இஸ்ரோ விஞ்ஞானி வளர்மதி மறைவு - கனிமொழி எம்.பி இரங்கல்
இஸ்ரோ விஞ்ஞானி வளர்மதி மறைவெய்திய செய்தி வருத்தமளிக்கிறது என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.
சென்னை,
ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவுவதற்கான கவுண்ட்டவுனுக்கு குரல் கொடுத்து வந்தவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானி ந.வளர்மதி(50). இவர் மாரடைப்பு காரணமாக நேற்றிரவு காலமானார்.
2012ல் விண்ணில் ஏவப்பட்ட ரிசாட் 1 திட்ட இயக்குநராகவும் பணியாற்றினார். கடைசியாக சந்திரயான் 3 கவுண்டவுனுக்கும் வளர்மதி குரல் கொடுத்துள்ளார். இவரது மறைவு விஞ்ஞானிகள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இனி செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்படும் போது விஞ்ஞானி வளர்மதியின் குரல் ஒலிக்காது என சோகத்துடன் பகிர்ந்து கொண்டனர்.
முன்னாள் ஜனாதிபதி மறைந்த அப்துல் கலாம் நினைவாக தமிழக அரசு நிறுவிய கலாம் விருதை, 2015-இல் முதல் முறையாக பெற்றவர் வளர்மதி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில், வளர்மதியின் மறைவிற்கு பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
திமுக எம்.பி.கனிமொழி டுவிட்டர் பதிவில்,
தமிழ்நாட்டைச் சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானி வளர்மதி மறைவெய்திய செய்தி வருத்தமளிக்கிறது.
RISAT-1 விண்கல திட்ட இயக்குநராக, சந்திரயான்-3 உட்படப் பல ஏவுதலுக்கு வர்ணனையாளராக, நாற்பது ஆண்டுகளாக இஸ்ரோவில் அர்ப்பணிப்போடு பணியாற்றியவர். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.