தமிழகத்தில் நாளை நடக்க இருந்த பால் நிறுத்த போராட்டம் ஒத்தி வைப்பு


தமிழகத்தில் நாளை நடக்க இருந்த  பால் நிறுத்த போராட்டம் ஒத்தி வைப்பு
x

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்க இருந்த பால் நிறுத்த போராட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது என்று தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்க மாநில தலைவர் ராஜேந்திரன் கூறினார்.

ஈரோடு

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்க இருந்த பால் நிறுத்த போராட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது என்று தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்க மாநில தலைவர் ராஜேந்திரன் கூறினார்.

போராட்டம் அறிவிப்பு

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்க ஆலோசனை கூட்டம் ஈரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநில பொருளாளர் ராமசாமி கவுண்டர் தலைமை தாங்கினார். மாநில இணைச்செயலாளர்கள் கணேசன், முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாவட்ட தலைவர் ராஜூ வரவேற்று பேசினார். இதில் மாநில தலைவர் ராஜேந்திரன் கலந்துகொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஆவின் பால் உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலையாக பசும்பால் லிட்டருக்கு ரூ.42, எருமை பாலுக்கு ரூ.51 உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கம் சார்பில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. வருகிற 28-ந் தேதி (நாளை) மாவட்ட தலைநகரங்களில் பால் நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்து இருந்தோம். இதுதொடர்பாக அமைச்சர்கள், தலைமை செயலாளர், கால்நடை, வேளாண்மைத்துறை செயலாளர்கள் உள்ளிட்டோரை சந்தித்து கோரிக்கைகளை தெரிவித்து உள்ளோம். இந்த கோரிக்கைகள் முதல்-அமைச்சரிடம் கொண்டு செல்லப்பட்டு உள்ளது.

ஒத்தி வைப்பு

எங்களது கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்றி கொடுப்பதாக அமைச்சர் உறுதி அளித்து உள்ளார். எனவே வருகிற நவம்பர் மாதம் 7-ந் தேதி வரை தமிழக அரசிடம் இருந்து நல்ல அறிவிப்பு வரும் என்று காத்திருக்கிறோம். இதனால் எங்களது பால் நிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைக்கிறோம். தமிழக அரசு எங்களது கோரிக்கையை ஏற்காவிட்டால், 9 அல்லது 10-ந் தேதி சங்க கூட்டம் நடத்தி அடுத்தகட்ட போராட்டம் குறித்து முடிவு செய்யப்படும்.

பால் விற்பனை விலையை லிட்டருக்கு ரூ.3 தமிழக அரசு குறைத்ததால் ஆவின் நிறுவனத்துக்கு ஆண்டுக்கு ரூ.400 கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளது. பாலின் விற்பனை விலையையும் அரசு உயர்த்த வேண்டும்.

1 கோடி லிட்டர்

தனியார் பால் நிறுவனங்கள் சார்பில் பசும்பால் லிட்டருக்கு ரூ.42 முதல் ரூ.45 வரையும், எருமை பால் லிட்டருக்கு ரூ.65 வரையும் கொள்முதல் செய்யப்படுகிறது. முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா இருந்தபோது ஆவின் நிறுவனம் மூலமாக தினமும் 1 கோடி லிட்டர் பால் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தார். அதற்குரிய வசதிகள் ஆவின் நிறுவனத்தில் இருப்பதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஈரோடு மாவட்டத்தில் 1½ லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டாலும், 60 ஆயிரம் லிட்டர் பால் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. எனவே விற்பனையை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் சங்க மாநில துணைத்தலைவர் பெரியண்ணன், மாவட்ட செயலாளர் மருதாசலம், பொருளாளர் அன்பரசு, துணைத்தலைவர் கனகராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story