செஞ்சி அருகே மின்சாரம் தாக்கி பெண் சாவு அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததால் நேர்ந்த பரிதாபம்
செஞ்சி அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த பெண் மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தார்.
செஞ்சி,
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள கப்பை கிராமத்தை சேர்ந்தவர் புருஷோத்தமன். இவருடைய மனைவி லட்சுமி(வயது 40). இவர் நேற்று காலை தனது பசுமாட்டை மேய்ச்சலுக்காக வயலுக்கு ஓட்டி சென்றார்.
அப்போது தேவநாதன் மனைவி இன்பவள்ளி என்பவரது நிலத்தின் அருகே சென்ற போது ஏற்கனவே அங்கு அறுந்து கிடந்த மின் கம்பியை லட்சுமி எதிர்பாராதவிதமாக மிதித்ததாக தெரிகிறது. இதில் மின்சாரம் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் மின்சாரம் தாக்கியதில் அவர் ஓட்டி வந்த பசுமாடும் சம்பவ இடத்திலேயே செத்தது.
போலீசார் விசாரணை
இதைபார்த்த அங்கிருந்தவர்கள் உடனடியாக போலீசாருக்கும், மின் வாரியத்திற்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் மின்வாரிய ஊழியர்கள் விரைந்து வந்து மின்தடை செய்தனர். மேலும் அனந்தபுரம் போலீசாரும் அங்கு வந்து லட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே இச்சம்பவம் பற்றி அறிந்த மயிலம் சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமார், மின்சாரம் தாக்கி இறந்த லட்சுமி ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் அவருடைய குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என சட்டசபையில் வலியுறுத்தினார்.