''குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாமல் இருப்பது ஏமாற்றம் அளிக்கிறது''
புதுக்கோட்டை அருகே குடிநீர் தொட்டியை அசுத்தப்படுத்திய சம்பவத்தில் ‘‘குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாமல் இருப்பது ஏமாற்றம் அளிக்கிறது’’ என்று தொல்.திருமாவளவன் எம்.பி. கூறினார்.
புதுக்கோட்டை அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் அசுத்தம் கலக்கப்பட்ட வேங்கைவயல் கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. இதனை அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. தொடங்கி வைத்தார். மேலும் அங்கு மக்களை சந்தித்து பேசினார். அதன்பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் அசுத்தம் கலந்த கொடூரம் மனிதாபிமானம் உள்ள எவராலும் சகித்து கொள்ள முடியாது. இந்த விஷயத்தில் இன்னும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாமல் இருப்பது ஏமாற்றம் அளிப்பதாக இருக்கிறது. குற்றவாளிகளை விரைவாக கண்டறிந்து தண்டிக்க வேண்டும். முதல்-அமைச்சர் இந்த பிரச்சினையை கவனித்து அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கி வருகிறார். இருப்பினும் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் இருப்பது அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது.இதுபோன்ற பிரச்சினைகள் வட மாநிலங்களில் சங்பரிவார் அமைப்புகள் தூண்டிதல் ஏராளமாக உள்ளது. சாதி, மதம் போன்ற பிரச்சினைகளை கூர்மைப்படுத்துவதில் பா.ஜ.க., சங் பரிவார அமைப்புகள் உள்ளது. தமிழக அரசுக்கு இந்த கோணத்திலும் சுட்டிக்காட்டி உள்ளோம். சாதிய, மத வாத சக்திகளுக்கு அதிகம் ஊக்கமளிக்கிற இயக்கம் பா.ஜனதா கட்சி. காரைக்குடி அருகே பெரியார் சிலையை அப்புறப்படுத்தியது கண்டிக்கத்தக்கது.திருவாரூரில் கவியரசன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து நாளை மறுநாள் (அதாவது நாளை) ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. தமிழகத்தில் சாதிய வன்கொடுமைகள் அதிகரிப்பதற்கும், சாதிய, மதவாதிகள் கொட்டமடிப்பதற்கும் பா.ஜ.க., சங் பரிவார நடவடிக்கைகள் காரணமாக இருப்பதாக தமிழக அரசுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது.
வேங்கைவயல் வழக்கை சி.பி.சி.ஐ.டி.யினர் தீவிரமாக விசாரித்து உண்மையான குற்றவாளிகள் யாராக இருந்தாலும் கைது செய்ய வேண்டும். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி தான் வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.