'எண்ணும், எழுத்தும்' திட்டம் இலக்கை நோக்கிச் செல்கிறதா?


தினத்தந்தி 13 Dec 2022 12:19 AM IST (Updated: 13 Dec 2022 12:21 AM IST)
t-max-icont-min-icon

'எண்ணும், எழுத்தும்' திட்டம் இலக்கை நோக்கிச் செல்கிறதா என ஆசிரியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

விருதுநகர்

கொரோனா நோய் தொற்று குறைந்தபோதிலும், அதனால் விளைந்த பாதிப்புகள் ஒவ்வொரு துறையிலும் மறைந்தே இருக்கத்தான் செய்கின்றன.

கற்றல் இடைவெளி

தொழில், கல்வி, சுகாதாரத்தில் அதன் தாக்கம் பெரிய அளவில் இருந்து வருவதை கடந்த ஓரிரு ஆண்டுகளாக நாம் அனுபவப்பூர்வமாக உணர்ந்து வருகிறோம். அதில் இருந்து மீள மத்திய, மாநில அரசுகளும் தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.

கல்வியைப் பொறுத்த அளவில் மாணவர்களின் கற்றல் செயல்பாடுகளில் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

அதிலும் ஆரம்பக்கல்வியை தொடங்கும் மாணவர்களின் கல்வித் திறனே அதிக அளவில் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதை பல்வேறு தரப்பிலான ஆய்வு முடிவுகள் எடுத்துக் காட்டுகின்றன.

பல குழந்தைகளுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம் போன்ற பாடங்களில் அடிப்படைகூட தெரியாத நிலை இருப்பது வேதனை அளிப்பதாக அவைகள் சுட்டிக்காட்டுகின்றன.

இதற்கு முக்கிய காரணம், கொரோனா காலத்தில் 19 மாதங்களாக நேரடி வகுப்புகள் நடத்த முடியாமல் போனதுதான். அதனால் 1-ம் வகுப்பு பாடங்கள் பற்றி முழுமையாக தெரியாமலேயே 2-ம் வகுப்பிற்கும், அதுபோல் 2-ம் வகுப்பைப் படிக்காமலே 3-ம் வகுப்புக்கும் குழந்தைகள் தாவி வந்திருக்கிறார்கள்.

இதனால் ஏற்பட்ட கற்றல் இடைவெளியால் முதல் மற்றும் இரண்டாம் வகுப்பு கல்வியின் பலன்களை குழந்தைகள் முழுமையாகப் பெறவில்லை.

எண்ணும் எழுத்தும் திட்டம்

இவ்வாறு கல்வியில் பாதிப்புக்கு உள்ளான குழந்தைகளின் கற்றல் இடைவெளியைச் சீர்செய்வது, கல்வித்துறையின் மிக முக்கிய கடமையாக இருக்கிறது.

அதற்காக உருவானதுதான், எண்ணும் எழுத்தும் திட்டம். 2022-23-ம் கல்வி ஆண்டு முதல் 3 ஆண்டுகளுக்கு இந்தத் திட்டத்தை அரசு முன்னெடுக்க இருக்கிறது.

எண்ணும் எழுத்தும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 13.6.2022 அன்று திருவள்ளூர் மாவட்டம், அழிஞ்சிவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தொடங்கி வைத்தார். அதன் பிறகு அந்தத் திட்டம் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் நடைமுறைக்கு வந்தது.

அதை செயல்படுத்த, தனியாக ஆசிரியர்களுக்குச் சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் ஆசிரியர் கையேடுகளும், பயிற்சி நூல்களும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (எஸ்.சி.இ.ஆர்.டி.) மூலம் வழங்கப்பட்டு இருக்கிறது.

அரும்பு, மொட்டு, மலர்...

