள்.
இதனால் ஏற்பட்ட கற்றல் இடைவெளியால் முதல் மற்றும் இரண்டாம் வகுப்பு கல்வியின் பலன்களை குழந்தைகள் முழுமையாகப் பெறவில்லை.
எண்ணும் எழுத்தும் திட்டம்
இவ்வாறு கல்வியில் பாதிப்புக்கு உள்ளான குழந்தைகளின் கற்றல் இடைவெளியைச் சீர்செய்வது, கல்வித்துறையின் மிக முக்கிய கடமையாக இருக்கிறது.
அதற்காக உருவானதுதான், 'எண்ணும் எழுத்தும் திட்டம்'. 2022-23-ம் கல்வி ஆண்டு முதல் 3 ஆண்டுகளுக்கு இந்தத் திட்டத்தை அரசு முன்னெடுக்க இருக்கிறது.
எண்ணும் எழுத்தும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 13.6.2022 அன்று திருவள்ளூர் மாவட்டம், அழிஞ்சிவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தொடங்கி வைத்தார். அதன் பிறகு அந்தத் திட்டம் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் நடைமுறைக்கு வந்தது.
அதை செயல்படுத்த, தனியாக ஆசிரியர்களுக்குச் சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் ஆசிரியர் கையேடுகளும், பயிற்சி நூல்களும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (எஸ்.சி.இ.ஆர்.டி.) மூலம் வழங்கப்பட்டு இருக்கிறது.
அரும்பு, மொட்டு, மலர்...
குழந்தைகளின் கற்றல் இடைவெளியை அடையாளம் கண்டு அவர்களின் திறமைக்கு ஏற்ப கல்வி கற்பிக்கும் வகையில் அவர்கள், "அரும்பு, மொட்டு, மலர்" என்று 3 பிரிவுகளாக பிரிக்கப்படுகிறார்கள்.
அரும்பு என்பது படிக்கத் தெரியாத குழந்தைகளையும், மொட்டு என்பது கொஞ்சம் படிக்கத் தெரிந்த குழந்தைகளையும், மலர் என்பது நன்கு படிக்கத் தெரிந்த குழந்தைகளையும் குறிக்கிறது.
இதில் அரும்பு, மொட்டு வகையில் இருக்கும் குழந்தைகளை மலராக பூக்க வைக்க வேண்டும் என்பதே திட்டத்தின் ஒரே நோக்கம் ஆகும்.
ஆடல், பாடல், கதை சொல்லல்...
தமிழ், ஆங்கிலம், கணக்குப் பாடங்களை கற்றுக் கொடுக்கும் போது, குழந்தைகளின் கற்றலை மகிழ்ச்சியாக்கும் வகையில், எண்ணும், எழுத்தும் வகுப்பறையில் ஆடல், பாடல், கதை சொல்லல், வாசித்தல், செயல்பாடு, படைப்பு, பொம்மலாட்ட களங்கள் போன்ற நிகழ்வுகள் மூலம் அவர்களின் ஆர்வமும், ஈடுபாடும் ஊக்கப்படுத்தப்படுகின்றன.
இப்படியாக கடந்த 5 மாதங்களுக்கு மேல் கற்பிக்கப்பட்டு வரும் எண்ணும் எழுத்தும் திட்டம் குழந்தைகளின் கற்றல் இடைவெளியை சீர்செய்து இருக்கிறதா?.
2025-ம் ஆண்டுக்குள் 8 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளும் எழுத்தறிவும், எண்ணறிவும் பெறவேண்டும் என்ற அடிப்படையில் கொண்டுவரப்பட்ட இந்தத் திட்டத்தின் இலக்கு நிறைவேறி வருகிறதா? என்பது பற்றி தேனி மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர்கள், பெற்றோர்கள் தங்களின் கருத்துகளை தெரிவித்தனர். அதன் விவரம் வருமாறு:-
மனம் கவரும் வகுப்பறை
ஷீலா (ஆசிரியை, அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி, டி.பொம்மிநாயக்கன்பட்டி) :- எண்ணும் எழுத்தும் வகுப்பறை குழந்தைகளின் கற்றலை மகிழ்ச்சியாக்கும் வகையில் அமைந்து குழந்தைகளின் ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளது. குழந்தைகளுக்கு அவர்களின் தனித்திறனை கண்டறிய உதவுகிறது. குழந்தைகள் தங்கள் படைப்புத்திறனை உணர்ந்து பேசுதல், செயல்பாடுகள், கைவினை செயல்பாடுகள், எழுதுதல், பாடுதல், கதை கூறுதல் போன்ற செயல்பாடுகளை மேற்கொள்கின்றனர். தினமும் புதிய ஒன்றை கற்றுக் கொள்ள பள்ளிக்கு ஆர்வத்துடன் வருவதை காண முடிகிறது. தற்போது எண்ணும் எழுத்தும் மூலமாக அனைத்து அரசு பள்ளிகளிலும் எண்ணும் எழுத்தும் வகுப்பறை மாணவர்களின் மனம் கவரும் வகையிலும், கற்றல் திறனை தூண்டும் விதமாகவும் வகுப்பறை அமைந்துள்ளது.
