கவர்னருடன் ரஜினிகாந்த் அரசியல் பேசியது தவறு இல்லை -அண்ணாமலை பேட்டி


கவர்னருடன் ரஜினிகாந்த் அரசியல் பேசியது தவறு இல்லை -அண்ணாமலை பேட்டி
x

கவர்னருடன் நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பேசியது தவறு இல்லை என்று அண்ணாமலை தெரிவித்தார்.

சென்னை,

75-வது சுதந்திர தினத்தையொட்டி, தமிழக பா.ஜ.க. சார்பில் சென்னை நீலாங்கரை கபாலீசுவரர் நகர் கடற்கரையில் இருந்து தேசியக்கொடி ஏந்தி கடலில் பேரணி செல்லும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

மாநிலத்தலைவர் அண்ணாமலை தலைமையில் கடலில் ஏராளமான படகுகள் பேரணியாக சென்றன. கட்சி துணைத்தலைவர் கரு.நாகராஜன் மற்றும் மாநில-மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது:-

பிற்போக்குத்தனமாக யோசிப்பதா?

கவர்னருடன் ரஜினிகாந்த் அரசியல் பேசியதில் தவறு இல்லை. இதில் என்ன தவறு இருக்கிறது?. ஆனால் கம்யூனிஸ்டு போன்ற தி.மு.க.வின் 'பி டீமாக', தி.மு.க. தரும் ஆக்சிஜனில் உயிர் வாழக்கூடிய சில தலைவர்கள் இதனை விமர்சித்திருக்கிறார்கள்.

அரசியல் என்றாலே பிற்போக்குத்தனமாக ஏன் யோசிக்க வேண்டும்?. அரசியல் இல்லாத வாழ்க்கையை காட்ட முடியுமா?. அரசியல் பேசினேன் என்று ரஜினிகாந்த் கூறியிருப்பது, சமுதாயத்தில் நடக்கும் விஷயங்களை பேசியது என்றுதான் அர்த்தம். மத்திய அரசின் திட்டங்கள், மாநில அரசின் பணிகளை பற்றி பேசியிருக்கலாம்.

எதிர்க்கட்சிகள் நடுக்கம்

குற்றம் உள்ள நெஞ்சு குறுகுறுக்கும். ஊழல் செய்தவர்களுக்கு இந்த குறுகுறுப்பு இருக்கும். யாரெல்லாம் அரசியலில் தவறு செய்துகொண்டிருக்கிறார்களோ, அவர்கள் எல்லாம் பயந்துபோய், ரஜினிகாந்த் நம்மை பற்றி பேசியிருப்பாரோ... என்ற நடுக்கத்தில் விமர்சித்து வருகிறார்கள்.

நல்ல அரசியல் செய்தால் ஏன் இந்த பயம் வரப்போகிறது?. எனவே ரஜினிகாந்த் கவர்னரை சந்தித்ததிலும், அவர் பேசியதிலும் எந்த தவறும் இல்லை. எனவே இதையெல்லாம் விமர்சிக்க தி.மு.க.வுக்கு தகுதி கிடையாது.

கவர்னர் அற்புதமான மனிதர்களை வரவழைத்து பேசுகிறார். சாதாரண மக்கள் கூட கவர்னரை சந்தித்து பேசுகிறார்கள். ஆனால் ரஜினிகாந்த் கவர்னரை சந்தித்து பேசிய விவகாரத்தை கம்யூனிஸ்டு, காங்கிரஸ் கட்சிகள் அரசியலாக்க பார்க்கிறார்கள்.

அரசியல் பேசக்கூடாதா?

ரஜினிகாந்த் பேசியது நாட்டு அரசியல். அதில் எந்த தவறும் இல்லை. ஒரு ஜனநாயக நாட்டில் 2 குடிமகன்கள் அரசியல் பேசக்கூடாதா?. உண்மையிலேயே அரசியல் தெரிந்து தான் பேசுகிறார்களா, இல்லை எதிர்க்கவேண்டுமே என்பதற்காக கண்ணை மூடிக்கொண்டு எதிர்க்கிறார்களா? என்பதை தி.மு.க.வின் உதிரி கட்சிகள் சொல்லவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story