கலைஞர்களுக்கு சான்றிதழ்-ஊக்கத்தொகை வழங்கல்
கலைஞர்களுக்கு சான்றிதழ்-ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
பெரம்பலூர்
கலை பண்பாட்டு துறையின் சார்பில் பெரம்பலூர் மாவட்ட கலை மன்றத்தின் மூலம் கலைஞர்களின் கலை திறமையினை பாராட்டி சான்றிதழ், ஊக்கத்தொகை வழங்கும் விழா கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதில் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா கலந்து கொண்டு 2018-19-ம் ஆண்டிற்கான கலைமுதுமணி விருதினை தமுறு மேள கலைஞர் ஆறுமுகத்துக்கும், ஊக்கத்தொகையாக ரூ.20 ஆயிரமும், கலைநன்மணி விருதினை நாடக கலைஞர் ராஜேந்திரனுக்கும், ஊக்கத்தொகையாக ரூ.15 ஆயிரமும், கலைசுடர்மணி விருதினை பரதநாட்டிய கலைஞர் மணிகண்டனுக்கும், ஊக்கத்தொகையாக ரூ.10 ஆயிரமும், கலை சுடர்மணி விருதினை கரகாட்ட கலைஞர் செல்லதுரைக்கும், ஊக்கத்தொகையாக ரூ.6 ஆயிரமும், கலை இளமணி விருதினை சிலம்பம் வீரர் சிபிக்கும், ஊக்கத்தொகையாக ரூ.4 ஆயிரமும் மற்றும் அவர்களுக்கு பாராட்டு சான்றிதழையும் வழங்கி கவுரவித்தார். மேலும் 4-வது தேசிய அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான கபடி போட்டி சென்னையில் நடைபெற்றது. 16 மாநில அணிகள் பங்கேற்ற இப்போட்டியில், பெரம்பலூர் மாவட்ட எம்.ஜி.ஆர். விளையாட்டு மைதானத்தில் பயிற்சி பெற்ற தமிழ்நாடு சீனியர் மாற்றுத்திறனாளிகள் கபடி அணியினர் முதலிடம் பிடித்து சாதனை படைத்தனர். வெற்றிக்கு உறுதுணையாக இருந்த மாவட்ட நிர்வாகத்திற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கலெக்டரிடம் அணியின் மாற்றுத்திறனாளிகள் வெற்றி கோப்பையினை காண்பித்து வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்களை பெற்றனர்.