நாட்டிற்கே பெருமை சேர்த்த மல்யுத்த வீரர்களுக்கு நீங்கள் கொடுக்கும் மரியாதை இதுதானா? - கனிமொழி கண்டனம்
நாட்டிற்கே பெருமை சேர்த்த மல்யுத்த வீரர்களுக்கு நீங்கள் கொடுக்கும் மரியாதை இதுதானா? என திமுக எம்.பி. கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை,
பாலியல் புகாரில் சிக்கியுள்ள இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சிங்கை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் மல்யுத்த வீராங்கனைகள், வீரர்கள் டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். நாடளுமன்ற திறப்பு விழாவன்று "மஹிளா மகாபஞ்சாயத்" என்ற பெயரில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டம் நடத்த முடிவெடுத்தனர். நாடாளுமன்றம் நோக்கி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பேரணியாக செல்ல முயற்சித்தனர்.
ஆனால் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டம் நடத்த போலீசார் அனுமதி மறுத்த நிலையில் தடையை மீறி மல்யுத்த வீராங்கனைகள், வீரர்கள் பேரணியாக சென்றனர். அப்போது, தடையை மீறி சென்ற அவர்களை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் காங்கிரஸ் உள்பட முக்கிய கட்சிகள் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில் நாட்டிற்கே பெருமை சேர்த்த மல்யுத்த வீரர்களுக்கு நீங்கள் கொடுக்கும் மரியாதை இதுதானா? என திமுக எம்.பி. கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ,
நாட்டிற்கே பெருமை சேர்த்த மல்யுத்த வீரர்களுக்கு நீங்கள் கொடுக்கும் மரியாதை இதுதானா? குற்றம்சாட்டப் பட்டிருக்கும் பிரிஜ் பூஷன் சிங் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல், நீதி கோருபவர்களை ஒடுக்கும் ஒன்றிய பாஜக அரசுக்கு வன்மையான கண்டனங்கள்.என தெரிவித்துள்ளார்.