தமிழக அரசுக்கு தொல்லை கொடுப்பது நோக்கம் அல்ல -அண்ணாமலை பேட்டி
தமிழக அரசுக்கு தொல்லை கொடுப்பது பா.ஜனதா நோக்கம் அல்ல என்று கோவை கோட்டை ஈஸ்வரன் கோவிலில் வழிபாடு நடத்திய பிறகு மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.
கோவை,
கோவையில் உக்கடம் கோட்டைமேடு பகுதியில் சங்கமேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு கடந்த 23-ந் தேதி கார் வெடித்து ஜமேஷா முபின்(வயது 28) என்ற வாலிபர் பலியானார். இந்த சம்பவம் நடைபெற்ற இடத்தில் உள்ள சங்கமேஸ்வரர் கோவிலுக்கு பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை நேற்று வந்தார்.
பின்னர் சம்பவ இடத்தை பார்வையிட்டுவிட்டு, கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அங்கு நடைபெற்ற கந்த சஷ்டி சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டார்.
பின்னர் அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது:-
கோவையில் நடக்க இருந்த பெரும் அசம்பாவிதம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் கோட்டை ஈஸ்வரனுக்கு நன்றி சொல்லும் விதமாக இங்கு வந்துள்ளோம். மேலும் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி கந்த சஷ்டி பாடினோம்.
ஓரளவு வளர்ச்சி
கோவையில் கடந்த 1998-ம் ஆண்டு நடந்த குண்டு வெடிப்புக்கு பிறகு எதிர்பார்த்த வளர்ச்சி இல்லை. கடந்த 10 ஆண்டுகளாக ஓரளவு வளர்ச்சியை நோக்கி சென்றது. தற்போது இந்த வெடிகுண்டு மற்றும் தற்கொலை தாக்குதல் நடைபெற்றுள்ளது. காக்கும் கடவுள் காவல்துறை நண்பர்கள்தான். அவர்கள் மேலும் தாக்குதல் நடக்காமல் சிறப்பான விசாரணை மூலம் தடுத்துள்ளனர்.
பா.ஜனதா எந்தவித மத சாயத்தையும் பூசவில்லை. சனாதனம் என்பது யாரையும் பிரித்து பார்க்க கூடாது என்பதுதான். அடுத்த கட்டத்திற்கு கோவை செல்ல வேண்டும்.
தற்கொலை தாக்குதல்தான்
மாநில அரசை நன்றாக செயல்பட வைக்க வேண்டும் என்பதற்குதான் கருத்துகள் சொல்லப்படுகின்றதே தவிர காவல்துறையை குறைசொல்ல வேண்டும் என்ற எண்ணம் கிடையாது. யாருக்கும் எதிராக கருத்துகளை சொல்லவில்லை. கோவில் பக்கத்தில் கார் வெடித்த இடத்தில் கோலி குண்டுகள், ஆணி போன்றவை இருக்கிறது(அப்போது பாக்கெட்டில் இருந்து அவற்றை எடுத்து காட்டினார்). இதை செய்தவர்கள் நிச்சயமாக சாதாரணமாக செய்யவில்லை. உயிர்சேதம் ஏற்படுத்த வேண்டும் என்று இதனை செய்து இருக்கின்றனர். புலனாய்வில் சில தவறுகள் நடந்து இருக்கிறது.
இந்தியா முழுவதும் கண்காணிக்க வேண்டும் என்று அளித்த பட்டியலில் 89-வது நபரான முபினை கண்காணிக்க வேண்டும் என்று கூறியும், தமிழக புலனாய்வுத்துறை கண்காணிக்க தவறிவிட்டது. கார் சிலிண்டர் வெடிப்பு என்று அரசு தொடர்ந்து கூறி வருகிறது. ஆனால் இது தற்கொலை தாக்குதல்தான்.
என்.ஐ.ஏ. என்பது விசாரணைதான் செய்யும். முழுமையாக கண்காணிப்பது என்பது அந்தந்த மாநில காவல்துறைதான். எனவேதான் இந்த விஷயத்தில் தமிழக காவல்துறையை மட்டும் குறைகூறுகிறேன். என்.ஐ.ஏ.வை குறை கூறவில்லை என்பது தவறானது.
நோக்கம் அல்ல
கார் சிலிண்டர் விபத்து என்று சொன்னால் மக்களிடம் எச்சரிக்கை உணர்வு இல்லாமல் போகும். பொதுமக்களுக்கு சில தகவல்களை சொல்லியாக வேண்டும். இதுதான் நோக்கமே தவிர வேறு காரணம் கிடையாது. தமிழக அரசு தனது ஆட்சியை முழுவதுமாக பூர்த்தி செய்ய வேண்டும். தமிழக அரசுக்கு தொல்லை கொடுப்பது பா.ஜனதாவின் நோக்கம் அல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து பத்திரிகையாளர்களை பார்த்து நான் குரங்கு என்று சொல்லவில்லை. குரங்கு மாதிரி என்றுதான் சொன்னேன். இரண்டுக்கும் வேறு வேறு அர்த்தம் என்று பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.
அப்போது பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தி தொடர்ந்து பேசுவதாக பத்திரிகையாளர்கள் வாக்குவாதம் செய்தனர். எனினும் அவர், நான் மன்னிப்பு கேட்க முடியாது, சரியாக செயல்படுகிறேன் என்று கூறிவிட்டு சென்றார்.