தமிழகத்தில் நிலக்கரி சுரங்கங்களை அனுமதிக்க மாட்டோம் என சட்டசபையில் அறிவிக்க வேண்டும் -அன்புமணி ராமதாஸ்
தமிழகத்தில் 6 நிலக்கரி சுரங்கங்களை அனுமதிக்க மாட்டோம் என தமிழக சட்டசபையில் அறிவிக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினார்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டத்தை நிர்வாக வசதிக்காக இரண்டாக பிரித்து செயல்பட தமிழக அரசை வலியுறுத்தி திருவண்ணாமலையில் அண்ணா சிலை அருகில் நேற்று பா.ம.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு பா.ம.க. தலைவரான டாக்டர் அன்புமணிராமதாஸ் எம்.பி. தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
திருவண்ணாமலை மாவட்டம் போல் கடலூர், திருச்சி, கோவை, தூத்துக்குடி போன்ற பல பெரிய மாவட்டங்களையும் இரண்டாக பிரிக்க வேண்டும்.
முதல்- அமைச்சருக்கு 3 கோரிக்கை
மத்திய அரசு டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி எடுப்பதற்கு சுரங்கம் தோண்ட ஏலம் விட்டு இருப்பதாகவும், நிலம் எடுக்க போகிறார்கள் என நாம் அறிக்கை விடுத்தவுடன் பா.ஜ.க.வை சேர்ந்த அண்ணாமலை மத்திய மந்திரியிடம் கடிதம் கொடுத்துள்ளார். அதற்கு மத்திய மந்திரி நிலக்கரி எடுப்பதற்கு சுரங்கம் தோண்டுவதற்காக விடப்பட்ட ஏலப் பட்டியலில் இருந்து எடுத்து விடுகிறோம் என 'டுவிட்' செய்கிறார்.
நிலக்கரி சுரங்கம் வராது என்று மத்திய மந்திரி கூறவில்லை. அதற்கு மாறாக ஏலப்பட்டியலில் இருந்து விலக்கி விடுகிறோம் என்று மட்டுமே டுவிட் செய்துள்ளார். அதற்குள் எங்களுக்கு கிடைத்த வெற்றி, எங்கள் முதல்- அமைச்சருக்கு கிடைத்த வெற்றி என பேசி வருகின்றனர்.
2 நாட்களுக்கு முன்பு தமிழக முதல்- அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளேன். அதில் தமிழகத்தில் 6 நிலக்கரி சுரங்கங்களை அனுமதிக்க மாட்டோம் என சட்டமன்றத்தில் அறிவிக்க வேண்டும். என்.எல்.சி. 1 ஏ மற்றும் 2 ஆகியவற்றிற்காக நிலம் கையகப்படுத்துதல் நிறுத்தம் மற்றும் 66 ஆண்டு காலமாக என்.எல்.சி. நிறுவனத்தினால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து சென்னை ஐ.ஐ.டி. குழுவின் மூலம் 3 மாதத்தில் ஆய்வு அறிக்கை அரசுக்கு அளித்து பின்னர் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட 3 கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளேன். இவை அனைத்திற்கும் தீர்வு வராவிட்டால் பாட்டாளி மக்கள் கட்சியின் போராட்டம் ஒரு நாளில் முடியாது அடுத்தடுத்த போராட்டம் நடைபெறும்.
சட்டமன்றத்தில் அறிவிக்க வேண்டும்
தமிழகத்தில் விவசாய விளைநிலங்கள் அழிக்கப்படுவதால் இன்னும் 10 ஆண்டுகளில் உணவு பற்றாக்குறை வரும் நிலை ஏற்படலாம். தமிழக மக்களும், விவசாயிகளும் ஒவ்வொரு சென்ட் நிலத்தையும் பாதுகாக்க வேண்டும்.
பெரிய மாவட்டங்கள் அனைத்தையும் நிர்வாக வசதிக்காக இரண்டாக பிரிப்போம் என சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே முதல்-அமைச்சர் அறிவிக்க வேண்டும்.
பல்வேறு போராட்டங்கள் நடைபெறும்
10.5 சதவீத இடஒதுக்கீடு சட்டமன்றத்தில் சட்டமாக கொண்டு வர வேண்டும். இந்த சட்டத்தை ஒரு மாதத்திற்குள் கொண்டு வரவில்லை என்றால் தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடைபெறும்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.