கோவில்பட்டியில் நடைபெற இருந்தரத்ததான கழக ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு
கோவில்பட்டியில் நடைபெற இருந்த ரத்ததான கழக ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கூடுதலாக டாக்டர்களை நியமிக்க வேண்டும், பிரசவ வார்டில் தேவையான குடிநீர், சுடுநீர், மற்றும் கழிப்பறை வசதி செய்து தரவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று(திங்கட்கிழமை) அரசு மருத்துவமனை முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்துவது என பகத்சிங் ரத்ததான கழகத்தினர் தெரிவித்திருந்தனர். இதை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட மருத்துவத்துறை இணை இயக்குனர் கற்பகம் தலைமையில் போராட்டக் குழுவினருடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
போராட்ட குழுவினரின் கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் வாக்குறுதி அளித்ததன் பேரில் ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
இந்த பேச்சுவார்த்தையில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் அகத்தியன், தலைமையிடத்து அதிகாரி பாலகிருஷ்ணன், மருத்துவர் வெங்கடேஷ்,பகத்சிங் ரத்ததான அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் காளிதாஸ், கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் க.தமிழரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் பெஞ்சமின் பிராங்ளின், மாமன்னர் பூலித்தேவர் மக்கள் இயக்க தலைவர் செல்லத்துரை, நாம் தமிழர் கட்சி தொகுதி செயலாளர் ரவிக்குமார், தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகி அருமைராஜ், முக்குலத்தோர் புலிப்படை துணை பொது செயலாளர் பெருமாள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.