வருவாய் ஆய்வாளர் தூக்குப்போட்டு தற்கொலை வேலைப்பளு காரணமா?


வருவாய் ஆய்வாளர் தூக்குப்போட்டு தற்கொலை வேலைப்பளு காரணமா?
x

வருவாய் ஆய்வாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வேலைப்பளு காரணமாக அவர் தற்கொலை செய்தாரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஆவடி,

ஆவடியை அடுத்த பட்டாபிராம் அம்பேத்கர் நகர் சுசில் பிரான்சிஸ் தெருவைச் சேர்ந்தவர் அருண்குமார் (வயது 42). இவர், சென்னை சேப்பாக்கத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளராக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி தேவி (37). இவர்களுக்கு தமிழரசி (11) என்ற மகளும், தமிழ்ச்செல்வன் (10) என்ற மகனும் உள்ளனர்.

நேற்று காலை நீண்ட நேரம் ஆகியும் அருண்குமார் படுக்கை அறையில் இருந்து வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த தேவி, படுக்கை அறை கதவை நீண்ட நேரம் தட்டியும் திறக்கவில்லை. பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு தனது கணவர் அருண்குமார் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

வேலைப்பளு காரணமா?

இதுபற்றி தகவல் அறிந்து வந்த பட்டாபிராம் போலீசார், தூக்கில் தொங்கிய அருண்குமார் உடலை பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அருண்குமாருக்கு வரவேண்டிய பதவி உயர்வு நீண்ட நாட்களாகியும் கிடைக்கவில்லை. மேலும் அவருக்கு கடன் தொல்லையும் இருந்ததாக கூறப்படுகிறது. அத்துடன் வேலைப்பளு இருப்பதாகவும் தனது மனைவி மற்றும் உறவினர்களிடம் கூறி புலம்பி வந்ததாக தெரிகிறது. அருண்குமாருக்கு அவர்கள் ஆறுதல் கூறி வந்துள்ளனர்.

இது தொடர்பாக பட்டாபிராம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அருண்குமார் வேலைப்பளு காரணமாக தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என விசாரித்து வருகின்றனர்.


Next Story