ஓ.என்.ஜி.சி.க்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதா?


ஓ.என்.ஜி.சி.க்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதா?
x

காவிரி டெல்டாவில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஓ.என்.ஜி.சி.க்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதா? என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தௌிவுபடுத்த வேண்டும் என பி.ஆர்.பாண்டியன் கூறினார்.

திருவாரூர்

மன்னார்குடி;

காவிரி டெல்டாவில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஓ.என்.ஜி.சி.க்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதா? என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தௌிவுபடுத்த வேண்டும் என பி.ஆர்.பாண்டியன் கூறினார்.

கோரிக்கை மனு

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தாசில்தார் அலுவலகத்தில் உதவி கலெக்டர் வழிகாட்டுதலோடு பெரியகுடி கிணற்றில் இருந்து எரிவாயு எடுப்பதற்கு கலந்தாலோசனை கூட்டம் நேற்று மாலை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது.இது குறித்து தகவல் அறிந்த தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஓருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் நேற்று காலை மன்னார்குடி உதவி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து பெரியகுடி எரிவாயு கிணறு தொடர்பான கலந்தாலோசனை கூட்டத்தை நிறுத்த வேண்டும் என கூறி உதவி கலெக்டர் கீர்த்தனாமணியிடம் கோரிக்கை மனு அளித்தார்.பின்னர் அலுவலக வாசலில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது

ஹைட்ரோ கார்பன்

காவிரி டெல்டாவில் பேரழிவை ஏற்படுத்தும் ஹைட்ரோ கார்பன், கச்சா பாறைஎரிவாயு எடுக்கும் திட்டத்துக்கு ஓ.என்.ஜி.சி.க்கு அனுமதிக்க கூடாது என கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக விவசாயிகள் போராடி வருகிறார்கள்.2020-ம்ஆண்டு முதல் காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டு ஓ.என்.ஜி.சி. புதிய கிணறுகள் அமைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் காவிரி டெல்டாவில் பல இடங்களில் மூடப்பட்டுள்ள கிணறுகளை திறப்பதற்கும், எரிவாயு எடுப்பதற்கும் மறைமுக முயற்சிகளை ஓ.என்.ஜி.சி. நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

ஆலோசனை கூட்டம்

இந்த நிலையில் மன்னார்குடி தாசில்தார் அலுவலகத்தில் உதவி கலெக்்டர் வழிகாட்டுதலோடு பெரியகுடி கிணற்றில் இருந்து எரிவாயு எடுப்பதற்கு கலந்தாலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. இந்த அறிவிப்பு தற்போது தமிழக அரசின் கொள்கைக்கு முரணாக உள்ளது. 2020-ம் ஆண்டு காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது. 2016-ம் ஆண்டுக்கு முன் அனுமதி பெற்ற கிணறுகளை தவிர்த்து காவிரி டெல்டாவில் புதிய கிணறுகள் அமைக்கவோ, மூடப்பட்ட கிணறுகளை திறக்கவோ அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.

அனுமதி கொடுக்கப்பட்டுள்ளதா?

தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள தி.மு.க. தலைமையிலான அரசு ஹைட்ரோ கார்பன் எடுக்க ஓ.என்.ஜி.சி.க்கு அனுமதி கொடுத்துள்ளதா? இது குறித்து தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளிப்படையாக தனது கொள்கை நிலையை அறிவிக்க வேண்டும்.ஏற்கனவே பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீண்டும் பணிகளை மேற்கொள்ள அனுமதிக்க கூடாது. அனுமதிக்கப்படும் பட்சத்தில் விவசாயிகள், பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினாா்.


Next Story