திருவண்ணாமலையில் 102.9 டிகிரி வெயில் சுட்டெரித்தது
திருவண்ணாமலையில் 102.9 டிகிரி வெயில் கொளுத்தியது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
திருவண்ணாமலையில் 102.9 டிகிரி வெயில் கொளுத்தியது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
அக்னி நட்சத்திரம்
திருவண்ணாமலை அக்னி ஸ்தலம் என்பதற்கு ஏற்ப கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரிப்பதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த 4-ந்தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கியது. அதன் பின்னர் சில நாட்கள் அவ்வப்போது மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பு 102.9 டிகிரி வரை வெயிலின் அளவு பதிவாகி இருந்தது. இந்த நிலையில் கடந்த ஓரிரு நாட்களாக வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. மதியம் வேலையில் வெயில் சுட்டெரித்தது. இதனால் சாலையில் கானல்நீர் தோன்றியது. அதுமட்டுமல்லாமல் அனல் காற்று வீசியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர்.
102.9 டிகிரி வெயில்
நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளாக இருந்தாலும், மக்கள் வீட்டில் இருந்து வெளியேவர முடியாத அளவிற்கு வெயிலின் தாக்கம் இருந்தது. வீட்டில் இருந்து வெளியே சென்றவர்கள் குளிர்பான கடைகளையும், சாலையோரம் விற்கப்பட்ட இளநீர், தர்பூசணி போன்றவற்றை வாங்கி சாப்பிட்டு வெயிலின் தாக்கத்தை தணித்து கொண்டனர்.
வீடுகளிலும் மின்விசிறியில் இருந்து அனல் காற்று வீசியதால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை மிகவும் அவதி அடைந்தனர். அக்னி நட்சத்திரம் தொடங்கி 100 டிகிரி வரை வெயிலின் அளவு பதிவாகாமல் இருந்து, நேற்று வெயிலின் அளவு அதிகபட்சமாக 102.9 டிகிரி வெயில் அளவு பதிவானது.