குழந்தைகளின் கற்றல் இடைவெளியை அடையாளம் கண்டு அவர்களின் திறமைக்கு ஏற்ப கல்வி கற்பிக்கும் வகையில் அவர்கள், "அரும்பு, மொட்டு, மலர்" என்று 3 பிரிவுகளாக பிரிக்கப்படுகிறார்கள்.

அரும்பு என்பது படிக்கத் தெரியாத குழந்தைகளையும், மொட்டு என்பது கொஞ்சம் படிக்கத் தெரிந்த குழந்தைகளையும், மலர் என்பது நன்கு படிக்கத் தெரிந்த குழந்தைகளையும் குறிக்கிறது.

இதில் அரும்பு, மொட்டு வகையில் இருக்கும் குழந்தைகளை மலராக பூக்க வைக்க வேண்டும் என்பதே திட்டத்தின் ஒரே நோக்கம் ஆகும்.

ஆடல், பாடல், கதை சொல்லல்...

தமிழ், ஆங்கிலம், கணக்குப் பாடங்களை கற்றுக் கொடுக்கும் போது, குழந்தைகளின் கற்றலை மகிழ்ச்சியாக்கும் வகையில், எண்ணும், எழுத்தும் வகுப்பறையில் ஆடல், பாடல், கதை சொல்லல், வாசித்தல், செயல்பாடு, படைப்பு, பொம்மலாட்ட களங்கள் போன்ற நிகழ்வுகள் மூலம் அவர்களின் ஆர்வமும், ஈடுபாடும் ஊக்கப்படுத்தப்படுகின்றன.

இப்படியாக கடந்த 5 மாதங்களுக்கு மேல் கற்பிக்கப்பட்டு வரும் எண்ணும் எழுத்தும் திட்டம் குழந்தைகளின் கற்றல் இடைவெளியை சீர்செய்து இருக்கிறதா?.

2025-ம் ஆண்டுக்குள் 8 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளும் எழுத்தறிவும், எண்ணறிவும் பெறவேண்டும் என்ற அடிப்படையில் கொண்டுவரப்பட்ட இந்தத் திட்டத்தின் இலக்கு நிறைவேறி வருகிறதா? என்பது பற்றி ஆசிரியர்கள், பெற்றோர்களிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:-

நடன அசைவு

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர் பேச்சிமுத்து: எங்கள் பள்ளியில் 1 முதல் 3-ம் வகுப்பு வரை படிக்கும் 24 மாணவ, மாணவிகள் இந்த திட்டம் மூலம் பயன்பெற்று வருகிறார்கள். இந்த திட்டத்தின் படி பாடல்களை கற்பிக்கும் போது உரிய நடன அசைவுடன் கற்பிக்க அரசு வலியுறுத்தி உள்ள நிலையில் மாணவர்களும் தங்களது உடல் அசைவுகள் மூலம், நடனங்கள் மூலம் அந்த பாடல்களை நினைவுப்படுத்தி சரியான முறையில் ஒப்புவிக்கிறார்கள்.

இந்த திட்டத்தால் மாணவர்கள் 4-ம் வகுப்பு கல்வி கற்கும் போது அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

திருத்தங்கல் மைக்கேல்: எண்ணும், எழுத்தும் திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட பாடப்புத்தகங்களில் பல பயனுள்ள தகவல் இருக்கிறது. இதை மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் நிலையில் உள்ளனர். ஆனால் பாடங்கள் அதிக அளவில் இருப்பதாக மாணவர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

ஆசிரியர்களுக்கு பயிற்சி

மாநில கருத்தாளர் ஷர்மிளா:-

எண்ணும் எழுத்தும் திட்டம் விருதுநகர் மாவட்டத்திலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போதைய நிலையில் தொடக்கநிலை குழந்தைகள் எழுதுவதில் தான் சற்று சிரமப்படும் நிலை உள்ளது. அதற்கு ஆசிரியர்கள் உரிய பயிற்சி அளித்து வருகின்றனர். எனவே 3-ம் நிலை தொடங்குவதற்கு முன்பு அனைத்து பள்ளிகளிலும் தொடக்கநிலை வகுப்பு குழந்தைகள் எழுதுவதிலும் சிறந்து விடுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

