உசிலம்பட்டி அருகே பழமை மாறாமல் மாட்டு வண்டிகளில் ஊர்வலமாக சீர் எடுத்து சென்று அசத்தல்
உசிலம்பட்டி அருகே பழமை மாறாமல் மாட்டு வண்டிகளில் ஊர்வலமாக சீர் எடுத்து சென்று அசத்தினர்
உசிலம்பட்டி,
தமிழர்களின் பழக்க வழக்கங்களை ஆராய்ந்தால் அதில் பண்பாடு, பாரம்பரியம், கலாசாரம் நிறைந்து இருக்கும். ஒவ்வொரு விழாக்களிலும் குடும்ப உறவுகளுக்கு அதிக முக்கியத்துவமும், மரியாதையும் கொடுக்கின்றனர். குறிப்பாக காதுகுத்து, பூப்புனித நீராட்டு விழா உள்ளிட்ட விழாக்களுக்கு தாய்மாமன்கள் போட்டி போட்டு சீர் எடுத்து வருவதை பாரம்பரியமாக கொண்டுள்ளனர். அந்த வகையில், தமிழகத்தின் பழமை மாறாமல் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நடைபெற்ற காதணி விழாவில் 7 மாட்டு வண்டியில் தாய்மாமன் சீர்வரிசை கொண்டு வந்து அசத்திய நிகழ்வு நடைபெற்றது.
இந்த வகையில் உசிலம்பட்டி அருகே ரெயில்வே பீடர் ரோடு பகுதியைச் சேர்ந்த ஒரு குழந்தைக்கு காதணி விழா நடத்தினர். இந்த விழாவிற்கு கருமாத்தூரிலிருந்து வந்திருந்த அவரது தாய்மாமன் தலைமையில் ஊர்வலமாக வந்த பொதுமக்கள் பாரம்பரிய முறைப்படி 7 மாட்டு வண்டிகளில் வெற்றிலை, பாக்கு, பழம், கரும்பு, இனிப்புகள் மற்றும் சீர்வரிசை பொருட்களை ஏற்றி வந்தனர். மேலும் கரகாட்டம், ஒயிலாட்டம், மாதிரி யானை ஊர்வலம், கேரள செண்டை மேளங்கள் முழங்க கதகளி நடனம் என சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு தாய்மாமன் ஊர்வலமாக வந்தது உசிலம்பட்டி பகுதியில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.