கவர்னர் விருந்தில் பங்கேற்க வேண்டும் என கட்டாயம் இல்லை- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்


கவர்னர் விருந்தில் பங்கேற்க வேண்டும் என கட்டாயம் இல்லை- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
x
தினத்தந்தி 16 Aug 2022 7:27 AM GMT (Updated: 2022-08-16T13:26:23+05:30)

ஓ.பன்னீர் செல்வம் தரப்பிடம் 80 சதவீதம் அ.தி.மு.க. வினர் இல்லை; 80 பேர் மட்டுமே உள்ளனர் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருக்கிறார்.

சென்னை:

போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய உயர்வை வலியுறுத்தியும் பேச்சுவார்த்தையில் உழியர்களுக்கான குழுவில் அண்ணா தொழிற்சங்கம் புறக்கணிக்கப்படுவதை கண்டித்து உண்ணாவிரதம் நடத்தப்பட்டு வருகிறது.

சென்னை பல்லவன் சாலையில் அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் சார்பில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதனால் பல்லவன் சாலையில் இருந்து சென்ட்ரல் நோக்கி செல்லும் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

உண்ணாவிரத போராட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், எம்.ஆர்.விஜயபாஸ்கர், ஜெயக்குமார், கோகுல இந்திரா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இதில் பேசிய ஜெயக்குமார் கூறியதாவது:-

போக்குவரத்துத் துறையை தனியார்மயமாக்குவதை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்தோம்.ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் அகவிலைப்படி மற்றும் பணப்பலன்களை உடனே வழங்கிட வேண்டும். போக்குவரத்து நிலைக் குழுவில் அண்ணா தொழிற்சங்க பேரவையை சேர்க்காமல் அரசாணை வெளியிட்டது. அ.தி.மு.க ஆட்சியில் போக்குவரத்துத் துறைக்கு பொற்காலமாக இருந்தது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் 14வது ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.

ஓ.பன்னீர் செல்வர்ம் தரப்பிடம் 80 சதவீதம் அ.தி.மு.க.வினர் இல்லை; 80 பேர் மட்டுமே உள்ளனர். சசிகலா, தினகரனை எந்த நிலையிலும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.

ஓ.பன்னீர்செல்வம் முடிந்தால் ஆயிரம் பேரை கூட்டி போராட்டம் நடத்தி காட்டட்டும் . கவர்னரின் விருந்தில் பங்கேற்க வேண்டும் என கட்டாயம் இல்லை.

எதிர்க்கட்சிகளை பழி வாங்குவதற்காக மட்டுமே காவல்துறை பயன்படுத்தப்படுகிறது. தவிர காவல்துறை தற்போது சுதந்திரமாக செயல்படவில்லை. மத்திய அரசுக்கு இணங்கி செல்வதைத்தான் ஆளும் தி.மு.க. அரசு செய்து கொண்டிருக்கிறது.

டிடிவி தினகரனுக்கு அ.தி.மு.க.வை பற்றி பேசுவதற்கு எந்த தகுதியும் இல்லை முதல்-அமைச்சர் ஸ்டாலின் டெல்லி செல்வதால் தமிழகத்திற்கு பயனில்லை. வேறு யாருக்காவது பிரயோஜனமாக இருக்கலாம். இன்று தி.மு.க. ஆட்சியில் காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளன என கூறினார்.


Next Story