குமரியில் இரவு-பகலாக கொட்டி தீர்த்த மழை


குமரியில் இரவு-பகலாக கொட்டி தீர்த்த மழை
x

குமரி மாவட்டத்தில் இரவு- பகலாக கனமழை கொட்டி தீர்த்தது. திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் இரவு- பகலாக கனமழை கொட்டி தீர்த்தது. திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

கொட்டி தீர்த்த மழை

தமிழக பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. அதன்படி குமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. அதிலும் நேற்று முன்தினம் இரவு தொடங்கிய மழை விடிய, விடிய கொட்டி தீர்த்தது. அத்துடன் நேற்று பகலிலும் ஓயாமல் பெய்து கொண்டே இருந்தது.

நாகர்கோவில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு சுமார் 9 மணியளவில் மழை பெய்ய தொடங்கியது. நேற்று காலை, மதியம் மற்றும் மாலையிலும் மழை பெய்து கொண்டே இருந்தது. சிறிது நேரம் சாரல் மழையாகவும், சிறிது நேரம் பலத்த மழையாகவும் மாறி மாறி பெய்து கொண்டே இருந்ததால் பொதுமக்கள் வெளியே செல்ல சிரமம் அடைந்தனர்.

குடை பிடித்தபடி...

பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்ற மாணவ-மாணவிகள், அலுவலகங்களுக்கு வேலைக்கு சென்ற பணியாளர்கள் அனைவரும் கையில் குடை பிடித்தபடி சென்றனர்.

தீபாவளி பண்டிகை நெருங்குவதால் பொருட்கள் மற்றும் புத்தாடை வாங்க மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து பொதுமக்கள் நாகர்கோவில் வந்திருந்தனர். ஆனால் நாள் முழுவதும் மழை கொட்டி தீர்த்ததால் அவர்கள் பொருட்கள் வாங்க முடியாமல் அவதி அடைந்தனர்.

திற்பரப்பில் வெள்ளப்பெருக்கு

மலையோர பகுதிகள் மற்றும் அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக பேச்சிப்பாறை, கோதையார், சிற்றார், மணலோடை, சுருளகோடு, ஆலஞ்சோலை, திற்பரப்பு, களியல் நெட்டா போன்ற பகுதிகளில் கனமழை பெய்தது.

கோதையாற்றில் நீர்வரத்து அதிகரித்ததால் திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதுதொடர்பான அறிவிப்பு பதாகை அருவியின் முன்புறம் கட்டப்பட்டுள்ளது. .

பேச்சிப்பாறை

கனமழையால் பேச்சிப்பாறை அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதையடுத்து நேற்று மதியம் 12 மணிக்கு அணையில் இருந்து வினாடிக்கு 1000 கன அடி உபரிநீர் மறுகால் மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டது. பிற்பகலில் அணைக்கு தண்ணீர் வரத்து மேலும் அதிகரித்தது. மாலை 4 மணியளவில் அணைக்கு வினாடிக்கு 5100 கனஅடி தண்ணீர் வந்தது. அப்போது அணையின் நீர்மட்டம் 45.16 அடியாக உயர்ந்தது. இதனால், அணையில் இருந்து வெளியேற்றும் உபரிநீரின் அளவு வினாடிக்கு 3000 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்கும்படி பொதுப்பணித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

குழித்துறை

பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் மாலை 4 மணி நிலவரப்படி 67.20 அடியாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு 1767 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து அதிக அளவு நீர் திறக்கப்பட்டுள்ளதால் மாத்தூர் தொட்டிப்பாலத்தின் கீழ்ப்பகுதியிலும், அருவிக்கரை பகுதியிலும் பரளியாற்று வெள்ளம் பேரிரைச்சலுடன் பாய்ந்தது.

மார்த்தாண்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று பகல் முழுவதும் பலத்த மழை பெய்தது. இதனால் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. குழித்துறையில் ஆற்றின் குறுக்கே உள்ள தடுப்பணை மீது வெள்ளம் கரைபுரண்டு பாய்கிறது. தொடர் மழை காரணமாக ரப்பர் பால்வெட்டும் வேலை, செங்கல்சூளை தொழில் போன்றவை பாதிக்கப்பட்டுள்ளது.

மயிலாடியில் 94.2 மில்லி மீட்டர் பதிவு

குமரி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மயிலாடியில் 94.2 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.

மாவட்டத்தில் பிற பகுதிகளில் பதிவான மழையின் அளவு விவரம் மில்லிமீட்டரில் வருமாறு:-

பூதப்பாண்டி-1, களியல்-60, கன்னிமார்-5.4, கொட்டாரம்-13.8, குழித்துறை-62, நாகர்கோவில்-60, புத்தன்அணை-9.2, சுருளக்கோடு-30, தக்கலை-38.1, குளச்சல்-9.8, இரணியல்-16, பாலமோர்-40.4, திற்பரப்பு-34.6, ஆரல்வாய்மொழி-6.4, கோழிப்போர்விளை-33.4, அடையாமடை-29, குருந்தன்கோடு-52.4, முள்ளங்கினாவிளை-9.2, ஆனைக் கிடங்கு-25 என்ற அளவில் மழை பெய்திருந்தது.

மேலும் அணை பகுதிகளை பொறுத்த வரையில் பேச்சிப்பாறை-19.6, பெருஞ்சாணி-10.8, சிற்றார் 1-29.4, சிற்றார் 2-54.2, மாம்பழத்துறையாறு-26, முக்கடல்-5.2 என்ற அளவில் மழை பதிவாகி இருந்தது.


Next Story