கட்சிக்காரர்களை ஊக்கப்படுத்தி விற்க வைத்தார்கள்:அ.தி.மு.க. ஆட்சியில் தான் கள்ளச்சாராயம், போதை பொருட்கள் விற்பனை அதிகரித்ததுஅமைச்சர் பொன்முடி குற்றச்சாட்டு


கட்சிக்காரர்களை ஊக்கப்படுத்தி விற்க வைத்தார்கள்:அ.தி.மு.க. ஆட்சியில் தான் கள்ளச்சாராயம், போதை பொருட்கள் விற்பனை அதிகரித்ததுஅமைச்சர் பொன்முடி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 15 May 2023 12:15 AM IST (Updated: 15 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கள்ளச்சாராயம், போதை பொருட்கள் விற்பனை அதிகரித்தது கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் தான் என்றும், அவர்கள் கட்சிக்காரர்களை ஊக்கப்படுத்தி விற்க வைத்தார்கள் என்றும் அமைச்சர் பொன்முடி குற்றம்சாட்டியுள்ளார்.

விழுப்புரம்


விக்கிரவாண்டி,

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தை சேர்ந்த 6 பேர் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தனர். மேலும் 33 பேர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்நிலையில் நேற்று மதியம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான் ஆகியோர் நேரில் வந்து, அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறி நலம் விசாரித்தனர். மேலும், அங்கிருந்த டாக்டர்களிடம் உரிய சிகிச்சை அளிக்குமாறு அறிவுறுத்தினர்.

பின்னர் அமைச்சர் பொன்முடி நிருபர்களிடம் கூறியதாவது:-

கடந்த 10 ஆண்டுகால ஆட்சி

தமிழகத்தில் குட்கா, கஞ்சா, கள்ளச்சாராயம் போன்ற போதை பொருட்கள் விற்பனை அதிகரித்தது கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் தான். அப்போது அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், கட்சிக்காரர்களை ஊக்கப்படுத்தி விற்கவைத்ததே அவர்கள்தான்.

விழுப்புரத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்த அண்ணாமலை என்பவர் அ.தி.மு.க.வை சேர்ந்தவர். அவர் தற்போது பா.ஜ.க.வுக்கு சென்றுள்ளார். இது அனைவருக்கும் தெரியும்.

காவல்துறையில் தனி ஆணையம்

கடந்த 2 ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் கள்ளச்சாராயம் மற்றும் போதை பொருட்கள் விற்பனையை தடுப்பது தொடர்பாக சிறப்பான நடவடிக்கை எடுத்து வருகிறார். இதற்காக காவல்துறைக்கு அவர் அடிக்கடி ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார். மேலும் போதை பொருட்கள் விற்பனையை தடுக்க காவல்துறையில் தனி ஆணையத்தையே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவாக்கி உள்ளார். அதனால் தான் குறைந்துள்ளது.

தகுதி கிடையாது

இதற்கு முன்பு, இங்கு வந்த முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் என்னென்னவோ பேசிவிட்டு சென்றுள்ளார். அவர்களது ஆட்சியில் தான் சுகாதார அமைச்சர் மீது குட்கா வழக்கு பதிவு செய்யப்பட்டு, சட்டமன்றத்தில் 10 எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. எனவே கள்ளச்சாராய விற்பனை பற்றி பேச அவர்களுக்கு தகுதி கிடையாது.

திண்டிவனத்தில் சாராயம் விற்பனை செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க வில்லை என பேசியுள்ளார். ஆனால், தி.மு.க. வை சேர்ந்தவர் அவர் என்று தெரிந்ததும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவர் கைது செய்யப்பட்டு சிறையில் தான் உள்ளார். அவர் மீது தற்போது குண்டர் சட்டம் போடும் நடவடிக்கையை காவல் துறை எடுத்து வருகிறது.

வேண்டுமென்றே பழி சுமத்துகிறார்கள்

தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதை நாங்கள் அரசியலாக்க விரும்ப வில்லை. கடந்த காலத்தில் ஜெயலலிதா ஆட்சியில் தான் டாஸ்மாக் கடைகள் மூலம் மதுவை அரசே விற்பனை செய்யும் என அறிவித்தார்.

அரசின் வருமானத்திற்காக டாஸ்மாக் மூலம் மது விற்பனையை கொண்டு வந்தார். அதற்கு சட்டமன்றத்தில் நான் எதிர்ப்பு தெரிவித்தேன். தற்போது வேண்டுமென்றே அரசின் மீது குறை, பழி சொல்லவேண்டும் என ஒருவர் பேசியுள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன், கலெக்டர் பழனி, போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, எம்.எல்.ஏ.க்கள் புகழேந்தி, லட்சுமணன், தாசில்தார் ஆதி சக்தி சிவக்குமரி மன்னன், போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகமுருகன், ஒன்றிய செயலாளர் ஜெயபால், மாவட்ட கவுன்சிலர் மீனா வெங்கடேசன் மற்றும் டாக்டர்கள், அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.


Next Story