சரியாக நட்டு வைக்காததாலும் விழுந்திருக்கலாம்: "அறிவிப்பு பலகை விழுந்து பெண் இறந்ததற்கு கடவுள்தான் காரணம் என்பதை ஏற்க இயலாது"- ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க நெடுஞ்சாலைத்துறைக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
நான்கு வழிச்சாலையோரம் இருந்த அறிவிப்பு பலகை விழுந்ததில் நடந்து சென்ற பெண் இறந்த சம்பவத்திற்கு கடவுள்தான் காரணம் என்பதை ஏற்க இயலாது. அவருடைய குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் இழப்பீட்டை 8 வாரத்தில் வழங்கும்படி நெடுஞ்சாலைத்துறை ஆணையத்துக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
நான்கு வழிச்சாலையோரம் இருந்த அறிவிப்பு பலகை விழுந்ததில் நடந்து சென்ற பெண் இறந்த சம்பவத்திற்கு கடவுள்தான் காரணம் என்பதை ஏற்க இயலாது. அவருடைய குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் இழப்பீட்டை 8 வாரத்தில் வழங்கும்படி நெடுஞ்சாலைத்துறை ஆணையத்துக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
அறிவிப்பு பலகை விழுந்து பெண் பலி
திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பிச்சை, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
எனது மனைவி பொன்னம்மாள்(வயது 59). கடந்த 15.7.2018 அன்று மதியம் 12 மணி அளவில் திண்டுக்கல்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பொன்னம்பலபட்டி டோல்கேட் அருகில் நடந்து சென்றார். அப்போது அங்கு டோல்கேட் நிறுவனம் சார்பில் வைக்கப்பட்டு இருந்த இரும்பு அறிவிப்பு பலகை திடீரென பொன்னம்மாள் மீது விழுந்தது.
இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து வையம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையே பொன்னம்மாள் இறந்ததற்கு ரூ.5 லட்சம் இழப்பீட்டு தொகையை வழங்கும்படி தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
கடவுள் காரணமா?
இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஆஜரான வக்கீல், பயங்கர காற்று வீசியதன் காரணமாகத்தான் அறிவிப்பு பலகை விழுந்தது. இந்த விபத்தில் சிக்கி மனுதாரரின் மனைவி இறந்துள்ளார். இதை கடவுளின் செயலாக கருதி, வழக்கில் இருந்து நெடுஞ்சாலைத்துறையை விடுவிக்க வேண்டும். கட்டாயம் இழப்பீட்டு தொகை கோரினால் பொன்னம்பலபட்டி டோல்கேட் மேலாளர்தான் பொறுப்பாவார் என வாதாடினார்.
விசாரணை முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
டோல்கேட் அறிவிப்பு பலகை விழுந்ததில் படுகாயம் அடைந்து இறந்த மனுதாரரின் மனைவிக்கு இழப்பீடு வழங்கும் பொறுப்பு தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்துக்கு மட்டுமே உள்ளது. இந்த விபத்து கடவுள் செயலால் நடந்துள்ளது என்பதை ஏற்க முடியாது. மிகப்பெரிய இரும்பு பலகை விழுந்து, மனுதாரரின் மனைவி இறந்துள்ளார். இரும்பு அறிவிப்பு பலகை எப்படி விழுந்தது என்பதற்கான காரணத்தை அறிந்து கொள்வதற்கு இந்த கோர்ட்டு விரும்பவில்லை.
ரூ.5 லட்சம் இழப்பீடு
ஏனென்றால் அந்த பலகை சரியாக நட்டு வைக்கப்படாமல் இருந்ததாலும் விழுந்திருக்கலாம். அதற்கான பொறுப்பை சம்பந்தப்பட்டவர்கள்தான் ஏற்க வேண்டும். எனவே நெடுஞ்சாலைத்துறையின் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது. மனுதாரரின் மனைவி கூலி வேலை செய்து வந்தார்.
அவரது இறப்புக்கு ரூ.5 லட்சத்தை மட்டுமே இழப்பீடாக வழங்கும்படி மனுதாரர் கோரியுள்ளார். இது கணிசமான தொகை தான். எனவே மனுதாரருக்கு ரூ.5 லட்சத்தை 8 வாரத்தில் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் வழங்க வேண்டும். தவறும்பட்சத்தில் 6 சதவீத வட்டியுடன் செலுத்த வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.