மண் சரிவில் சிக்கியவரை மீட்டபோது தலை துண்டான பரிதாபம்


மண் சரிவில் சிக்கியவரை மீட்டபோது தலை துண்டான பரிதாபம்
x

கழிவுநீர் குழாய் பதிக்கும் பணியின்போது மண் சரிவில் சிக்கிய தொழிலாளியை மீட்ட போது தலை துண்டிக்கப்பட்டு அவர் உயிரிழந்த சோக சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக பொக்லைன் டிரைவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை

மதுரை,

கழிவுநீர் குழாய் பதிக்கும் பணியின்போது மண் சரிவில் சிக்கிய தொழிலாளியை மீட்ட போது தலை துண்டிக்கப்பட்டு அவர் உயிரிழந்த சோக சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக பொக்லைன் டிரைவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறியதாவது:-

குழாய் பதிக்கும் பணி

மதுரை மாநகராட்சி 21-வது வார்டுக்கு உட்பட்ட பழைய விளாங்குடி ராமமூர்த்தி நகர் பகுதியில் மாநகராட்சி சார்பில் கழிவுநீர் குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

நேற்றும் பணிகள் நடந்தன. மாலையில் 4 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு இருந்தனர். சுமார் 15 அடி ஆழமுள்ள குழியில் ஈரோடு மாவட்டம் அமராவதி பகுதியை சேர்ந்த வீரணன் என்ற சதீஷ் (வயது 30) என்ற தொழிலாளி இறங்கி வேலை செய்து கொண்டிருந்தார்.

அப்போது, எதிர்பாராத விதமாக மண் சரிவு ஏற்பட்டது. இதில், வீரணன் சிக்கி விட்டார். இதனால், செய்வதறியாது திகைத்த சக தொழிலாளர்கள், உடனடியாக அவரை மீட்க முயன்றுள்ளனர்.

உயிரிழப்பு

அதற்காக, அங்கிருந்த பொக்லைனை பயன்படுத்தி உள்ளனர். அப்போது, வீரணனின் தலை பொக்லைனில் சிக்கியதால், தலை துண்டிக்கப்பட்ட நிலையில் எடுக்கப்பட்டு பரிதாபமாக அவர் உயிரிழந்தார். கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தால் தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் நேரில் விசாரணை நடத்தினர். மாநகராட்சி மேயர் இந்திராணி, கமிஷனர் சிம்ரன் ஜீத்சிங் காலொன் ஆகியோரும் வந்து விசாரணை நடத்தினர்.

உடல் மீட்பு

வீரணனின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.முதற்கட்டமாக, தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் என்ஜினீயர் சிக்கந்தர், பொக்லைன் டிரைவர் சுரேஷ், கண்காணிப்பாளர் பாலு ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், பொக்லைன் எந்திரத்தையும் பறிமுதல் செய்தனர்.

மதுரையில் தங்கி வேலை செய்து வந்த வீரணனை பார்ப்பதற்காக நேற்று காலைதான் ஈரோட்டில் இருந்து அவரது மனைவி மதுரை வந்தார். மீண்டும் அவர் ஈரோடு திரும்பிய சமயத்தில் இந்த சோக சம்பவம் நடந்துள்ளது. இதனால் அவர் மீண்டும் அங்கிருந்து புறப்பட்டு மதுரை வந்தார். அவர் கதறி அழுத காட்சி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. உயிரிழந்த வீரணனுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

பலியான வீரணன் குடும்பத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.

பொதுமக்கள் கோரிக்கை

கடந்த ஏப்ரல் மாதம் மதுரை நகரில் கழிவுநீர் தொட்டியில் மின் மோட்டாரை பழுது பார்க்கும் பணியின் போது 3 பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர். அதன் தொடர்ச்சியாக தற்போது மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது. எனவே இதுபோன்ற சம்பவங்களை தடுக்க மாநகராட்சி உரிய முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Related Tags :
Next Story