தனியார் பயிற்சி நிலையங்களுக்கு இணையாக அரசு 'நீட்' தேர்வு பயிற்சி இருக்கிறதா?


தனியார் பயிற்சி நிலையங்களுக்கு இணையாக அரசு நீட் தேர்வு பயிற்சி இருக்கிறதா?
x

‘நீட்' தேர்வு என்பது பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவத்துறைகளில் இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்காக, இந்திய அளவில் நடைபெறும் நுழைவுத்தேர்வு முறையாகும். தேசியத் தேர்வு முகமை இதை நாடு முழுவதும் நடத்துகிறது. அனைத்து அரசுக் கல்லூரிகளுக்கும் தனியார் கல்லூரிகளுக்கும் பொருந்தும் வகையில் இத்தேர்வு நடத்தப்படுகிறது.

பெரம்பலூர்

720 மதிப்பெண்கள்

இத்தேர்வில் இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல் ஆகிய பாடங்களில் ஒவ்வொன்றில் இருந்தும் 45 வினாக்கள் கேட்கப்படும். மொத்தம் 180 வினாக்கள் இடம் பெறும். ஒரு வினாவிற்கான சரியான விடைக்கு 4 மதிப்பெண்கள் என்ற அடிப்படையில், மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது. ஒரு கேள்விக்கு சரியான பதிலளித்தால் 4 மதிப்பெண்கள் வழங்கப்படும். தவறான பதில் அளிக்கப்பட்டுள்ள வினாக்களுக்கு 1 மதிப்பெண் குறைக்கப்படுகிறது.

இந்த தேர்வு தமிழ், ஆங்கிலம், அசாமி, பெங்காலி, குஜராத்தி, இந்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒடியா, தெலுங்கு, பஞ்சாபி மற்றும் உருது ஆகிய 13 மொழிகளில் நடத்தப்படுகிறது.

இதுதொடர்பான தகவல்களை வலைத்தளம் www.ntaneet.nic.in என்ற இணையத்தள முகவரியிலும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அரசுப் பள்ளிக்கூட மாணவர்கள்

அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின்படி ஆண்டு தோறும் 400-க்கும் மேற்பட்ட அரசுப்பள்ளி மாணவர்கள் 'நீட்' தேர்வு மூலம் மருத்துவக் கல்லூரிகளுக்கு தேர்வு செய்யப்படுகின்றனர்.

தமிழக அரசு 412 பள்ளிகளில் நீட் தேர்வு மையங்களை நடத்தி வருகிறது. இந்த மையங்கள் தனியாருக்கு நிகராக இருக்கிறதா? மாணவர்கள் ஆர்வமாக சென்று படிக்கிறார்களா? என்பது குறித்து மாணவர்கள், பெற்றோர்கள், சங்க நிர்வாகிகள் பல்வேறு கருத்துகளை கூறுகின்றனர். அத்துடன், அரசு பள்ளி மாணவர்கள் நலன் கருதி, கூடுதலாக நீட் தேர்வு மையங்களை தனியாருக்கு நிகராக அரசு தொடங்க வேண்டும் என்றும் மாணவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

அனுபவம் வாய்ந்த முதுகலை ஆசிரியர்கள்

பெரம்பலூரில் அரசு போட்டி தேர்வு பயிற்சி வகுப்பில் பயிற்சி பெற்று வரும் பாடாலூர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவி பிரியதர்ஷினி:- எனக்கு மருத்துவ படிப்பு படிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கனவு. எனது பெற்றோரின் கனவும் கூட. மருத்துவம் படிப்பு படிக்க வேண்டும் என்றால் நுழைவுத்தேர்வான "நீட்" தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நீட் தேர்வுக்கு பயிற்சி பெற தனியார் பயிற்சி மையங்கள் இருக்கிறது. ஆனால் அதில் சேர்ந்து பயிற்சி பெற அதற்கான கட்டணம் செலுத்த எனது பெற்றோரால் முடியாது. இதனால் தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அந்தந்த மாவட்டத்தில் தொடங்கப்பட்ட நீட் உள்பட போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பில் சக மாணவிகளுடன் சேர்ந்து இலவசமாக படித்து வருகிறேன். அரசு பயிற்சி வகுப்பில் அனுபவம் வாய்ந்த முதுகலை ஆசிரியர்கள் கொண்டு பாடங்கள் நன்றாக கற்பிக்கப்பட்டு வருகிறது. கற்பிக்கப்படும் பாடங்களில் இருந்து உடனுக்குடன் தேர்வு வைக்கப்படுகிறது. வீட்டில் இருந்து படிப்பதற்கு தேவையான பாடப்புத்தகங்களின் நகல்கள் இலவசமாக தரப்படுகிறது. மேலும் மாவட்ட கலெக்டர், முதன்மை கல்வி அலுவலர் மற்றும் கல்வித்துறை அலுவலர்கள் அடிக்கடி வந்து எங்களை ஊக்கப்படுத்தி வருகின்றனர்.

