கூடினோம், கலைந்தோம், நண்பர்களாக பிரிந்தோம் என்று தான் நடக்கும்


கூடினோம், கலைந்தோம், நண்பர்களாக பிரிந்தோம் என்று தான் நடக்கும்
x
தினத்தந்தி 26 Jun 2023 12:15 AM IST (Updated: 26 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கூடினோம், கலைந்தோம், நண்பர்களாக பிரிந்தோம் என்று தான் நடக்கும் என ஒன்று கூடிய எதிர்க்கட்சிகள் கூட்டம் குறித்து முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

கூடினோம், கலைந்தோம், நண்பர்களாக பிரிந்தோம் என்று தான் நடக்கும் என ஒன்று கூடிய எதிர்க்கட்சிகள் கூட்டம் குறித்து முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

துண்டு பிரசுரம் வினியோகம்

குமரி மாவட்ட பா.ஜனதா சார்பில் மத்திய அரசின் 9 ஆண்டு கால சாதனை விளக்க துண்டு பிரசுரம் வினியோகம் நாகர்கோவில் சகோதரர் தெருவில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பங்கேற்று வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கினார். மேலும் நிலையான ஆட்சி, நேர்மையான ஆட்சி என்று எழுதப்பட்ட ஸ்டிக்கரையும் வீடுகளில் ஒட்டினார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1975-ம் ஆண்டு ஜூன் 25-ந் தேதி அவசர நிலை பிரகடனத்தை அறிவித்தார். இதனை நாடு முழுவதும் பா.ஜனதா கட்சியால் நினைவுபடுத்தும் நாளாக நடத்தி வருகிறோம். அதோடு மத்திய அரசின் 9 ஆண்டு கால சாதனையை மக்களிடம் கொண்டு செல்ல கடந்த 20-ந் தேதி முதல் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வீடு, வீடாக சென்று வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதுதொடர்ந்து 30-ந் தேதி வரை நடக்கும்.

பொது வேட்பாளர்

அனைத்து மாநிலங்களிலும், மாவட்டங்களிலும் துண்டு பிரசுரம் வழங்கப்பட்டு வருகிறது. நாகர்கோவில் நாகராஜா திடலில் வரும் 2-ந் தேதி நடைபெறும் குமரி சங்கம் நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பார்கள். கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் பா.ஜனதாவின் வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்று.

பாட்னாவில் எதிர்க்கட்சியினர் ஒன்று கூடினர். அதன்பிறகு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்த கூட்டம் குறித்து பேசும் போது தெளிவாக கூறி இருக்கிறார்.

அதாவது ஒன்று கூட்டணி. இல்லை எனில் சீட் ஒதுக்கீடு இல்லை எனில் பொது வேட்பாளர் என்று கூறி இருக்கிறார். ஆனால் என்னுடைய கருத்து என்னவெனில், கூடினோம். கலைந்தோம். நண்பர்களாக பிரிந்தோம். இது தான் நடக்கும் என்பதாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

துண்டு பிரசுரம் வினியோகத்தில் மாநிலச் செயலாளர் மீனாதேவ், மாவட்ட பொருளாளர் முத்துராமன், துணைத் தலைவர் தேவ் உள்பட பலர் உடனிருந்தனர்.


Next Story