அனைத்து துறைகளிலும் முன்னோடி மாநிலமாக உள்ளது


அனைத்து துறைகளிலும் முன்னோடி மாநிலமாக உள்ளது
x

இந்தியாவிலேயே தமிழகம் தான் அனைத்து துறைகளிலும் முன்னோடி மாநிலமாக உள்ளது என்று புதுக்கோட்டையில் அமைச்சர் ஐ.பெரியசாமி பேட்டி அளித்தார்.

புதுக்கோட்டை

வங்கி கணக்கில் வரவு

புதுக்கோட்டை மாவட்டத்தில் அன்னவாசல், விராலிமலை, கந்தர்வகோட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது நிருபர்களுக்கு அமைச்சர் ஐ.பெரியசாமி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நிதி பற்றாக்குறை என்பது தற்போது இல்லை. அனைத்து பணிகளுக்கும் முறையாக நிதி அளிக்கப்பட்டு வருகிறது. 100 நாள் வேலைத்திட்ட பணிகளுக்கு மத்திய அரசிடமிருந்து அவ்வப்போது நிதிகள் வந்தவுடன் பயனாளிகளுக்கு அவர்களுடைய ஊதியம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.

நடவடிக்கை எடுக்கப்படும்

வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் அசுத்தம் கலக்கப்பட்டது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருப்பதற்கு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கண்காணிக்கப்படுமா என்ற கேள்விக்கு, யாரோ ஒருவர் செய்த தவறுக்காக அனைவரையும் குற்றவாளிகள் ஆக்க முடியாது. தமிழகம் அமைதி பூங்காவாக உள்ளது. இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தூய்மை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. 66 ஆயிரம் குடும்பங்கள் இதனால் மகிழ்ச்சியோடு இருக்கின்றனர். மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆபரேட்டர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்துள்ளது குறித்து முதல்-அமைச்சரிடம் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும்.

ஊராட்சி தலைவர்களுக்கு வாகனம்...

ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் பல்வேறு கிராமங்களுக்கு செல்ல வேண்டும் என்பதால் அவர்களுக்கு வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது. அதே வேளையில் தமிழக அரசு ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு எந்த அளவிற்கு மரியாதை அளிக்க வேண்டுமோ அந்த அளவுக்கு மரியாதை அளித்து உள்ளது.

தமிழகத்தில் உள்ள 12,654 ஊராட்சிகளில் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கும் வாகனங்கள் வழங்குவது நடைமுறை சாத்தியமற்றது. ஊராட்சி மன்ற தலைவர்கள் சிறிய பகுதிகளுக்கு செல்ல வேண்டும் என்பதால் தலைவர்கள் நடந்தோ அல்லது சைக்கிளிலோ சென்று தங்களுடைய பணிகளை செய்ய வேண்டும். பெரும்பாலான ஊராட்சி தலைவர்கள் சொந்தமாக வாகனங்கள் வைத்துள்ளனர்.

முன்னோடி மாநிலம்

ஒவ்வொரு துறைக்கும் நிதி ஒதுக்கீடு என்பது பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. நிதி அதிகமாக தேவைப்படும்போது மீண்டும் கூடுதல் நிதி வழங்க முதல்-அமைச்சர் தயாராக உள்ளார். அண்ணா மறுமலர்ச்சி திட்ட பணிகள் உள்ளிட்ட அனைத்து துறை பணிகளும் முறையாக நடப்பதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 100 நாள் வேலை திட்ட பணிகளுக்கு ஊதியம் முறையாக தான் வழங்கப்பட்டு வருகிறது. இதில் எந்த முறைகேடும் நடக்கவில்லை. பயனாளிகளின் வங்கி கணக்கில் தான் ஊதியம் வரவு வைக்கப்படுகிறது.100 நாள் வேலை திட்டத்திற்கு தற்போது மத்திய அரசு ரூ.60 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கி உள்ளது. அதில் தமிழகத்தின் பங்கு வந்தவுடன் நிதி முறையாக பிரித்து அளிக்கப்படும். இந்தியாவிலேயே தமிழகம் தான் அனைத்து துறைகளிலும் முன்னோடி மாநிலமாக உள்ளது. கடந்த 5 ஆண்டு காலத்தில் 8 லட்சத்து 20 ஆயிரம் வீடுகள் தான் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு இருந்தது. ஆனால் தற்போதைய அரசால் 2 ஆண்டு காலத்திற்குள் 2 லட்சத்து 20 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டு உள்ளது.

முறைகேடு நடக்கவில்லை

பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் எந்த முறைகேடும் நடக்கவில்லை. இத்திட்டத்திற்கு மாநில அரசு தான் ரூ.1 லட்சத்து 74 ஆயிரம் தனது பங்கீடாக வழங்குகிறது. மத்திய அரசு ரூ.1 லட்சத்து 4 ஆயிரம் மட்டுமே வழங்குகிறது. அந்த நிதி நேரடியாக பயனாளிகளின் வங்கி கணக்கிற்கு வழங்கப்பட்டு வருகிறது. எனவே இதில் எந்த முறைகேடும் நடப்பதற்கு வாய்ப்பில்லை.

இவ்வாறு அவர் கூறினார். அப்போது கலெக்டர் கவிதாராமு உடனிருந்தார்.


Next Story