மாணவர்களுக்கு வரப்பிரசாதம்

கை.களத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் அன்பழகன்:- அரசு பயிற்சி வகுப்பில் சேர்ந்து நீட் தேர்வுக்கு படித்து வருகிறேன். அரசு பயிற்சி வகுப்பு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் மாணவ-மாணவிகளுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. அந்த அளவுக்கு பயிற்சி வகுப்பில் ஆசிரியர்கள் பாடங்கள் நடத்தி வருகின்றனர். முந்தைய நீட் தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட்ட வினாக்கள் குறித்து ஆசிரியர்கள் எடுத்துரைத்து பாடம் நடத்துகின்றனர். எங்களுக்கு எழும் சந்தேகங்களை ஆசிரியர்கள் உடனுக்குடன் தீர்த்து வைக்கின்றனர். தனியார் பயிற்சி மையத்தை விட அரசு பயிற்சி வகுப்பில் சிறப்பாக நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

புத்தகங்கள், கல்வி உபகரணங்கள்

நீட் உள்பட போட்டி நுழைவு தேர்வுகளுக்கான பெரம்பலூர் அரசு பயிற்சி வகுப்பு ஒருங்கிணைப்பாளர் கார்த்திக்:- தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையின் உத்தரவின் பேரில், பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வழிக்காட்டுதலின் பேரில் மாவட்டத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 26-ந்தேதி முதல் நீட் உள்பட போட்டி நுழைவு தேர்வுகளுக்கான அரசு பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டு, அரசு மற்றும் அரசு உதவி பெறும் மாணவ-மாணவிகளுக்கு அனுபவம் வாய்ந்த முதுகலை ஆசிரியர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்பட்ட வந்த பயிற்சி வகுப்பு தற்போது கடந்த 4-ந்தேதி முதல் தினமும் காலை 9 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடத்தப்பட்டு வருகிறது. தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் 21 மாணவர்களும், 85 மாணவிகளும் என மொத்தம் 106 பேர் பயிற்சி பெற்று வருகின்றனர். தற்போது மாணவ-மாணவிகளுக்கு தாவரவியல், விலங்கியல் பாடங்களுக்கு கற்பிக்கப்பட்டு வருகிறது. வருகிற 23-ந்தேதி முதல் இயற்பியல், வேதியியல் பாடங்கள் கற்பிக்கப்படும். மேலும் பயிற்சி வகுப்பில் பயிலும் மாணவ-மாணவிகளை ஊக்கப்படுத்தும் விதமாக மாவட்ட கலெக்டர் கற்பகம் தனது விருப்ப நிதியில் இருந்து ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பீட்டில் போட்டி தேர்வுக்கான புத்தகங்கள், கல்வி உபகரணங்கள் மற்றும் இதர பணிகளுக்காக ஒதுக்கீடு செய்துள்ளார். இதனால் பயிற்சி வகுப்பு தற்போது சிறப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் பயிற்சி வகுப்புக்கு கலெக்டர் நேரில் வந்து மாணவ-மாணவிகளிடம் ஊக்கப்படுத்தினார். பயிற்சி வகுப்பில் மாணவ-மாணவிகளுக்கு கற்பிக்கப்படும் பாடங்களில் இருந்து உடனுக்குடன் தேர்வு நடத்தி, அவர்களின் கற்றல் அடைவு எவ்வாறு இருக்கிறது என்று கண்டறியப்படுகிறது. பயிற்சி வகுப்பில் மாணவ-மாணவிகளுக்கு நீட் மாதிரி தேர்வு நடத்தப்படவுள்ளது. அடுத்த மாதம் (மே) 6-ந்தேதி வரை மாணவ-மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. கடந்த 2019-20 கல்வியாண்டில் பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு பயிற்சி வகுப்பில் பயின்று நீட் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவ-மாணவிகளில் 6 பேருக்கு தமிழக அரசின் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு மூலம் மருத்துவக்கல்லூரியில் மருத்துவம் படிக்க இடம் கிடைத்தது. 2020-21 கல்வியாண்டிலும், கடந்த கல்வியாண்டிலும் தலா 5 மாணவ-மாணவிகளுக்கு மருத்துவம் படிக்க இடம் கிடைத்தது.

தனியார் பயிற்சி மையத்துக்கு நிகராக

தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில துணைத் தலைவர் காமராஜூ:- நீட் உள்பட போட்டி நுழைவு தேர்வுகளுக்கு அரசு சார்பில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மாணவ-மாணவிகளுக்கு நடத்தப்பட்டு வரும் பயிற்சி வகுப்பு பெரம்பலூர் மாவட்டத்தில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த பயிற்சி வகுப்பு ஏழை, எளிய குடும்பங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் அதிகம் பேர் பயிற்சி பெற்று வருகின்றனர். தனியார் பயிற்சி மையத்துக்கு நிகராக அரசு பயிற்சி வகுப்பில் மாணவ-மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

வணிக மயம்

பொது கல்விக்கான மாநில பொதுச்செயலாளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு:- நீட் தேர்வு என்பது ஒரு சூதாட்டம். தனியார் நிறுவனங்கள் மாணவர்களை பகடை காயாகவும், பெற்றோரின் சேமிப்பை முதலீடாகவும் பயன்படுத்துகின்றனர். மாணவர்களுக்கு நீட் தேர்வு, தகுதி உத்தரவாதத்தையும் வழங்கவில்லை. கல்வியை வணிக மயமாக்கலையும் ஒழிக்கவில்லை. மொத்தத்தில் கல்வி என்ற பெயரில் வணிக சூதாட்டமாக நீட் மாறி உள்ளது. ஆண்டுதோறும் 2¼ லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு மூலம் வெற்றி பெறுகின்றனர். ஆனால் மொத்த சீட் வெறும் 20 ஆயிரம்தான். அப்படியானால் மீதம் உள்ள 2 லட்சம் மாணவர்கள் சீட் கிடைக்காமல் அடுத்த ஆண்டு நீட் தேர்வுக்கு முயற்சிக்கின்றனர். இவ்வாறு 3 முறை தேர்வு எழுதி வெற்றி பெறவில்லை என்றால் பணம் வீணடிக்கப்படுவதுடன், மருத்துவ படிப்பும் கிடைக்காத நிலை ஏற்படுகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story