தனியார் பயிற்சி நிலையங்களுக்கு இணையாக அரசு 'நீட்' தேர்வு பயிற்சி இருக்கிறதா?


தனியார் பயிற்சி நிலையங்களுக்கு இணையாக அரசு நீட் தேர்வு பயிற்சி இருக்கிறதா?
x

‘நீட்' தேர்வு என்பது பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவத்துறைகளில் இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்காக, இந்திய அளவில் நடைபெறும் நுழைவுத்தேர்வு முறையாகும். தேசியத் தேர்வு முகமை இதை நாடு முழுவதும் நடத்துகிறது. அனைத்து அரசுக் கல்லூரிகளுக்கும் தனியார் கல்லூரிகளுக்கும் பொருந்தும் வகையில் இத்தேர்வு நடத்தப்படுகிறது.

அரியலூர்

720 மதிப்பெண்கள்

இத்தேர்வில் இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல் ஆகிய பாடங்களில் ஒவ்வொன்றில் இருந்தும் 45 வினாக்கள் கேட்கப்படும். மொத்தம் 180 வினாக்கள் இடம் பெறும். ஒரு வினாவிற்கான சரியான விடைக்கு 4 மதிப்பெண்கள் என்ற அடிப்படையில், மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது. ஒரு கேள்விக்கு சரியான பதிலளித்தால் 4 மதிப்பெண்கள் வழங்கப்படும். தவறான பதில் அளிக்கப்பட்டுள்ள வினாக்களுக்கு 1 மதிப்பெண் குறைக்கப்படுகிறது.

இந்த தேர்வு தமிழ், ஆங்கிலம், அசாமி, பெங்காலி, குஜராத்தி, இந்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒடியா, தெலுங்கு, பஞ்சாபி மற்றும் உருது ஆகிய 13 மொழிகளில் நடத்தப்படுகிறது.

இதுதொடர்பான தகவல்களை வலைத்தளம் www.ntaneet.nic.in என்ற இணையத்தள முகவரியிலும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அரசுப் பள்ளிக்கூட மாணவர்கள்

அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின்படி ஆண்டு தோறும் 400-க்கும் மேற்பட்ட அரசுப்பள்ளி மாணவர்கள் 'நீட்' தேர்வு மூலம் மருத்துவக் கல்லூரிகளுக்கு தேர்வு செய்யப்படுகின்றனர்.

தமிழக அரசு 412 பள்ளிகளில் நீட் தேர்வு மையங்களை நடத்தி வருகிறது. இந்த மையங்கள் தனியாருக்கு நிகராக இருக்கிறதா? மாணவர்கள் ஆர்வமாக சென்று படிக்கிறார்களா? என்பது குறித்து மாணவர்கள், பெற்றோர்கள், சங்க நிர்வாகிகள் பல்வேறு கருத்துகளை கூறுகின்றனர். அத்துடன், அரசு பள்ளி மாணவர்கள் நலன் கருதி, கூடுதலாக நீட் தேர்வு மையங்களை தனியாருக்கு நிகராக அரசு தொடங்க வேண்டும் என்றும் மாணவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

சிறப்பு பயிற்சி

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரில் உள்ள ஒருநீட் தேர்வு பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வரும் விக்கிரமங்கலம் அருகே பெரிய திருக்கோணத்தை சேர்ந்த துர்கா தேவி:- கடந்த ஆண்டு 11-ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் நீட் தேர்வு பயிற்சி மையத்தில் சேர்ந்தேன். தற்போது அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரில் உள்ள பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வருகிறேன். அரசு பள்ளி மாணவர்களுக்காக அரசு சார்பில் நடைபெறும் இந்த பயிற்சி மையத்தில் எங்களுக்கு சிறப்பான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. சிறந்த ஆசிரியர்களை கொண்டு எங்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதனால் எனக்கு நீட் தேர்வை சிறப்பாக எதிர்கொள்ள முடியும் என்கின்ற நம்பிக்கை உள்ளது. மேலும் இங்கு தங்கி பயிலும் எங்களுக்கு உணவு, இருப்பிடம் போன்ற அனைத்து வசதிகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. மேலும், நீட் தேர்வை எழுத சிறந்த பயிற்சி பெற்று வருகிறோம்.

