கருணாநிதிக்குள் இருந்த போராளி குணம்தான் தமிழர்கள் படிக்க காரணமாக இருந்தது- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு


கருணாநிதிக்குள் இருந்த போராளி குணம்தான் தமிழர்கள் படிக்க காரணமாக இருந்தது- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
x

கருணாநிதிக்குள் இருந்த போராளி குணம் தான் தமிழர்கள் படிக்க காரணமாக இருந்தது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

மதுரை


கருணாநிதிக்குள் இருந்த போராளி குணம் தான் தமிழர்கள் படிக்க காரணமாக இருந்தது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

திறப்பு விழா

மதுரையில் நேற்று நடந்த கலைஞர் நூற்றாண்டு நூலகம் திறப்பு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

திராவிட இயக்கம் என்றாலே அறிவு இயக்கம்தான். தமிழ்ச் சமுதாய எழுச்சிக்கு தேவையான கருத்துக்களை எழுதி, பேசி, படித்து வளர்ந்தவர்கள்தான் திராவிட இயக்கத்தினர். தி.மு.க.வின் கட்சி அலுவலகத்தை உருவாக்கிய அண்ணா, அதற்கு அறிவகம் என்று பெயர் வைத்தார்.

அமைச்சர்களுக்கு பாராட்டு

சென்னை, அண்ணா சாலையில் புதிதாக கட்சி அலுவலகத்தை அமைத்த கருணாநிதி 'அண்ணா அறிவாலயம்' என்று பெயர் வைத்தார். ஏன் என்றால், இது அரசியல் இயக்கம் மட்டும் இல்லை. அறிவு இயக்கம். படிப்பகங்களால் வளர்ந்து, ஆட்சிப் பொறுப்புக்கு வந்து இன்று பிரமாண்டமான நூலகங்களை கட்டி எழுப்பிக் கொண்டு இருக்கிறோம். 2 லட்சத்து 13 ஆயிரத்து 338 சதுர அடி பரப்பளவில், 120 கோடியே 75 லட்ச ரூபாய் மதிப்பில் நூலகத்தை அழகாகவும், அற்புதமாகவும் உருவாக்கிக் கொடுத்த எதிலும் வல்லவர் என்று அழைக்கப்படும், அமைச்சர் எ.வ.வேலுவையும், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியையும் நான் மனதார பாராட்டுகிறேன்.

ஷிவ் நாடார்

எச்.சி.எல். ஷிவ் நாடார் மிகப்பெரிய தொழில் அதிபர் என்று சொல்வது மட்டுமல்ல, அவருடைய பெருமை. இந்திய தொழில் அதிபர்களில் அதிகமான தொகையை நன்கொடையாக வழங்கக்கூடியவர் என்று பாராட்டப்படக்கூடியவர்.

"உனக்கு பணம் வரும்போது அதிகம் பேருக்கு உதவி செய்ய வேண்டும்" என்று அவருடைய தாயார் சொன்னார்களாம். அதற்காகவே அறக்கட்டளை தொடங்கியவர்.. 50 நாடுகளில் கிட்டத்தட்ட 2 லட்சம் பேர் வேலை பார்க்கின்ற அளவுக்கு உயர்ந்து இருக்கிறார். அவரும் அரசுப் பள்ளியில் படித்தவர்தான். பல கிராமங்களைத் தத்தெடுத்து உதவிகளை செய்து கொண்டிருக்கிறார்.

கிராமத்தில் பிறந்து, மாநகராட்சி பள்ளியில் படித்து, மிகச்சிறிய நிறுவனத்தை சொந்த முயற்சியால் தொடங்கி, இன்றைக்கு இவ்வளவு பெரிய மனிதராக அவர் உயர்ந்திருக்கிறார். இப்படிப்பட்டவரை உங்களுக்கு ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தத்தான் இன்றைக்கு சிறப்பு அழைப்பாளராக அவர் அழைக்கப்பட்டு இருக்கிறார். அவருடைய மகள் ரோஷினி, பெண்கள் அனைத்துப் பொறுப்புகளிலும் இறங்கிப் பணியாற்ற வேண்டும் என்ற பெரியாரின் கனவை நிறைவேறும் காட்சியினுடைய அடையாளமாக இருக்கிறார்.

வளர்த்தெடுக்கும் பரம்பரை

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை பொறுத்தவரைக்கும், குழந்தைகள், மாணவர்கள், போட்டித் தேர்வர்கள், மாற்றுத் திறனாளிகள் என அனைவரும் பயன்பெறக்கூடிய வகையில் 6 தளங்கள், மூன்று லட்சம் புத்தகங்களை இந்த நூலகம் பெற்றிருக்கிறது.

அறிவுத் தேடலுடன் நீங்கள் வரும்போது உங்களை அன்போடு வரவேற்க தலைவர் கருணாநிதியே, சிலை வடிவமாக இங்கே இருக்கிறார். அவரை பொறுத்தவரைக்கும் எந்த துறையில் நுழைந்தாலும் அந்த துறையில், அவர்தான் 'நம்பர் ஒன்'.

நம் தமிழ்நாட்டில் 'கலைஞர் பரம்பரை' என்றே ஒன்று இருக்கிறது. நம்முடைய இந்தக் கலைஞர் பரம்பரைதான் தமிழ்நாட்டை வாழையடி வாழையாக வளர்த்தெடுக்கின்ற பரம்பரை.

இந்தி எதிர்ப்பு போராட்டம்

தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்புப் போர் தொடங்கியது. அப்போது கருணாநிதி, தினமும் மாணவர்களை கூட்டிக்கொண்டு கையில் தமிழ்க் கொடியை ஏந்தி "இந்தி ஒழிக, தமிழ் வாழ்க" என்று அந்த முழக்கத்தை முழங்கிக் கொண்டு கட்டாய இந்தியை எதிர்த்தார். மாணவர் பேரணி நடத்தினார். இந்தி துண்டறிக்கையை இந்தி ஆசிரியருக்கே கொடுத்தார். பன்முகத்தன்மை கொண்ட நம்முடைய இந்திய நாட்டில் ஏராளமான மொழிகள் பேசப்படுகிறது. மற்ற மொழிகளை விட இன்றைக்கு தமிழ் தனித்தன்மையுடனும், தனித்து இயங்கவும் காரணம் தமிழ்நாட்டில் நடந்த இந்தி திணிப்புக்கு எதிராக நடைபெற்ற போராட்டம்தான்.

பள்ளியில் நன்றாகப் படி என்று அண்ணா சொன்னாலும், கலைஞர் படித்தது அண்ணாவின் கொள்கைப் பள்ளியிலும், பெரியாரின் போராட்டக் கல்லூரியிலும்தான். அன்றைக்கு இருந்த சமூகச் சூழலும், அரசியல் சூழலும், கருணாநிதிக்குள் இருந்த போராளியும், அவர் விரும்பிய பள்ளிப் படிப்பைத் தொடர முடியாமல் போனதற்குக் காரணம். ஆனால், கருணாநிதிக்குள் இருந்த அந்தப் போராளி குணம்தான் இன்றைக்கு பலரும் தமிழக மக்கள் படிக்க காரணமாக இருந்தது.

இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.


Related Tags :
Next Story