இந்த வகுப்பறையில் அனைத்து மாணவர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. பயிற்சி புத்தகங்களில் பயிற்சிகள் மேற்கொள்ளும் போது மாணவர்கள் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்கின்றனர். வேகமாக கற்கும் மாணவர்கள் தங்கள் செயல்பாட்டை முடித்தவுடன் மெதுவாக கற்கும் மாணவர்களுக்கு உதவுகின்றனர். இதன் மூலம் அனைத்து மாணவர்களுக்கும் கற்றல் சிறப்பாக சென்றடைகிறது. குழந்தைகளிடம் நல்ல செயல்களைக் காண முடிகிறது. குழந்தைகள் அதிகம் கேள்விகள் கேட்கின்றனர். எழுதவும், படிக்கவும் மாணவர்களுக்கும் அதிகம் வாய்ப்புகள் அளிக்கப்படுகிறது. குழு செயல்பாடு, தனி செயல்பாடு மாணவர்களை மகிழ்ச்சியாக வைக்கிறது.
மாணவர்கள் உற்சாகம்
வாசுகி (ஆசிரியை, அரசு கள்ளர் தொடக்கப்பள்ளி, உப்புக்கோட்டை) :- 1 முதல் 3-ம் வகுப்பு வரையுள்ள மாணவ, மாணவிகளுக்கு எண்ணும் எழுத்தும் வகுப்பறை திட்டம் நல்ல பலனை கொடுக்கிறது. அரும்பு, மொட்டு, மலர் என்று 3 பிரிவுகள் இதில் உள்ளன. மாணவர்களின் கற்றல் திறனுக்கு ஏற்ப நிலைகள் மாறுபடுகிறது. கொரோனா கால கற்றல் பின்னடைவில், கற்பித்தலில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்யவும், கற்றுக் கொள்வதில் ஆர்வத்தை அதிகரிக்கவும் இது உதவியாக உள்ளது. எண்ணும், எழுத்தும் வகுப்பறையில் மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் இருக்கின்றனர். இதில் அதிக பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது.
ராஜநிவேதா (உப்புக்கோட்டை) :- எனது மகள் 1-ம் வகுப்பு படிக்கிறாள். எண்ணும் எழுத்தும் திட்டத்தால் பள்ளிக்கு ஆர்வத்துடன் சென்று வருகிறாள். புகைப்படங்கள், ஓவியங்கள், படங்கள், பாடல்கள் மூலம் பாடம் சொல்லிக் கொடுப்பதால் எளிதில் புரிந்து கொள்கிறாள். எனது குழந்தை ஆர்வத்துடன் படிப்பதையும், எழுதுவதையும் பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்திய தமிழக அரசுக்கு நன்றி.
செல்வக்கனி (தேனி) :- எனது மகன் 2-ம் வகுப்பு படிக்கிறான். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 1-ம் வகுப்பில் ஓரிரு மாதங்கள் தான் பள்ளிக்கு செல்ல முடிந்தது. கொரோனா ஊரடங்கு விடுமுறை காலத்தில் வீட்டில் விளையாடிக் கொண்டே இருந்ததால் 2-ம் வகுப்புக்கு சென்ற போதிலும் ஆர்வம் குறைவாக இருப்பது போல் தெரிந்தது. பள்ளியில் அளிக்கும் பயிற்சி, கற்பித்தல் காரணமாக தற்போது நன்றாக படிக்கிறான். மாணவர்கள் கற்றல் திறனை மேம்படுத்த அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகள் பாராட்டத்தக்கது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.