5 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது


5 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது
x

5 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது

தஞ்சாவூர்

பட்டுக்கோட்டை வட்டாரத்தில் 5 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என்று வேளாண்மை உதவி இயக்குனர் மாலதி தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

5 ஆயிரம் ஏக்கர் குறுவை சாகுபடி

பட்டுக்கோட்டை வட்டாரத்தில் 5 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி குறுவை சாகுபடி விவசாயிகளால் பயிரிடப்பட்டு வருகிறது. தண்ணீரை சேமிக்கவும் பயிரின் வளர்ச்சி அதிகரிக்கவும் பயிரின் தேவையை அறிந்து நாம் நீர் கட்டுதல் வேண்டும். நீர் மறைய நீர் கட்டுதல் மூலம் பயிரின் வேர் பகுதியில் நல்ல காற்றோட்டத்தை ஏற்படுத்த முடிகிறது. இந்த சூழ்நிலையானது நல்ல வளர்ச்சிக்கு வித்திடுகிறது. நீர் மறைய நீர் கட்டுதல் மூலம் 30 முதல் 50 சதவீதம் நீரின் தேவையை நாம் குறைக்கலாம்.

நீர் பாசனம் செய்ய வேண்டும்

காய்ச்சலும் நீர் பாசனம் நடவு செய்த ஒரு வாரம் அல்லது 10 நாட்களுக்கு பின்பு தொடங்க வேண்டும். வயலில் நீர்மட்டத்தை அளவிட்டு அதற்கு ஏற்ப நீர் பாசனம் செய்ய வேண்டும். வயலில் உள்ள நீர்மட்டத்தை அளவிட செய்வதற்கு நீர் குழாயானது தேவைப்படுகிறது. இந்த அமைப்பானது 30 சென்டிமீட்டர் உயரத்தையும், 10 முதல் 15 சென்டிமீட்டர் விட்டத்தையும் கொண்ட பி.வி.சி. குழாய் ஆகும். இதன் நடுப்பகுதியில் 15 சென்டிமீட்டர் உயரம் வரை 0.5 சென்டிமீட்டர் விட்டம் கொண்ட அளவில் இரண்டு சென்டிமீட்டர் இடைவெளியில் துளைகள் போடப்பட வேண்டும்.

வயலில் நீர்மட்டத்தை அளவீடு செய்வதற்கு இந்த நீர் மட்ட அளவீடு செய்யும் குழாயினை வயலின் மத்திய பகுதி அல்லது எளிதாக நீர்மட்டத்தை அளவிட செய்வதற்கு ஏற்ற இடத்தில் மண்ணிற்கு அடியில் 20 சென்டிமீட்டர் ஆழத்தில் புதைக்க வேண்டும்.

சராசரி நீர்மட்ட அளவு

இந்த நீர் குழாயில் உள்ள நீர் மட்ட அளவானது வயலின் சராசரி நீர் மட்ட அளவாக கருதப்படுகிறது. நீர்மட்டம் தரை மட்டத்திலிருந்து 15 சென்டிமீட்டர் அளவிற்கு கீழ் செல்லும் போது வயலில் நீர் பாசனம் செய்ய வேண்டும். பூப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன் மற்றும் பின் பாசன நீர் தரைக்கு மேல் 5 சென்டிமீட்டர் மட்டத்திற்கு நிறுத்தி வைக்க வேண்டும்.

நீர்மறையை நீர் கட்டுவது அந்த பகுதியின் மண் வகை, பருவ காலம் மற்றும் மழைப்பொழிவு ஆகியவற்றை பொருத்து மாறுபடுகிறது. நீர்மறைய நீர் கட்டுவதன் மூலம் பாசனத்தை அதிகரித்து அதிக விளை நிலத்தை விவசாயத்திற்கு பயனுள்ள முறையில் பயன்படுத்த முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story