செங்கல் தயாரிப்புக்கு மண் எடுக்க அனுமதி பெறுவது எளிதாக்கப்படும்; சட்டசபையில் அமைச்சர் துரைமுருகன் பதில்


செங்கல் தயாரிப்புக்கு மண் எடுக்க அனுமதி பெறுவது எளிதாக்கப்படும்; சட்டசபையில் அமைச்சர் துரைமுருகன் பதில்
x

செங்கல் தயாரிப்புக்கு தேவையான மண் எடுக்க கனிமவள கூடுதல் இயக்குனரோ அல்லது உதவி இயக்குனரோ அனுமதி வழங்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

சென்னை,

சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்த பிறகு நேரமில்லா நேரத்தில் அ.தி.மு.க. உறுப்பினர் தளவாய்சுந்தரம் (கன்னியாகுமரி), செங்கல் தயாரிப்புக்கு தேவையான மண் எடுக்க அனுமதி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

இதில் காங்கிரஸ் உறுப்பினர் ரூபி மனோகரன் (நாங்குநேரி), தி.மு.க. உறுப்பினர் தளபதி ஆகியோர் பேசினர். அவர்கள் அனைவரும் மண் எடுக்கும் விவகாரத்தை எளிமைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதற்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்து கூறியதாவது:-

செங்கல் மற்றும் மண்பாண்டங்கள் தயாரிப்பிற்கான மண் எடுக்கும் அனுமதி பெறும் முறையை எளிமைப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நிலுவையில் உள்ள விண்ணப்பங்களுக்கு உடனுக்குடன் அனுமதி கொடுக்க கலெக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. நெல்லையில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டிருந்த நேரத்தில் முதல்- அமைச்சரிடம், மண்பாண்ட தொழிலாளர் மண் எடுப்பதற்கான அனுமதி வழங்க கோரிக்கை வைத்தனர்.

இந்தநிலையில் ஆட்சிக்கு வந்த பின்பு இந்த விவகாரம் தொடர்பாக எத்தனை முறை சங்கத்துடன் ஆலோசனைக்கூட்டம் நடத்தி இருப்பேன் என்று கணக்கிட முடியாது. ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதார பிரச்சினை என்பதால் நிர்வாகிகளிடம் ஆலோசித்து சில திட்டங்களை வகுத்து இருக்கிறோம்.

அனுமதி பெறுவதில் பிரச்சினை

பட்டா நிலங்களில் மண் எடுப்பதற்கு ரூ.1,500 கட்டணம் செலுத்தியும், பதிவு சான்று மற்றும் மண் எடுக்க உத்தேசித்துள்ள நிலங்களில் பட்டாதாரரின் ஒப்புதல் கடிதம் பெற்று கலெக்டரிடம் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு கனிம கட்டணம் மட்டும் செலுத்தினால் போதும். செங்கல் சூளை பணிக்கு மண் எடுக்க பெறப்பட்ட விண்ணப்பத்தின் மீது புவியியல் மற்றும் சுரங்கத்துறை துணை இயக்குனர் அல்லது உதவி இயக்குனரிடம் இருந்து அறிக்கை பெறப்படும்.

மண்பாண்டம் செய்பவர்களுக்கு இலவசமாக மண் எடுத்துக்கொள்ள சில விதிமுறைகள் உருவாக்கப்பட்டு உள்ளது. மேலும், 60 மீட்டர் வரை ஒரு இடத்தில் மண் எடுக்கலாம் என்ற அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அதேபோல் சில இடங்களை சீர்திருத்தம் செய்யும் போது மாவட்ட கலெக்டரிடம் அனுமதி பெற்று கட்டணம் செலுத்தி மண் எடுக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இப்படி பல வகைகளில் மண் எடுப்பதற்கு அனுமதி இருந்தாலும், மாவட்ட கலெக்டரிடம் அனுமதி வாங்குவதில்தான் பிரச்சினை வருகிறது.

வருவாய் வரும்

செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மண் கொடுப்பதற்கு தடை இருந்தது. தற்போது அது சரி செய்யப்பட்டு உள்ளது. எனவே அரசுக்கு ரூ.20 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும் வாய்ப்பு உருவாகி உள்ளது. செங்கல்பட்டு கலெக்டர் துரிதமாக செயல்படுகிறார்.

செங்கல் தயாரிப்புக்கு தேவையான மண் எடுக்க கனிமவள கூடுதல் இயக்குனரோ அல்லது உதவி இயக்குனரோ அனுமதி வழங்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்ட கலெக்டர்களுக்கு இருக்கும் பணிச்சுமையில் அவர்கள் அனுமதி வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது. இனி கனிம வள உதவி இயக்குனர் அனுமதி கொடுத்தாலே மண் எடுக்கலாம் என்ற எளியமுறை கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story