தற்போதைய நிலையில் நான் மாநில கருத்தாளர்களாக உள்ளேன். அடுத்து மாவட்டத்தில் உள்ள 11 யூனியன்களிலும் தலா 2 கருத்தாளர்கள் வீதம் நியமிக்கப்பட்டுள்ளனர். கூடுதலாக ஒரு மாநில கருத்தாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஓ.கோவில்பட்டி யூனியன் நடுநிலைப்பள்ளி ஆசிரியை சாந்தி:-

எங்கள் பள்ளியில் 2 மற்றும் 3-ம் வகுப்பு குழந்தைகளுக்கு கற்பித்தல் பணியை மேற்கொண்டு வருகிறேன். அதிலும் ஆங்கில வழிக்கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது. கருத்தாளர்கள் எங்களுக்கு அறிவுறுத்தியதின் அடிப்படையில் பள்ளி குழந்தைகளுக்கு கற்பித்து வருகிறோம். நல்ல முன்னேற்றம் தெரிகிறது. தர நிலைகள் மூலம் மாணவர்களை கணித்து அவர்களுக்கு தேவையான பயிற்சி அளிக்கிறோம். தற்போது 2-ம் நிலை தேர்வு நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து 3-ம் நிலை பயிற்சி அளிக்கப்படும்.

சுலபமான முறை

ராஜபாளையத்தை சேர்ந்த மாணவியின் தாயார் சைலஜா:- எண்ணும், எழுத்தும் திட்டத்தின் மூலம் குழந்தைகள் மிகவும் திறமையாக செயல்படுகின்றனர். படிக்கும் போது மிகவும் ஆர்வமாக படிக்கின்றனர். எழுத்துக்கள் தெரியாத குழந்தைகளுக்கு சிறப்பு திட்டமாக படங்களாகவும், ஓவியங்களாகவும், பாடல்களாகவும் மிக சுலபமான முறையில் எடுத்துக் கூறி பாடம் நடத்துகிறார்கள்.

எளிய முறையில் சிறந்த எழுத்து பயிற்சி அளிக்கின்றனர். அனைத்து பாடங்களையும் இந்த எண்ணும், எழுத்தும் பயிற்சி மூலம் குழந்தைகளுக்கு மிக எளிதாக புரிந்து கொள்ளக்கூடிய பயிற்சி அளிக்கப்படுகிறது.

வரப்பிரசாதம்

வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை நளினா:-

எண்ணும், எழுத்தும் திட்டம் மாணவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். இந்த திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு இசை, நடனம் மூலமாக எழுத்துக்களை கற்பித்துக் கொடுக்கும் போது அவர்களுக்கு அந்த எழுத்து எளிதில் புரிந்து கொள்ளும் தன்மை உருவாகிறது, மேலும் படத்தை வைத்து மாணவர்களுக்கு கதையாக சொல்லிக் கொடுக்கும் பொழுது அந்த படத்தில் உள்ள எழுத்துக்களை மாணவர்கள் தாங்களாகவே கூறி எழுத்துக்களை கற்றுக் கொள்கின்றனர். விளையாட்டின் மூலமாக எழுத்துக்களை மீண்டும் அவர்களுக்கு நினைவூட்டப்படும் பொழுது ஞாபக சக்தி வளர்கிறது.

மண்குண்டம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியை மல்லிகா:-

மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டு மற்றும் பாட்டு, நடனத்துடன் சொல்லி கொடுப்பதால் எளிய முறையில் புரிகிறது. இதனால் படிப்பில் சோர்வு ஏற்படாமல் படிக்கின்றனர். பாட்டு மற்றும் நடனத்துக்காக துணைக்கருவிகள் தயார் செய்து பாடம் நடத்தப்படுகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story