அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை தரமாக இருக்கிறதா?


அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை தரமாக இருக்கிறதா?
x
தினத்தந்தி 18 Nov 2022 12:15 AM IST (Updated: 18 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

அரசு ஆஸ்பத்திரிகளில் அளிக்கப்படும் சிகிச்சை தரமாக இருக்கிறதா? என்பது குறித்து நோயாளிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தேனி

அரசாங்கத்தின் அக்கறையும்..., டாக்டர்களின் அலட்சியமும்...,

நாட்டு மக்களின் உடல் நலன் மற்றும் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தும் விதமாக மத்திய-மாநில அரசுகள் ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டில் மருத்துவத்துறைக்கு அதிகம் நிதி ஒதுக்கீடு செய்கின்றன. அந்த வகையில் தமிழக அரசின் 2022-23-ம் ஆண்டு பட்ஜெட்டில் மருத்துவத்துறைக்கு ரூ.17 ஆயிரத்து 61 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

தமிழகத்தில் ஏழை-எளிய, பாமர மக்களுக்கும் உயர்தர மருத்துவ சிகிச்சை கிடைக்க வேண்டும் என்ற வகையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் மருத்துவக்கல்லூரிகளுடன் இணைந்த ஆஸ்பத்திரிகள்-61, சென்னை ஓமந்தூரார் அரசு பன்நோக்கு உயர் சிறப்பு ஆஸ்பத்திரி-1, மாவட்ட தலைமை ஆஸ்பத்திரிகள்-18, வட்டம்/வட்டம் சாரா ஆஸ்பத்திரிகள்-272, ஆரம்ப சுகாதார நிலையங்கள்-1,804, துணை சுகாதார நிலையங்கள்-8 ஆயிரத்து 713, நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள்-463 ஆகிய எண்ணிக்கையில் ஆஸ்பத்திரிகள் இயங்கி வருகின்றன.

'நடமாடும் மருத்துவமனை திட்டம்', 'மக்களை தேடி மருத்துவ திட்டம்', 'இன்னுயிர் காப்போம் திட்டம்' போன்ற புதுமையான திட்டங்களும் மருத்துவத்துறையில் புகுத்தப்பட்டு வருகின்றன.

கால்பந்து வீராங்கனை உயிரிழப்பு

மருத்துவத்துறையின் வளர்ச்சி, மேம்பாட்டை கருத்தில் கொண்டு அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும் ஒரு சில அரசு டாக்டர்கள் பணியில் அலட்சிய போக்கை கடைபிடித்து அப்பாவி மனித உயிர்களுடன் விளையாடுவது தொடர் கதையாக இருந்து வருகிறது.

அந்த வகையில் சென்னை பெரியார்நகர் ஆஸ்பத்திரிக்கு கால்தசை பிடிப்புக்கு சிகிச்சை பெற சென்ற வியாசர்பாடியை சேர்ந்த கால்பந்து வீராங்கனை பிரியா (வயது 17) டாக்டர்கள் அளித்த தவறான சிகிச்சையால் தனது காலை இழந்து, பின்னர் உயிர் இழந்திருப்பது அனைத்து தரப்பினரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

பிரியாவின் மரணம் மருத்துவத்துறைக்கு மிகப்பெரிய களங்கத்தையும், அவப்பெயரையும் உண்டாக்கி உள்ளது. தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு நிகராக அரிய வகை அறுவை சிகிச்சைகள் அரசு ஆஸ்பத்திரிகளில் நடைபெறுவது சாதனையாக பார்க்கப்படும் வேளையில் தவறான சிகிச்சைக்கு பிரியா பலியாகி இருப்பது மிகுந்த வேதனையாக கருதப்படுகிறது.

இந்த நிலையில் அரசு ஆஸ்பத்திரிகளில் அளிக்கப்படும் சிகிச்சை தரமாக இருக்கிறதா? என்பது பற்றி நோயாளிகள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

நல்ல முறையில் சிகிச்சை

சுந்தரி (கம்பம்) :- நான் எனது வீட்டில் தடுமாறி விழுந்ததில் கால் தொடையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சென்றேன். காலில் பிளேட் வைத்து அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் ரூ.50 ஆயிரம் செலவு ஆகும் என்றும் தெரிவித்தனர். ஏழ்மை நிலையில் இருப்பதால் அவ்வளவு பணம் எங்களிடம் இல்லை. இதனால், கம்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு பரிந்துரை செய்தனர். அங்கு முதல்-அமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்கப்பட்டு காலில் பிளேட் வைத்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இங்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. கழிப்பிடம் நல்ல முறையில் பராமரிக்கப்படுகிறது. பகல், இரவு நேரங்களில் டாக்டர்கள் வந்து பரிசோதனை செய்கின்றனர். செவிலியர்களும் நல்ல முறையில் கவனித்துக் கொள்கின்றனர்.

