ஜெயலலிதா உயிருடன் இல்லாத இந்த சமயத்தில் நடந்த சம்பவங்களை மறைக்க முயல்வது அரசியல் நாகரிகம் அல்ல - டிடிவி தினகரன்


ஜெயலலிதா உயிருடன் இல்லாத இந்த சமயத்தில் நடந்த சம்பவங்களை மறைக்க முயல்வது அரசியல் நாகரிகம் அல்ல - டிடிவி தினகரன்
x

ஜெயலலிதாவை 1989 ஆம் ஆண்டு தமிழக சட்டசபையில் தி.மு.க.வினர் எவ்வாறெல்லாம் அநாகரிகமாக நடத்தினார்கள் என்பது தமிழக மக்கள் அனைவரும் அறிந்ததே என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

சென்னை,

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

"முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை 1989 ஆம் ஆண்டு மார்ச் 25 ஆம் நாள் தமிழக சட்டசபையில் தி.மு.க.வினர் எவ்வாறெல்லாம் அநாகரிகமாக நடத்தினார்கள் என்பது தமிழக மக்கள் அனைவரும் அறிந்ததே !

ஜெயலலிதாவோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக போட்டி அ.தி.மு.க. என ஆரம்பித்து வெளியேறிய திருநாவுக்கரசு சொன்னதாக வெளியான ஒரு செய்தியை மேற்கோள்காட்டி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ஜெயலலிதா மீது கொலை வெறித்தாக்குதல் நடத்தி துட்சாதன நாடகத்தை அரங்கேற்றிய மூத்த அமைச்சரையும், அதை வேடிக்கை பார்த்த பல சாட்சிகளையும் தன்னுடன் வைத்துக்கொண்டே ஆங்கில பத்திரிகை ஒன்றிற்கு உண்மையைத் திரித்து சொல்லியிருப்பது முழு பூசணிக்காயைச் சோற்றில் மறைப்பதற்குச் சமமாகும்.

1989 ஆம் ஆண்டு சட்டப்பேரவைக்குள் நடைபெற்ற அந்த மோசமான சம்பவத்தைப் பற்றிய செய்திகளும் புகைப்படங்களும், அன்றைய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்களில் வெளியானதை மறந்துவிட்டு ஸ்டாலின் பேசுவது அவர் வகிக்கும் முதல்-அமைச்சர் பொறுப்பிற்கு அழகல்ல.

ஜெயலலிதா உயிருடன் இருந்தவரையில் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எவர் ஒருவரும், ஏன் அவரது தந்தை மறைந்த கருணாநிதி கூட இந்த சம்பவத்தை மறுத்தது இல்லை. ஆனால் ஜெயலலிதா உயிருடன் இல்லாத இந்த சமயத்தில் நடந்த சம்பவங்களை மறைக்க முயல்வது அரசியல் நாகரிகம் அல்ல" என்று கூறியுள்ளார்.


Next Story