பள்ளிகளில் மாணவர்கள் முக கவசம் அணிவது நல்லது - அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தல்


பள்ளிகளில் மாணவர்கள் முக கவசம் அணிவது நல்லது - அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தல்
x

சென்னை விமான நிலையத்தில் ஆய்வு செய்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், பள்ளிகள் திறக்கப்படும்போது மாணவர்கள் தொடர்ந்து முக கவசம் அணிவது நல்லது என அறிவுறுத்தினார்.

சென்னை

ஐரோப்பிய நாடுகள் உள்பட 15-க்கும் மேற்பட்ட நாடுகளில் குரங்கு அம்மை நோய் பரவி வருகிறது. தமிழகத்தில் இந்த நோய் பரவாமல் கட்டுப்படுத்தவும், கண்காணிக்கவும் குவைத், சார்ஜா உள்ளிட்ட நாடுகளில் இருந்து சென்னை வரும் விமான பயணிகளுக்கு விமான நிலையத்தில் தீவிர பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னை விமான நிலையத்தில் நடைபெறும் இந்த கண்காணிப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகளை தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு செய்தார். அவருடன் தமிழக மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் குரங்கு அம்மை நோய் தடுப்பு நடவடிக்கைகள் கடந்த 15 நாட்களாக தீவிரமாக நடைபெற்று வருகிறது. சென்னை, மதுரை, கோவை, திருச்சி பன்னாட்டு விமான நிலையங்களில் இதுவரை 630 விமானங்களில் வந்த 1 லட்சத்து 15 ஆயிரத்து 332 பயணிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளனர். இவர்களில் யாருக்கும் குரங்கு அம்மை பாதிப்பு இல்லை.

தமிழ்நாட்டில் குரங்கு அம்மை நோய் தாக்கம் இதுவரை இல்லை என்றாலும் வெளிநாடுகளில் இருந்து வருவோர் தொடர்ந்து பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

தமிழகத்தில் உள்ள கல்வி நிறுவனங்களில் பரவிய கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் நலமுடன் உள்ளனர்.

கொரோனா தொற்று இல்லாத கல்வி நிறுவனமாக ஐ.ஐ.டி. திகழ்கிறது. அண்ணா பல்கலைக்கழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 23 ஆக உள்ளது. வி.ஐ.டி. கல்வி நிறுவனத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

பள்ளிகள் திறக்கப்படும்போது மாணவர்கள் முக கவசம் அணிய வேண்டும். மாணவர்கள் தொடர்ந்து முக கவசம் அணிவது நல்லது. விரைவில் இது தொடர்பாக உரிய அறிவுறுத்தல் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story