கல்லறை வழிப்பாதை தொடர்பாக பிரச்சினை
மார்த்தாண்டம் அருகே கல்லறை வழிப்பாதை பிரச்சினை தொடர்பாக போலீஸ் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
குழித்துறை:
மார்த்தாண்டம் அருகே கல்லறை வழிப்பாதை பிரச்சினை தொடர்பாக போலீஸ் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மார்த்தாண்டம் அருகே நல்லூர் காரவிளை பகுதியில் ஒரு பிரிவினரின் கல்லறை இருந்து வருகிறது. அந்த கல்லறைக்கு வழிப்பாதை சம்பந்தமாக இரு தரப்பினரிடையே பிரச்சினை இருந்து வந்தது.
இதுதொடர்பாக வந்த புகாரை தொடர்ந்து சப்-கலெக்டர் கவுசிக் இருதரப்பினரிடமும் விசாரணை நடத்த உத்தரவிட்டார். அதன்படி ஒரு தரப்பினர் விசாரணைக்கு ஆஜரானார்கள். அதே சமயத்தில் மற்றொரு தரப்பினர் ஆஜராகவில்லை.
இதனை தொடர்ந்து போலீசார் விசாரணைக்கு ஆஜராகாத தரப்பை சேர்ந்த ஒருவரை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். இதனை கண்டித்து மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிடப்போவதாக அந்த தரப்பினர் அறிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
உடனே போலீஸ் நிலையம் முன்பு தடுப்பு அமைத்து போலீசார் குவிக்கப்பட்டனர். ஆனால் அந்த தரப்பினர் போலீஸ் நிலையம் வராமல் விசாரணைக்கு சப்-கலெக்டர் அலுவலகத்திற்கு சென்றனர். பின்னர் போலீஸ் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது.