முதல்-அமைச்சரின் வெளிநாட்டு பயணம் குறித்து குறை கூறுவது தவறு; அமைச்சர் கே.என்.நேரு பேட்டி


முதல்-அமைச்சரின் வெளிநாட்டு பயணம் குறித்து குறை கூறுவது தவறு; அமைச்சர் கே.என்.நேரு பேட்டி
x

முதல்-அமைச்சரின் வெளிநாட்டு பயணம் குறித்து குறை கூறுவது தவறு என்று அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.

திருச்சி

புதிய கட்டிடம்

திருச்சி மாநகராட்சி பொன்மலை மண்டலத்துக்கு உட்பட்ட எடமலைப்பட்டிபுதூர் காளியம்மன் கோவில் தெருவில் மாநகராட்சி தொடக்க மற்றும் உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. தொடக்கப்பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை 842 மாணவர்களும், 6 முதல் 10-ம் வகுப்பு வரை 722 மாணவர்களும் என ெமாத்தம் 1,564 மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். தொடக்கப்பள்ளியும், உயர்நிலைப்பள்ளியும் ஒரே வளாகத்தில் அமைந்துள்ளது.

இதையடுத்து புதிய பள்ளி கட்டிடம் கட்டுவதற்காக எடமலைப்பட்டிபுதூர் ராஜீவ்காந்தி நகரில் இடம் தேர்வு செய்யப்பட்டு கடந்த மாதம் அமைச்சர் கே.என்.நேரு அடிக்கல் நாட்டினார். இந்த புதிய பள்ளி கட்டிடம் 2.91 ஏக்கர் பரப்பளவில் ரூ.9 கோடியே 90 லட்சத்தில் கட்டப்பட உள்ளது. புதிய கட்டிட கட்டுமான பணிக்கான பூமி பூஜை நேற்று காலை நடைபெற்றது. இதனை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்து பள்ளி மாதிரியை பார்வையிட்டார்.

பின்னர் பஞ்சப்பூரில் புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகளை அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நிகழ்ச்சியில் கலெக்டர் பிரதீப் குமார், மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், நகர பொறியாளர் சிவபாதம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களிடம் கூறியதாவது:-

ஜங்ஷன் மேம்பாலம்

திருச்சி ஜங்ஷன் ரெயில்வே மேம்பால பணிகள் முற்றிலும் முடிவடைந்துவிட்டது. இந்த பாலம் 29-ந் தேதி காலையில் திறக்கப்படும். கொரோனா தாக்கத்தால் ஆட்கள் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு பணிகளால் ஒப்பந்ததாரர்கள் பணியை முடித்து கொடுக்க தாமதமானது. திருச்சி மாவட்டத்தில் முடிவடையாமல் நிலுவையில் உள்ள அனைத்து பணிகளும் இன்னும் 6 மாதத்துக்குள் முடிவடையும். பஞ்சப்பூரில் அமையவுள்ள பஸ் நிலையத்தில் 500 பஸ்கள் நிறுத்தப்படும். மொத்தம் 3 லட்சம் சதுர அடியில் வியாபாரிகளுக்கு வணிகம் செய்ய இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களை அழைத்துக் கொண்டு அமெரிக்காவுக்கு பயணம் சென்றார். ஆனால் எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை. ஆனால் தற்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்தபிறகு, தொழில்துறையோடு நிறைய ஒப்பந்தம் போட்டு, 2 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் வகையில் நிறைய முதலீட்டை ஈர்த்துள்ளார். சிங்கப்பூரில் புதிதாக 6 ஒப்பந்தம் போட்டுள்ளார். அடுத்து ஜப்பானுக்கு சென்று ஒப்பந்தம் போட இருக்கிறார்.

குறை கூறுவது தவறு

எதிர்க்கட்சியினர் முதல்-அமைச்சர் இங்கிருந்தாலும் குறை சொல்வார்கள். வெளிநாடு சென்றாலும் குறை சொல்வார்கள். ஆனால் தமிழகத்துக்கு நல்லது செய்வதற்காக தான் முதல்-அமைச்சர் சென்றுள்ளார். இதை கேலி, கிண்டல் செய்து, குறை கூறுவது தவறு.

இப்போது நிறையபேர் வெளிநாட்டுக்கு சென்று வருகிறார்கள். தமிழகத்துக்கு நல்லது செய்வதற்குக்கூட கண்டனம் தெரிவித்தால் அதற்கு என்ன செய்ய முடியும். புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பதை புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து முடிவு செய்துள்ளார்கள். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story