அனுபவம் வாய்ந்த முதுகலை ஆசிரியர்கள்

அரசு போட்டி தேர்வு பயிற்சி வகுப்பில் பயிற்சி பெற்று வரும் பாடாலூர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவி பிரியதர்ஷினி:- எனக்கு மருத்துவ படிப்பு படிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கனவு. எனது பெற்றோரின் கனவும் கூட. மருத்துவம் படிப்பு படிக்க வேண்டும் என்றால் நுழைவுத்தேர்வான "நீட்" தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நீட் தேர்வுக்கு பயிற்சி பெற தனியார் பயிற்சி மையங்கள் இருக்கிறது. ஆனால் அதில் சேர்ந்து பயிற்சி பெற அதற்கான கட்டணம் செலுத்த எனது பெற்றோரால் முடியாது. இதனால் தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அந்தந்த மாவட்டத்தில் தொடங்கப்பட்ட நீட் உள்பட போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பில் சக மாணவிகளுடன் சேர்ந்து இலவசமாக படித்து வருகிறேன். அரசு பயிற்சி வகுப்பில் அனுபவம் வாய்ந்த முதுகலை ஆசிரியர்கள் கொண்டு பாடங்கள் நன்றாக கற்பிக்கப்பட்டு வருகிறது. கற்பிக்கப்படும் பாடங்களில் இருந்து உடனுக்குடன் தேர்வு வைக்கப்படுகிறது. வீட்டில் இருந்து படிப்பதற்கு தேவையான பாடப்புத்தகங்களின் நகல்கள் இலவசமாக தரப்படுகிறது. மேலும் மாவட்ட கலெக்டர், முதன்மை கல்வி அலுவலர் மற்றும் கல்வித்துறை அலுவலர்கள் அடிக்கடி வந்து எங்களை ஊக்கப்படுத்தி வருகின்றனர்.

தனியார் பயிற்சி மையத்துக்கு நிகராக

தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில துணைத் தலைவர் காமராஜூ:- நீட் உள்பட போட்டி நுழைவு தேர்வுகளுக்கு அரசு சார்பில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மாணவ-மாணவிகளுக்கு நடத்தப்பட்டு வரும் பயிற்சி வகுப்பு பெரம்பலூர் மாவட்டத்தில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த பயிற்சி வகுப்பு ஏழை, எளிய குடும்பங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் அதிகம் பேர் பயிற்சி பெற்று வருகின்றனர். தனியார் பயிற்சி மையத்துக்கு நிகராக அரசு பயிற்சி வகுப்பில் மாணவ-மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

வணிக மயம்

பொது கல்விக்கான மாநில பொதுச்செயலாளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு:- நீட் தேர்வு என்பது ஒரு சூதாட்டம். தனியார் நிறுவனங்கள் மாணவர்களை பகடை காயாகவும், பெற்றோரின் சேமிப்பை முதலீடாகவும் பயன்படுத்துகின்றனர். மாணவர்களுக்கு நீட் தேர்வு, தகுதி உத்தரவாதத்தையும் வழங்கவில்லை. கல்வியை வணிக மயமாக்கலையும் ஒழிக்கவில்லை. மொத்தத்தில் கல்வி என்ற பெயரில் வணிக சூதாட்டமாக நீட் மாறி உள்ளது. ஆண்டுதோறும் 2¼ லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு மூலம் வெற்றி பெறுகின்றனர். ஆனால் மொத்த சீட் வெறும் 20 ஆயிரம்தான். அப்படியானால் மீதம் உள்ள 2 லட்சம் மாணவர்கள் சீட் கிடைக்காமல் அடுத்த ஆண்டு நீட் தேர்வுக்கு முயற்சிக்கின்றனர். இவ்வாறு 3 முறை தேர்வு எழுதி வெற்றி பெறவில்லை என்றால் பணம் வீணடிக்கப்படுவதுடன், மருத்துவ படிப்பும் கிடைக்காத நிலை ஏற்படுகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story