என்ஜினீயரின் மனைவி உள்பட 6 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த முடிவு


என்ஜினீயரின் மனைவி உள்பட 6 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த முடிவு
x

பொன்னமராவதியில் இரட்டை கொலை வழக்கில் என்ஜினீயரின் மனைவி உள்பட 6 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

புதுக்கோட்டை

என்ஜினீயர்

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள வேந்தன்பட்டி ஊராட்சி மாப்படச்சான் வீதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மனைவி சிகப்பி ஆச்சி (வயது 76). இவர்களுக்கு அடைக்கப்பன் (58), பழனியப்பன் (54) ஆகிய 2 மகன்களும், அடைக்கம்மை (51) என்ற மகளும் உள்ளனர். இதில், மூத்த மகன் அடைக்கப்பன், சென்னையில் குடும்பத்தோடு வசித்து வருகிறார்.

2-வது மகன் பழனியப்பன், என்ஜினீயர். மேலும் பொன்னமராவதி கட்டிட பொறியாளர் சங்கத்தின் துணை தலைவராக பதவி வகித்து வந்தார். இவருடைய மனைவி உஷா (52). இவர் கரூரில் தங்கி இருந்து ஒரு கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுடைய மகன் ஸ்ரீராம் (24). பழனியப்பன் அதே பகுதியில் புதிதாக வீடு கட்டி வசித்து வந்தார். கட்டிடங்கள் கட்டுவதும், கட்டிடங்கள் கட்டி விற்கும் தொழில் செய்து வந்தார்.

இரட்டை கொலை வழக்கு

இந்த நிலையில் கடந்த ஆண்டு (2022) டிசம்பர் மாதம் வீட்டில் பழனியப்பனும், அவரது தாயார் சிகப்பி ஆச்சியும் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தனர். மர்மநபர்கள் 2 பேரையும் அடித்தும், கழுத்தை நெறித்தும் கொலை செய்து விட்டு தப்பியோடினர். சிகப்பி ஆச்சி கழுத்தில் அணிந்திருந்த 3½ பவுன் நகையையும் பறிபோகியிருந்தது. இந்த இரட்டை கொலை வழக்கு தொடர்பாக பொன்னமராவதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே உத்தரவின் பேரில் 5 தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெறுகிறது. வீட்டில் வைத்து நடந்த இந்த கொலை சம்பவத்தில் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள் சேதமடைந்திருந்தன. கைத்தேர்ந்த கொலையாளிகள் இந்த சம்பவத்தை அரங்கேற்றி விட்டு தப்பியோடியது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் வெவ்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

உண்மை கண்டறியும் சோதனை

இதற்கிடையில் இரட்டை கொலை வழக்கு தொடர்பாக சிலரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த தனிப்படை போலீசார் முடிவு செய்துள்ளனர். இதில் கொலையான பழனியப்பனின் மனைவி உஷா, மகன் ஸ்ரீராம், அவரது வீட்டில் வாடகைக்கு இருந்த ஒரு பெண் மற்றும் அந்த பெண்ணின் சகோதரர் 2 பேர், எலக்ட்ரீசியன் வேலை பார்த்தவர் என 6 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

இதற்காக கோர்ட்டில் போலீசார் அனுமதி கேட்டுள்ளனர். கோர்ட்டு அனுமதி கிடைத்ததும் அவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்படும் என போலீசார் தெரிவித்தனர். தாய், மகன் இரட்டை கொலை வழக்கு தற்போது வேகமெடுக்க தொடங்கி உள்ளது. இதில் கொலையாளிகள் விரைவில் கைது செய்யப்படலாம் என போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.


Next Story