தமிழனை தலைநிமிர செய்யும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கரத்தை வலுப்படுத்த வேண்டும்;ஈரோட்டில் அமைச்சர் ரகுபதி பேச்சு
தமிழனை தலைநிமிர செய்யும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கரத்தை வலுப்படுத்த வேண்டும் என்று ஈரோட்டில் அமைச்சர் ரகுபதி கூறினார்.
தமிழனை தலைநிமிர செய்யும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கரத்தை வலுப்படுத்த வேண்டும் என்று ஈரோட்டில் அமைச்சர் ரகுபதி கூறினார்.
அமைச்சர்கள் பிரசாரம்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். அவர் நேற்று மாலை ஈரோடு புதுமைக்காலனி பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அவருக்கு ஆதரவு கேட்டு அமைச்சர்கள் ரகுபதி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் மற்றும் விஜய்வசந்த் எம்.பி. ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள். அப்போது அமைச்சர் ரகுபதி பேசும்போது கூறியதாவது:-
இந்த இடைத்தேர்தல் இந்திய அரசியலை தீர்மானிக்கும் தேர்தலாக அமையும். இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு சாதாரண வெற்றியாக இருக்கக்கூடாது. அ.தி.மு.க. வேட்பாளர் டெபாசிட் இழக்க வேண்டும். கடந்த 20 மாத ஆட்சி காலத்தில் தேர்தல் வாக்குறுதியில் அளிக்கப்பட்ட 80 சதவீத திட்டம் நிறைவேற்றப்பட்டது. மீதமுள்ள வாக்குறுதிகளையும், சொல்லாத திட்டங்களையும் நிறைவேற்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காத்திருக்கிறார். இந்திய அளவில் தமிழனை தலைநிமிர செய்யும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கரத்தை வலுப்படுத்தும் வகையில் கை சின்னத்தில் வாக்களித்து ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை வெற்றி பெற செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
வாய்ப்பு
வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசும்போது கூறியதாவது:-
ஈரோட்டுக்கு வந்து உள்ள அமைச்சர்கள் ஓட்டு கேட்க மட்டும் வரவில்லை. மக்களின் குறைகளை கேட்டு நேரடியாக ஆய்வு செய்து வருகிறார்கள். தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற உள்ளனர். ஈரோடு மக்களின் குறைகளை தீர்ப்பதற்கு கண்டிப்பாக நான் பணியாற்றுவேன். நீங்கள் எனக்கு அளிக்கும் ஆதரவு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஆகியோருக்கு அளிக்கும் ஆதரவாகும்.
எங்களது குடும்பத்தினருக்கு நீங்கள் 120 ஆண்டுகளாக ஆதரவு அளித்து வருகிறீர்கள். என் மகன் திருமகன் ஈவெரா இந்த பகுதி மக்களுக்கு நிறைய பணிகளை செய்து உள்ளார். அவர் விட்டு சென்ற பணிகள் இன்னும் ஏராளமாக இருக்கிறது. அதனை செய்வதற்கும், உங்கள் குறைகளை தீர்ப்பதற்கும் எனக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த பிரசாரத்தின்போது ஒரு பெண் குழந்தைக்கு வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 'கமலா' என்று பெயர் சூட்டினார்.