ஐ.டி. ஊழியரிடம் ரூ.17¼ லட்சம் மோசடிசைபர் கிரைம் போலீசார் விசாரணை
பர்கூரில் ஐ.டி. ஊழியரிடம் ரூ.17¼ லட்சம் மோசடி செய்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஐ.டி. ஊழியர்
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் துரைஸ்நகரை சேர்ந்தவர் தியாகு (வயது 26). இவர் பெங்களூருவில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரது வாட்ஸ் அப்பிற்கு ஒரு மெசேஜ் வந்தது. அதில் நாங்கள் அனுப்பும் 'யூ-டியூப்' வீடியோக்களை லைக் செய்தால் அதில் கிடைக்கும் வருமானத்தில் உங்களுக்கு குறிப்பிட்ட அளவு கமிஷன் கிடைக்கும் என கூறப்பட்டு இருந்தது.
தொடர்ந்து தியாகுவின் செல்போனுக்கு மீண்டும் மெசேஜ் வந்தது. அதில், நாங்கள் அனுப்பியுள்ள லிங்கில் பணம் செலுத்தினால் உங்களுக்கும் லாபத்தில் பங்கு தரப்படும். இதன் மூலம் முதலீட்டு பணம் இரட்டிப்பாகும் என கூறப்பட்டு இருந்தது. இதை நம்பி தியாகு அதிலும் சிறிதளவு பணம் முதலீடு செய்தார். அவருக்கு குறிப்பிட்ட அளவு லாபம் கிடைத்துள்ளது.
போலீசார் விசாரணை
இதையடுத்து தான் பார்க்கும் ஐ.டி. வேலையை விட, வாட்ஸ்-அப் லிங்குகளை பார்த்து பணம் அனுப்புவதிலேயே தியாகு ஆர்வம் காட்டி உள்ளார். அவர்கள் அனுப்பிய பல்வேறு லிங்குகள் மூலம் அவர்கள் கூறிய வங்கி கணக்குகளில் தியாகு ரூ.17 லட்சத்து 25 ஆயிரத்து 400 முதலீடு செய்துள்ளார்.
அதன்பின், அவர்களது லிங்குகள், இணையதளம், பண பரிவர்த்தனை எதுவுமே செயல்படவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த தியாகு இந்த மோசடி குறித்து கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த மோசடி குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.