ரூ.600 கோடி நிதி ஒதுக்கி 17 ஆண்டு ஆச்சு... கடலூர்-புதுச்சேரி ரெயில்வே திட்டம் என்னாச்சு...
ரூ.600 கோடி நிதி ஒதுக்கி 17 ஆண்டு ஆச்சு... கடலூர்-புதுச்சேரி ரெயில்வே திட்டம் என்னாச்சு... என்று மக்கள் கேட்கிறாா்கள்.
கடலூரில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வேலை நிமித்தமாக சென்னைக்கு சென்று வருகின்றனர். இவர்களுக்கு போதிய ரெயில்வே சேவை இல்லாததால் பெரும்பாலும் பஸ் போக்குவரத்தை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அவர்களுக்கு கூடுதல் செலவு ஆகிறது. ரெயில்களும் விழுப்புரம், திண்டிவனம் வழியாக செல்வதால் கூடுதலாக காலவிரையம் ஏற்படுகிறது.
இதனால் கடலூரில் இருந்து புதுச்சேரி, மகாபலிபுரம் வழியாக சென்னைக்கு புதிய ரெயில் திட்டத்தை உருவாக்கி செயல்படுத்த வேண்டும் என்று கடலூர் மாவட்ட மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்தனர். இந்த கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு கடந்த 2005-ம் ஆண்டு சென்னை- புதுச்சேரி- கடலூர் ரெயில்பாதை திட்டத்தை அறிவித்தது.
கிடப்பில் போடப்பட்ட திட்டம்
பெருங்குடி, மகாபலிபுரம், கல்பாக்கம், மரக்காணம், ஜிப்மர், வேல்ராம்பட்டு ஏரிக்கரை, பாகூர் வழியாக கடலூர் வரக்கால்பட்டு வரை ரெயில் பாதை அமைக்க திட்டமிடப்பட்டது. இந்த திட்டத்துக்கு முதற்கட்டமாக ரூ.600 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இந்த திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு, புதுச்சேரி அரசு, ரெயில்வே துறை ஆகிய 3 பேரும் ஒருங்கிணைந்து கூட்டம் நடத்தி நடவடிக்கை மேற்கொள்ளாததால் இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
பின்னர் 2008-ல் மீண்டும் இந்த திட்டத்துக்கு ஒப்புதல் அளித்த பிறகும் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. தொடர்ந்து புதுச்சேரி - கடலூர் வரையிலான 22 கிலோ மீட்டர் தூரம் ரெயில் பாதைக்கு கடந்த 2010-ம் ஆண்டு முதல் சர்வே பணி நடந்தது. அதிகாரிகள் வந்து புதுச்சேரி முதல் கடலூர் வரக்கால்பட்டு வரை வந்து ஆய்வு செய்தனர். அதன்பிறகு இந்த திட்டம் 2018-ம் ஆண்டு மீண்டும் கிடப்பில் போடப்பட்டது.
நீண்ட நாள் கனவு நிறைவேறுமா?
தற்போது வரை இந்த திட்டம் எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் இருக்கிறது. ஆனால் மத்திய அரசு ரெயில்வே பட்ஜெட்டில் இந்த திட்டத்துக்கு ரூ.1000 மட்டும் ஒதுக்கி திட்டத்தை கைவிடாமல் செயல்பாட்டில் வைத்துள்ளது. இதற்கிடையில் சமீபத்தில் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், புதுச்சேரி - கடலூர் ரெயில்வே திட்டத்தை மீண்டும் செயல்படுத்த ரெயில்வே நிர்வாகம் அனுமதி அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஆனால் தமிழக அரசு இந்த திட்டம் குறித்து இதுவரை எவ்வித அறிவிப்பும் வெளியிடவில்லை. ஆகவே கடலூர் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கனவு திட்டமான கடலூர்- புதுச்சேரி- சென்னை ரெயில்வே திட்டத்தை செயல்படுத்த அரசும், ரெயில்வே நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரெயில் பயணிகள் எதிர்பார்த்துள்ளனர்.