தீபாவளி பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு சரியா? ஈரோடு மக்கள் கருத்து


தீபாவளி பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு சரியா?  ஈரோடு மக்கள் கருத்து
x

தீபாவளி பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு சரியா? என்று ஈரோடு மக்கள் கருத்து தெரிவித்தனர்.

ஈரோடு

தீபாவளி பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு சரியா? என்று ஈரோடு மக்கள் கருத்து தெரிவித்தனர்.

பட்டாசு வெடிக்க தடை

நாடு முழுவதும் வருகிற 24-ந் தேதி தீபாவளி பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாடப்பட உள்ளது. கொரோனாவின் கோர தாக்குதலுக்கு பின்னர், கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மீண்டு எழுந்து வரும் இந்த நேரத்தில் வரும் முதல் தீபாவளியாக இது அமைந்து உள்ளது.

பொருளாதார தேக்கம் பல குடும்பங்களுக்கு தீபாவளியை கேள்விக்குறியாக்கி இருக்கிறது என்றாலும், எப்படியாவது குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக, கடமைக்காக என்று தீபாவளி கொண்டாட்டத்தை கொண்டாடும் மனநிலையில் பொதுமக்கள் இருக்கிறார்கள்.

தீபாவளி என்றால் அனைவரின் நினைவிலும் முதலில் வருவது பட்டாசுகள்தான். விதவிதமாக வெடிக்கும் பட்டாசுகள், வாண வேடிக்கைகள், சாட்டை, சக்கரங்கள், பூந்தொட்டிகள் என்று நூற்றுக்கணக்கான ரகங்களில் பட்டாசுகள் குவிக்கப்பட்டு இருக்கின்றன. ஒரு ஆண்டு முழுவதும் தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் பட்டாசுகள் அனைத்தும் வெடிக்கப்பட காத்திருக்கின்றன.

ஆனால், தமிழ்நாட்டில் பட்டாசுகள் வெடிக்க நேர ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஐகோர்ட்டின் அறிவுரைப்படி தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தீபாவளி தினத்தில் பட்டாசுகளை காலை 6 மணி முதல் 7 மணிவரையும், இரவு 7 மணி முதல் 8 மணிவரையும் மட்டுமே வெடிக்க வேண்டும் என்ற உத்தரவை வெளியிட்டு உள்ளது. அதாவது தீபாவளி தினத்தில் காலை ஒரு மணி நேரம் மாலை ஒரு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்பது இந்த அறிவிப்பின் நோக்கமாக உள்ளது.

சரியா?

இது சரியா? என்கிற விவாதம் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டு உள்ளது. பட்டாசுகள் வெடிப்பதால் வெளியேறும் புகை காரணமாக ஏற்படும் காற்று மாசு குறைக்கப்பட பட்டாசு வெடிப்பதை தவிர்ப்பது நல்லது என்று ஒரு தரப்பினர் இந்த அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவிக்கிறார்கள். ஆனால், தீபாவளி கொண்டாட்டத்தின் முக்கிய அம்சமே பட்டாசுதான். ஒரே ஒரு நாள் கிடைக்கும் இந்த மகிழ்ச்சியில் இருந்து தள்ளி இருக்க செய்வது நியாயமா? என்று ஒரு தரப்பினர் கேட்கிறார்கள்.

இதுபற்றி ஈரோடு மக்களின் கருத்தை கேட்டபோது அவர்கள் கருத்தை தெரிவித்தனர்.

மாணவி தனுஸ்ரீ

ஈரோடு சடையம்பாளையம் பகுதியை சேர்ந்த மாணவி வி.பி.தனுஸ்ரீ கூறியதாவது:-

பட்டாசு வெடிப்பது நமது மகிழ்ச்சிக்காகத்தான். ஒரு குறிப்பிட்ட நேரத்துக்குள் பட்டாசு வெடிக்க வேண்டும் என்றால் அதில் முழுமையான ஒரு மகிழ்ச்சி கிடைக்காது. இரவு முழுவதும் உறவினர்களுடன் பேசிக்கொண்டு காலையில் நன்றாக தூங்குபவர்கள் இருப்பார்கள். தீபாவளிக்கு எண்ணை தேய்த்து குளித்து, பூஜை செய்து, புத்தாடைகள் அணிந்து அதன் பிறகுதான் பட்டாசு வெடிக்க வேண்டும் என்ற பாரம்பரியம் கொண்ட குடும்பங்களும் உண்டு. அவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் எப்படி பட்டாசு வெடிக்க முடியும். மாலையில் ஒரு வேளை குறிப்பிட்ட நேரத்தில் மழை பெய்து விட்டால் பட்டாசு வெடிக்க முடியுமா?. எனவே பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு என்பது தேவையில்லை. எப்படியும் அவரவர் வாங்கி வைத்த பட்டாசுகளை ஒரு மணி நேரத்துக்கும் குறைவாகத்தான் வெடிப்பார்கள். இதற்கு கட்டுப்பாடு தேவையா என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொழிலாளி மணிகண்டன்

அறச்சலூரை சேர்ந்த கட்டிட தொழிலாளி மணிகண்டன் கூறியதாவது:-

பட்டாசுகளை வெடிக்க கடந்த ஆண்டும் கட்டுப்பாடு போடப்பட்டு இருந்தது. கிராமப்பகுதிகளில் இந்த கட்டுப்பாடுகளை யாரும் கண்டுகொள்வதில்லை. கண்டுகொள்வதில்லை என்பதை விட அதுபற்றி யாருக்கும் தெரியாது. தீபாவளிக்கு மகிழ்ச்சியாக இருக்கும் நேரத்தில், நண்பர்கள், உறவினர்கள் ஒன்று சேர்ந்தால் பட்டாசு வெடித்து கொண்டாடுவார்கள். இதற்கு நேரம் காலம் பார்க்க முடியாது. ஒரு நாள் முழுவதும் யாரும் பட்டாசு வெடித்துக்கொண்டே இருக்கமாட்டார்கள். இப்போது இருக்கும் பொருளாதார நிலையில் ஒரு சந்தோசத்துக்காக கொஞ்சம் பட்டாசு வாங்கி வெடிக்கிறோம். ஏழை, எளியவர்கள் வாங்கும் பட்டாசுகள் ஒரு மணி நேரம் வெடிக்க போதுமானதாகவே இருக்காது. அப்படி இருக்கும்போது எதற்காக இந்த நேரக்கட்டுப்பாடு.

