உயர்ந்துவரும் மது வருமானத்தை தமிழகத்தின் வளர்ச்சி என கூறுவதா? - மதுரையில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு
ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்துவரும் மது வருமானத்தை தமிழகத்தின் வளர்ச்சி என கூறுவதா? என மதுரையில் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டினார்.
ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்துவரும் மது வருமானத்தை தமிழகத்தின் வளர்ச்சி என கூறுவதா? என மதுரையில் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டினார்.
அன்புமணி ராமதாஸ்
பா.ம.க. மாநில தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., விமானத்தில் மதுரை வந்தார். விமான நிலையத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:- தென் மாவட்டத்தில் மிகப்பெரிய பிரச்சினையாக தண்ணீர் பிரச்சினை உள்ளது. இதற்கு தீர்வு பல ஆண்டுகளாக நம்மிடம் இருக்கிறது. காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்தால் குடிநீர் பிரச்சினையை தீர்க்க முடியும். இதனை அரசு நிறைவேற்ற வேண்டும் என பல முறை கோரிக்கை வைத்துவிட்டோம். முந்தைய ஆட்சி காலத்தில் திட்டத்திற்கு பெயரளவில் அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால், தி.மு.க. ஆட்சியில் இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டு விட்டது.
கடந்த ஆண்டு 620 டி.எம்.சி. நீர் கடலுக்கு சென்றிருக்கிறது. காவிரி-குண்டாறு திட்டம் நிறைவேற்றப்பட்டு இருந்தால், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை உள்ளிட்ட 6 மாவட்டங்கள் பயன்பெற்றிருக்கும். இந்த திட்டத்திற்கு மத்திய அரசு நிதி கொடுக்கும் நிலையில் இல்லை. எனவே, தமிழக அரசு இதற்கான நிதியை ஒதுக்கி பணிகளை தொடங்க வேண்டும். இதுபோல், தமிழகம் முழுவதும் உள்ள நீர் சார்ந்த பிரச்சினைகளை தீர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சட்டமன்ற விவாதம்
சட்டமன்ற கூட்டத்தொடரின் கடைசி நாளில், 15 மசோதாக்கள் விவாதமின்றி நிறைவேற்றப்பட்டன. அதில், முக்கியமாக தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சிறப்பு திட்டங்களுக்கான மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு தனியார் நிறுவனம் 100 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருந்தால் அதற்குள் நீர் நிலைகள் வந்தால் அதில் கட்டிடங்கள் கட்டிகொள்ளலாம் என அந்த சட்டம் கூறுகிறது. இந்த சட்டத்தின் மூலம் ஆற்றங்கரைகளில் 100 ஏக்கர் நிலம் வாங்கி, அந்த ஆற்றில் நீர் எடுப்பார்கள். கழிவு நீரை ஆற்றில் விடுவார்கள்.
சட்டமானது ஏழைகளுக்கு தனியாகவும், பணக்காரர்களுக்கு தனியாகவும் இருக்கிறது. சமீப காலமாக தமிழக அரசு தனியார் நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கான ஆட்சியா, தனியார் நிறுவனங்களுக்கான ஆட்சியா? என்று தெரியவில்லை.
பூரண மதுவிலக்கு
மது விலக்குத்துறை அமைச்சருக்கு, மது விலக்கு என்பதன் பொருள் தெரியவில்லை. திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானம், பன்னாட்டு மாநாடுகளில் மது விற்பனை செய்யலாம் என அரசாணை கொண்டு வந்தது ஏன்? அரசாணை என்பது எல்லோருக்கும் தெரியும் வகையில் இருக்க வேண்டும். ஆனால், தமிழக அரசு, அரசாணைகளை யாருக்கும் தெரியாமல் கொண்டு வருகிறது. எங்கும் மது, எதிலும் மது என்ற நிலையில் தமிழகம் இருக்கிறது.
மு.க.ஸ்டாலின், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து பூரண மதுவிலக்கு என கூறினார். ஆனால் இப்போது அவர் மாறிவிட்டார். அண்ணாவின் கொள்கையை தமிழக அரசு மறந்துவிட்டது. ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்துவரும் மது வருமானத்தை வைத்து தமிழகத்தின் வளர்ச்சி என்று கூறுகிறார்கள்.
மது என்பது தமிழகத்தின் சாபக்கேடு, வீழ்ச்சி. தனியார் கம்பெனிகள் வருமானம் ஈட்டுவதற்காக, சட்டத்தை மாற்றுகிறார்கள்.
மக்களுக்கு எதிரான முடிவுகளை தமிழக அரசு எடுக்கிறது. 12 மணி நேர வேலை என்பதும் தவறான முடிவு. அதற்கு 3 நாட்கள் விடுமுறை கொடுத்தாலும் சரியாகாது. 8 மணி நேர வேலையிலேயே மனிதர்களுக்கு மன அழுத்தம் அதிகம் இருக்கிறது. இந்த விவகாரத்தில் கவர்னருக்கு மசோதாவை அனுப்பாமல், தற்போது நிறுத்தி வைத்திருக்கிறார்கள். இந்த மசோதாவை திரும்ப பெறவேண்டும். நிறுத்தி வைப்பதால் பலனில்லை.
மணல் கொள்ளை
தூத்துக்குடி மாவட்டத்தில் மணல் கடத்தலை தடுத்த கிராம நிர்வாக அதிகாரியை மணல் கடத்தல் மாபியா கும்பல் கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ளது. இது வெளியே தெரிந்த செய்தி. தெரியாமலும் பல நடக்கிறது. மணல் கொள்ளையை முதல்-அமைச்சர் தடுத்து நிறுத்த வேண்டும். மணல் கடத்தலில் ஈடுபடுபவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.
பீகார், உத்தரபிரதேசம், மத்திய பிரசேதம் போல் தமிழகம் ஆகிவிடக்கூடாது. அங்குதான் மணல் கொள்ளைக்கு எதிராக கொலைகள் நடக்கும். உடனடியாக மணல் குவாரிகளை மூட வேண்டும். அனுமதி இல்லாமலும் அரசியல் ஆதரவுடன் பல குவாரிகள் இயங்கி வருகின்றன. அவற்றை ஒழிக்க வேண்டும். அரசு நினைத்தால் ஒரே நாளில் அழித்து விடலாம். தனியாருக்கு ஆதரவாக செயல்படும் அரசாக தி.மு.க. அரசு மாறி விட்டதாக அச்சம் எழுந்துள்ளது. மக்களின் அரசு என்பதை நிரூபிக்க வேண்டும்.
தேர்தல் கூட்டணி
அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசியதாக வெளிவரும் ஆடியோ குறித்து ஆய்வு நடத்த வேண்டும். அதில் உண்மை இருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது. ஒருமித்த கருத்துகளுடன் கூட்டணி குறித்து 2024-ல் முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.