ஐ.எஸ்.ஐ. முத்திரை இல்லாத மின்சாதனங்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை
ஐ.எஸ்.ஐ. முத்திரை இல்லாத மின்சாதனங்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை
திருவாரூர்:
ஐ.எஸ்.ஐ. முத்திரை இல்லாத மின்சாதனங்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மத்திய அரசின் தரச்சான்று
இந்திய அரசு மின்சாதனங்கள் தரக்கட்டுபாட்டு ஆணையின்படி மின் சாதனங்கள் மத்திய அரசின் தரச்சான்று இல்லாமல் உற்பத்தி செய்யவோ, விற்பனை செய்யவோ, இரும்பு மற்றும் துருபிடிக்காத எஃகு பொருட்களை தயாரிப்பதோ, இருப்பில் வைத்திருப்பதோ, விற்பனை செய்வதோ கூடாது. அவ்வாறு தரக்கட்டுபாட்டு சான்றிதழ் இல்லாமல் தயாரிப்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க மாவட்ட தொழில் மைய பொது மேலாளருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அபராதம், சிறை தண்டனை
மின்சாதன பொருட்களை தயாரிக்கும் அல்லது விற்பனை செய்யும் நிறுவனங்களை ஆய்வு செய்யும் போது பொருட்களின் தரம் குறைந்ததாக இருந்தால் பொதுமக்களுக்கு பேராபத்தை விளைவிக்கும் என்பதால் அந்த மாதிரியான நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம், சிறை தண்டனை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
எனவே திருவாருர் மாவட்டத்தில் ஐ.எஸ்.ஐ. முத்திரை தரச்சான்றில்லாத வாட்டர் ஹீட்டர், மின் சலவைப்பெட்டி, மின்சார அடுப்பு, மின் சுவிட்ச், எலக்ட்ரிக் ரேடியேட்டர்ஸ், சர்க்யூட் பிரேக்கர்ஸ் பல்புகள், பி.வி.சி. கேபிள்கள், மின் உபகரணங்கள் ஆகியவற்றை தயாரிப்பதையும், விற்பனை செய்வதையும் கண்டிப்பாக தவிர்க்குமாறு தயாரிப்பாளர்கள்- விற்பனையாளர்களை கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
கடும் நடவடிக்கை
தரம் குறைந்த பொருட்கள் தயாரிப்பதும், விற்பனை செய்வதும் உறுதி செய்யப்பட்டால் அவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இந்திய அரசு வெளியிட்டுள்ள இரும்பு மற்றும் இரும்பு பொருட்கள் தரக்கட்டுபாட்டு ஆணையின்படி உயர் அழுத்த மற்றும் குறைவான வெப்ப கலன்களில் பயன்படுத்தப்படும் இரும்பு தகடுகள், கட்டுமான பணிக்கு பயன்படுத்தப்படும் இரும்பு கம்பிகள் மட்டுமின்றி துருபிடிக்காத எஃகு பொருட்களும் தரக்கட்டுபாட்டு ஆணையின்படி கட்டாயமாக இந்திய தரச்சான்று நிறுவனத்தின் சான்றினை பெற்றிருக்க வேண்டும்.
தர நிர்ணய சான்று
எனவே இரும்பு மற்றும் துருபிடிக்காத எஃகு பொருட்களை தயாரிக்கும், விற்பனை செய்யும் நிறுவனங்கள் மேற்குறிப்பிடப்பட்ட இந்திய அரசு வெளியிட்டுள்ள இரும்பு மற்றும் துருபிடிக்காத எஃகு பொருட்கள் தரக்கட்டுபாட்டு ஆணைகளின்படி தர நிர்ணய சான்றினை கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும். மேலும் தர நிர்ணய சான்று பெறுதல் தொடர்பான விவரங்களுக்கு பொதுமேலாளர், மாவட்டதொழில் மையம், திருவாருர் தொலைபேசிஎண் 04366 224402 தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.