ஜெயலட்சுமி (பெரியகுளம்) :- எனது காலில் கொப்பளம் ஏற்பட்டு புண்ணாகியது. சிகிச்சைக்காக பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு ஒரு வாரத்துக்கு முன்பு வந்தேன். காயம் முழுமையாக ஆறுவதற்குள் இன்று (நேற்று) வீட்டுக்கு செல்லுமாறும், தினமும் வந்து புண்ணுக்கு கட்டு போட்டுக் கொள்ளுமாறும் கூறினர். இன்னும் சில நாட்கள் இங்கேயே தங்க வைத்து முழுமையாக குணமாக்கி அனுப்பி இருக்கலாம். தினமும் இங்கு வந்து செல்வதற்கு ஆட்டோவுக்கே ரூ.200 செலவு செய்ய வேண்டும். வேறு வேலைக்கும் செல்ல முடியாது. இதுபோன்று முழுமையாக குணம் அடையும் முன்பு வீட்டுக்கு அனுப்புவதை தவிர்க்கலாம்.

பணியில் இருப்பதில்லை

ஈஸ்வரன் (கொம்புக்காரன்புலியூர்) :- எனக்கு சர்க்கரை மற்றும் உயர் ரத்த அழுத்த பாதிப்பு உள்ளதால் கடமலைக்குண்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்து மாத்திரைகள் வாங்கி பயன்படுத்துகிறேன். அடிக்கடி இங்கு வந்து செல்வேன். எப்போது வந்தாலும் நன்றாக பார்க்கிறார்கள். சில நாட்களில் டாக்டர்கள் பணியில் இருப்பதில்லை. ஏதாவது ஆய்வுக்கூட்டத்துக்கு சென்று விடுவதாக கூறுகின்றனர். அனைத்து நாட்களிலும் டாக்டர்கள் இருக்கும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும். கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் உயர் சிகிச்சை பெற வேண்டும் என்றால் க.விலக்கு செல்ல வேண்டியது உள்ளது. கடமலைக்குண்டு பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு ஆஸ்பத்திரியாக தரம் உயர்த்த வேண்டும்.

தங்கம் (காளப்பன்பட்டி, மதுரை) :- எனக்கு சிறுநீரகத்தில் கல் அடைப்பு பிரச்சினை இருந்தது. அதற்கு சிகிச்சை பெற தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு வந்தேன். ஒரு வாரமாக இங்கு தங்கி சிகிச்சை பெற்று வருகிறேன். நல்ல முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறுகிறேன். சிபாரிசு என்ற பெயரில் டாக்டர்களை தொந்தரவு செய்யாமல் இருந்தாலே மக்களுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அடிக்கடி வார்டு பகுதியில் சுத்தம் செய்யப்படுகிறது. நோயாளிகளுக்கு தேவையான சுடுதண்ணீர் போதிய அளவில் கிடைக்க ஏற்பாடு செய்தால் நன்றாக இருக்கும்.

அனைத்து வசதிகள்

பர்வீன்பேகம் (மகப்பேறு டாக்டர், கம்பம் அரசு ஆஸ்பத்திரி) :- கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் 24 மணி நேரமும் பிரசவம் பார்க்கும் சீமாங் சென்டர் வசதி உள்ளது. மயக்க மருந்து, பெண் டாக்டர்கள், செவிலியர்கள், அறுவை சிகிச்சைக்கு தேவையான அனைத்து வசதிகளும் உள்ளன. குழந்தை பராமரிப்புக்கான சிறப்பு பயிற்சி பெற்ற செவிலியர்களும் உள்ளனர். இதனால் மாதத்துக்கு 200-ல் இருந்து 230 பிரசவங்கள் வரை நடக்கிறது. இதில் 60 சதவீதம் அறுவை சிகிச்சை மூலமும், 40 சதவீதம் சுகப் பிரசவமும் நடக்கிறது. வரும் ஆண்டுகளில் சுகப்பிரசவத்தை அதிகரிக்கும் வகையில் கர்ப்பகால பரிசோதனைக்கு வருபவர்களுக்கு உடற்பயிற்சி மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது. இங்கு கேரள மாநிலத்தை சேர்ந்த கர்ப்பிணிகளும் பிரசவத்துக்காக அழைத்து வரப்படுகின்றனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேம்படுத்த வேண்டும்

மேலும் மக்கள் சிலர் கூறுகையில், "பெரியகுளத்தில் மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரி அமைந்துள்ள போதிலும், அங்கிருந்து அடிக்கடி மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு நோயாளிகள் அனுப்பி வைக்கப்படுகின்றனர். அங்கு சிகிச்சை பிரிவுகளை மேம்படுத்த வேண்டும். கொடைக்கானல் மலைப்பாதையில் விபத்துகளில் யாரேனும் சிக்கினால் அவர்கள் வத்தலக்குண்டு அரசு ஆஸ்பத்திரி அல்லது தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்படுகின்றனர். தேவதானப்பட்டியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆஸ்பத்திரியாக மேம்படுத்தினால் தேவதானப்பட்டி மற்றும் கொடைக்கானல் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மக்களுக்கும், விபத்துகளில் சிக்குபவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்" என்றனர்.


Next Story