இவ்வாறு அவர் கூறினார்.

சகோதரிகள்

கல்லூரி மாணவி என்.வைதூரியாஸ்ரீ, பள்ளிக்கூட மாணவி டி.என்.லியா ஆகிய சகோதரிகள் கூறியதாவது:-

பட்டாசு வீட்டில் இருந்தால் நினைத்த நேரத்தில் சென்று வெடிப்போம். சத்தம் கேட்கும் வெடிகளை பகல் நேரத்தில் வெடிப்போம். அதன் சத்தத்தை கேட்டு மகிழ்ச்சியாக இருப்போம். இரவில் வாண வேடிக்கைகள், மத்தாப்புகள் பற்ற வைப்போம். இதற்கு நேரம் பார்த்து எல்லாம் வெடிக்க முடியாது. நமக்கு எப்போது வெடிக்க வேண்டும் என்றுமனதுக்கு தோன்றுகிறதோ அப்போது வெடித்தால்தான் மகிழ்ச்சியாக இருக்கும். இந்த நேரத்தில்தான் வெடிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தக்கூடாது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

வக்கீல் ஈஸ்வரமூர்த்தி

ஈரோடு பார் அசோசியேசன் தலைவர் வக்கீல் ஈஸ்வரமூர்த்தி கூறியதாவது:-

பட்டாசு வெடிப்பது மாசு ஏற்படுத்துவதாக ஐகோர்ட்டு அறிவுரையின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. ஐகோர்ட்டின் இந்த உத்தரவை மதிப்பது முக்கியம்தான். அதே நேரம் தீபாவளி பண்டிகையை பட்டாசு வெடித்து கொண்டாடுவதன் மூலம் நமக்கு மகிழ்ச்சி என்பதை விட, அதை தயாரிக்கும் தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சி என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். பட்டாசு மாசு ஏற்படுத்துகிறது என்றால், மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை உற்பத்தி செய்ய அரசு ஊக்கப்படுத்த வேண்டும். அதைவிடுத்து, பட்டாசு வெடிப்பதை தடைசெய்வதால் எத்தனை ஆயிரம் குடும்பங்களின் மகிழ்ச்சி பாதிக்கும் என்பதை உணர வேண்டும். சாயக்கழிவுகள், தொழிற்சாலைகள் என்று பல காரணங்களால் மாசு ஏற்படுகிறது. ஆனால் தீபாவளி பட்டாசால் மட்டுமே மாசு ஏற்படுவதுபோன்று கூறுவதும் ஏற்கத்தக்கதல்ல.

இவ்வாறு அவர் கூறினார்.

வக்கீல் ராஜேந்திரன்

வக்கீல் சி.எம்.ராஜேந்திரன் கூறியதாவது:-

ஐகோர்ட்டு அறிவுரைப்படி பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு வழங்கப்பட்டு உள்ளது. நேரக்கட்டுப்பாடு அவசியம் என்றாலும், இன்னும் கூடுதலாக நேரம் ஒதுக்க வேண்டும் என்பதுதான் அனைத்து தரப்பினரின் வேண்டுகோளாக இருக்கும். காலையில் 3 மணி நேரம், மாலையில் 3 மணி நேரம் என்று அறிவித்தால் கூட, பொதுவாக அனைவரும் அவரவர் பிடித்த பட்டாசுகளை வெடிப்பார்கள். கடந்த ஆண்டு பட்டாசு வெடிக்க தடை செய்யப்பட்ட நேரத்தில் பட்டாசு வெடித்தவர்கள் மீது சில வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருந்தன. இது ஐகோர்ட்டை திருப்திப்படுத்த போடப்படும் வழக்குகளாகத்தான் இருக்கும். பட்டாசு வெடிக்காமல் இருந்தால் மட்டுமே மாசு ஏற்படுவது குறையுமா?. மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை தயாரிக்க முயற்சி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அக்கறை

பெயர் கூற விரும்பாத சிலர் கூறியதாவது:-

பட்டாசு மூலம் மாசு ஏற்படுகிறது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதற்கு தடை விதிக்கப்படுகிறது. இதுபோல, வாகன புகையினால் ஏற்படும் மாசு, தொழிற்சாலைகளால் ஏற்படும் மாசு, தினசரி வீடுகள் மற்றும் நிறுவனங்களில் இருந்து வெளியேறும் கழிவுகளால் ஏற்படும் மாசு என்று பல மாசுகள் உள்ளன. இவற்றை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

நீர்நிலைகளில் ஏற்படும் மாசுகாரணமாக பல்வேறு நோய்கள் பரவுகின்றன. இதை தடுக்க மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுக்க முன்வரவில்லையே. மாசு காரணமாக குளங்கள், நீரோடைகளில் ஆகாயத்தாமரை வளர்ந்து அவை தூர்ந்து போகின்றன. அதை சுத்தம் செய்யவும், கழிவுகளை அகற்றவும் முன்வராத அதிகாரிகள், பட்டாசின் மீது காட்டும் அக்கறையை அனைத்து விஷயங்களிலும் காட்ட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


Next Story