இல்லாத மின்சாரத்துக்கு கட்டணம் உயர்த்துவது வேடிக்கையாக உள்ளது; இன்பதுரை பேச்சு


இல்லாத மின்சாரத்துக்கு கட்டணம் உயர்த்துவது வேடிக்கையாக உள்ளது; இன்பதுரை பேச்சு
x

இல்லாத மின்சாரத்துக்கு கட்டணம் உயர்த்துவது வேடிக்கையாக உள்ளது என இன்பதுரை பேசினார்.

திருநெல்வேலி

மின்கட்டண உயர்வை கண்டித்து நெல்லை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நெல்லை சந்திப்பில் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட அ.தி.மு.க. சட்ட ஆலோசனைக்குழு உறுப்பினர் இன்பதுரை பேசியதாவது:-

மின்கட்டண உயர்வை தி.மு.க. அரசு அறிவித்துள்ளது. ராதாபுரம் தொகுதியில் உள்ள கூடங்குளத்தில் இருந்து ஆயிரம் மெகாவாட் மின்சாரம், தொகுதியில் நிறைந்துள்ள காற்றாலைகள் மூலம் ஏராளமான மின்சாரம் தமிழகத்துக்கு உற்பத்தி செய்து அளிக்கப்பட்டு வருகிறது. அந்த ராதாபுரத்திலேயே தற்போது அதிக மின்வெட்டு உள்ளது. தமிழகமெங்கும் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. ஆக இல்லாத மின்சாரத்துக்கு கட்டணம் உயர்த்துவது வேடிக்கையாக உள்ளது.

தி.மு.க. அரசின் மோசமான நிர்வாகத்தால் தற்போது அரசு ஊழியர்களே அ.தி.மு.க. அரசு மீண்டும் எப்போது வரும் என்ற எண்ணத்தில் உள்ளனர். கள்ளக்குறிச்சியில் அநியாயமாக உயிரிழந்த மாணவியின் தாய் கூறுகையில், நீதி கிடைக்காமல் எனது மகளை புதைத்து உள்ளேன் என்கிறார். ஆக நீதியை புதைத்து விட்டார்கள். கள்ளக்குறிச்சி விவகாரத்தில் அதிகாரிகள் மிக சிறப்பாக செயல்பட்டனர் என்று அமைச்சர் எ.வ.வேலு கூறுகிறார். மறுநாளே அதிகாரிகள் பலரை இடமாற்றம் செய்துள்ளனர். இது ஏன்? அ.தி.மு.க. அரசு மீண்டும் அமைவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மீண்டும் அமையாதா? என ஏங்கும் மக்களின் எண்ணம் நிறைவேறும் நேரம் வந்து விட்டது. தி.மு.க. அரசை விரைவில் வீட்டுக்கு அனுப்புவோம்.

இவ்வாறு இன்பதுரை பேசினார்.


Next Story