தாளவாடி மலைப்பகுதியில் தொடர் மழையால் மக்காச்சோள பயிர் அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் தவிப்பு


தாளவாடி மலைப்பகுதியில் தொடர் மழையால்  மக்காச்சோள பயிர் அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் தவிப்பு
x

விவசாயிகள் தவிப்பு

ஈரோடு

தாளவாடி மலைப்பகுதியில் தொடர் மழையால் மக்காச்சோள பயிர் அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகிறார்கள்.

தொடர் மழை

தாளவாடி மலைப்பகுதியில் தாளவாடி தொட்டகஞ்சனூர், சூசைபுரம், மெட்டல்வாடி, அருள்வாடி, பனக்கள்ளி, கெட்டவாடி, திகினாரை, தலமலை, ஆசனூர், கேர்மாளம், குழியாடா, திங்களூர் என 80-க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. இங்கு ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் மானாவாரி நிலங்களில் மக்காச்சோளம் பயிர் செய்வது வழக்கம். அதேபோல இந்த ஆண்டும் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளம் பயிர் செய்தனர்.

இதுகுறித்து தாளவாடி மலைப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:-

மக்காச்சோளம் 3 மாத கால பயிராகும். தற்போது மக்காச்சோள பயிர் நன்கு வளர்ந்து அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தாளவாடி சுற்று வட்டார பகுதிகளில் சாரல் மழையாகவும், அவ்வப்போது பலத்த மழையாகவும் பெய்து வருகிறது.

விவசாயிகள் தவிப்பு

இதனால் மக்காச்சோள பயிரை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகிறோம். அதேபோல ஒரு சில விவசாயிகள் மக்காச்சோளப் பயிரை அறுவடை செய்து உலர்த்த முடியாமல் அவதிப்படுகிறோம்.

பல லட்ச ரூபாய் கடன் பெற்று மக்காச்சோளம் பயிர் செய்தோம். ஆனால் தற்போது அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தும் மழை பெய்து வருவதால் அறுவடை செய்ய முடியவில்லை. இதனால் கவலையடைந்துள்ளோம். இதே போல தொடர்ந்து மழை நீடித்தால் மக்காச்சோளம் பயிரில் முளைப்பு தன்மை ஏற்பட்டு அனைத்தும் வீணாகிவிடும்.

இ்வ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.


Next Story