நிவாரணத் தொகை வழங்கியதை கொச்சைப்படுத்துவது எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்புக்கு அழகானது அல்ல - அமைச்சர் மா.சுப்பிரமணியன்


நிவாரணத் தொகை வழங்கியதை கொச்சைப்படுத்துவது எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்புக்கு அழகானது அல்ல - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
x

நிவாரணத் தொகை வழங்கியதை கொச்சைப்படுத்துவது எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்புக்கு அழகானது அல்ல என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

கும்பகோணம்,

கும்பகோணத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச் சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பத்தின் எதிர்காலத்தை கருத்தில் மனிதாபத்தோடு முதல்-அமைச்சர் நிவாரணம் அளித்துள்ளார். கடந்த அதிமுக ஆட்சியில் முதல்-அமைச்சராக இருந்தவர்களும் நிவாரணம் அளித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத் தொகையை வழங்கியதை கொச்சைப்படுத்துவது என்பது,எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்புக்கு அழகானது அல்ல.

இந்தப் பிரச்சனைக்கு முதல்-அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என சில அரசியல் தலைவர் கூறுகிறார்கள். அப்படி என்றால், முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா, ஓபிஎஸ், இபிஎஸ் போன்றவர்கள் எத்தனை முறை ராஜினாமா செய்திருக்க வேண்டும். கடந்த காலங்களில் கொடநாட்டில் நடந்த 5 கொலை, தற்கொலைகளுக்கு, எடப்பாடி பழனிச்சாமி எத்தனை முறை ராஜினாமா செய்திருக்க வேண்டும். எடப்பாடி பழனிச்சாமி அடுத்த முறை பேசும் போது கவனமுடன் பேச வேண்டும்.

எத்தனால் விலை அதிகம் என்பதால் கள்ளச் சாராயம் காய்ச்சும் நபர்கள், குறைந்த விலையிலான மெத்தனாலை பயன்படுத்தியுள்ளனர். இதனை அதிகமாகப் பயன்படுத்தும் போது, உயிரிழப்புகளை உருவாக்கும். இதனைத் தொடர்ந்து எத்தனால் மற்றும் மெத்தனால் விநியோகம், விற்பனை, உற்பத்தி, அதன் பயன்பாடு ஆகியவற்றைக் கண்காணிக்கவும். வேறு பயன்பாட்டுக்குப் பயன்படுத்தப்படுகிறதா என்பது குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், சுகாதாரத் துறையினர் அனைவரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம்.

இதுபோன்ற விஷயங்களில் எடுத்தோம், கவுத்தோம் என அரசியல் தலைவர்கள் பேசுவது முறையல்ல. கிராமங்களில் கள்ளச் சாராயம் காய்ச்சுவது குறித்து, அப்பகுதி மக்கள் தைரியத்துடன் போலீசாருக்கும், வருவாய்த் துறையினருக்கும் தகவல் அளிக்கும் மனநிலையை பெற வேண்டும். குறிப்பாக, இளைஞர்கள் தன்னார்வ அடிப்படையில், இது போன்ற குற்றச் செயல்களை தடுக்கும் பணியில் ஈடுபட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story